

குடும்பத்தோடு சென்று பெருங்கூட்டத்தில் ஐக்கியமாகிப் பலரைப் பார்ப்பதில் ஒரு பரம சந்தோஷம் மனதிற்குக் கிடைக்கிறது. செல்லுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல் உடலுக்கு ஊக்கம் ரீசார்ஜ் ஆகிறது. எனவேதான் நம்மூர்களில் கோயில்களில் திருவிழாக்களை நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். உற்றார், உறவினர்களுடன் சேர்ந்து ஆறேழு நாட்களைக் கழித்தாலே மனதுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைப்பதோடு, திருவிழாக் கூட்டத்தில் பலரையும் பார்க்கையில் அது மேலும் கூடுகிறது.
இதுவரை சென்று வந்த ரைடுகளில், கார் ரேசைத் தவிர மற்றவை அனைத்துமே இன்டோர் ரைடுகளே. இப்பொழுது நாம் போவது முழுதாக அவுட்டோர் ரைடு. நீண்டு வளைந்த நீரோடைக்குள் 15-20 பேர் அமரக் கூடிய சிறிய படகில் நாம் ஏறிக்கொள்ள படகு தன் பயணத்தைத் தொடங்குகிறது. இரு கரைகளிலும் அழகிய இயற்கை வளங்களை மேலும் அழகாக்கி நாம் கண்டுகளிக்கச் செய்கிறார்கள். சிறிய நீர் வீழ்ச்சி நம்மீது தீர்த்தமாகத் தன் நீரைத் தெளிக்க, நளினமான வளைவுகளில் நெளிந்து வளைந்து செல்கிறது நம் வாகனம். திடீரென முதலைகள் எதிர்ப்படுகின்றன!
யானைகள் ஓரத்தில் நின்று ஓரக்கண்ணால் நோட்டம் விடுகின்றன! படர்ந்து கிடக்கும் மரக் கிளையிலிருந்து பாம்பொன்று தொங்கிப் பயமுறுத்துகிறது!
என்ன இது? இப்படிக் கொண்டு வந்து சிக்கலில் சிக்க வைத்து விட்டார்களே என்ற பயம் மட்டும் நமக்கு வருவதில்லை. ஏனென்றால் அனைத்தும் டூப்ளிகேட்! (செயற்கை). தொடர்ந்து செல்கையில் குரங்குகள் கூத்தடிக்கின்றன; பறவைகள், தவளைகள் எல்லாம் நம்மைக் காட்சிப் பொருளாகப் பார்க்கின்றன!
நடுநடுவே குழந்தைகளைக் குஷிப்படுத்த, ஆங்காங்கே டிஸ்னி படைத்த 'மவுஸ், டக்' வேடமிட்ட கலைஞர்கள் நிற்கிறார்கள். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள சிறுவர் பட்டாளம் கூடி விடுகிறது. கூட்டம் அதிகமானால் தங்கள் டர்னுக்காக வரிசையில் காத்து நிற்கிறார்கள். பெற்றோர்களும் அவர்களுடன் பொறுமை காக்கிறார்கள். வேடமிட்ட கலைஞர்களும் புன்சிரிப்பு மாறாமல் அனைத்துச் சிறுவர்களிடமும் பேசி, அரவணைத்து புகைப்படம் எடுக்க முழு ஒத்துழைப்பையும் வழங்குகிறார்கள்.
காத்திருப்பு அரங்கில் நம் தாஜ்மஹால் இடம் பெற்றிருக்கிறது. மற்றொரு உள் அரங்கில் பேமிலி பேமிலியாகச் சிறு ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு உள்ளே செல்கிறார்கள். உள்ளே இருட்டாக இருக்க, திடீரென இருபக்கமும் மின்னலடிக்க, நாம் நனையாத அளவுக்கு இருபக்கமும் மழை பெய்கிறது. அதனைத் தாண்டிச் சென்றால் மீண்டும் இருள் சூழ்ந்து கொள்ள, நம்மைப் பயமுறுத்தும் விதமாக பயங்கரச் சப்தங்களும் உருவங்களும் தோன்றுகின்றன. ஹாலோவீன் விழா வருவதை நினைவு கூரும் விதமாக அது அமைந்திருந்தது.
இன்னொரு அவுட் டோர் ரைடில் நடுவிலுள்ள அச்சைச் சுற்றி இருவர் அமரும் சீட்டுகளில் நம்மை ஏற்றிக் கொண்டு, இயக்க ஆரம்பிக்கிறார்கள். நம் இருக்கை சுற்றி வருவதுடன், சுற்றும் போதே மேலும் கீழுமாக ஏறி இறங்கி, வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனாலும் மித வேகத்திலேயே இயங்குவதால் புளி, புளகாங்கிதமாக மாறி விடுகிறது.
இவையெல்லாம் சிறுவர்களுடன் குடும்பத்தாரும் அனுபவிக்கும் மித வேக ரைடுகளே. த்ரில் விரும்பிகளுக்கு வேகமாக இயங்கக் கூடிய ரைடுகளும் உள்ளன.
அதிவேகத்தில் மேடு, பள்ளங்களிலும், வளைவுகளிலும் திடீரெனத் திரும்பி நம்மைத் திரிலின் உச்சத்திற்கே அவை கொண்டு செல்கின்றன. மேஜிக் கிங்டம் காலையிலிருந்து இரவு 11 மணி வரை இயங்குவதால், மின் விளக்குகளின் அலங்காரத்தையும் நம்மால் கண்டுகளிக்க முடிகிறது!
ஒளியைத் தேடியே மனிதன் ஓடிக் கொண்டிருக்கிறான். ’ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!’ என்று அதனாலேயே கவிஞரும் எழுதி வைத்தார். அது மனதுக்கு அளிக்கும் மகிழ்ச்சி அலாதியானதல்லவா?அதனால்தானே நம் கோயில் திருவிழாக்களிலும், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களிலும் அதிக ஒளியை உமிழும் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்கிறோம். இப்பொழுது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் அது எக்ஸ்டண்ட் ஆகி வருவதையும் காண்கிறோமே!
ஏகப்பட்ட ரைடுகளில் சென்று உற்சாகத்தை உள்ளத்தில் ஸ்டாக் செய்து கொண்டாலும், இண்டு இடுக்குகளையும் நிரப்பும் விதமாக பயர் ஒர்க்சும், லேசர் ஷோவும் இடம் பெற்றுள்ளன. இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கும் பயர் ஒர்கஸ் வான்வெளியை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்த, தொடரும் லேசரும் வான்வெளிக்கே வண்ண அழகைக் காணிக்கையாக்குகிறது! விடாமல் வெடித்துச் சிதறும் பட்டாசுகள் மனதின் இறுக்கத்தை வெகுவாகக் குறைத்து விடுகின்றன. அப்பப்பா! பட்டாசுகளில் தான் எத்தனை விதங்கள் வந்து விட்டன!
ஒற்றைக் கோடாய் உயர வானத்திற்குச் சென்று ‘பட்’டென்று வெடித்துக் கீழே திரும்புகையில் பலவாக மாறி அவை படைக்கும் ஆனந்தம் இருக்கிறதே, அதனை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வருவது கடினமே! சில எழிலான உள்ள உணர்வுகள் எழுத்துக்களுக்கு அப்பாற்பட்டவையோ!
வெடித்துச் சிதறியவை உழிழ்ந்த புதுப் புகை மண்டலத்தில், நடனமாடுகின்றன லேசர் கதிர்கள். நடனமும் நாட்டின் கொண்டாட்டங்களின் ஒரு கூறு அல்லவா?
அந்த அரண்மனை வடிவமே அந்தக் கதிர்களில் தன் அழகைக் கூட்டிக் கொள்கிறது.
அதனை அனுபவித்து முடித்ததும் அடுத்து ஒரு 'பேரேட்' வருகிறது. டிஸ்னியின் கதாபாத்திரங்களும், நாம் மேஜிக் கிங்டத்தில் சந்தித்த பல கதாபாத்திரங்களும் அலங்கரிக்கப்பட்ட வண்ணத் தேர் போன்ற வாகனங்களில் பவனி வருகிறார்கள்.
கிங்டத்துக்கு வந்த அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த படியே வருகிறார்கள். அத்துடன் முடிகின்றன அந்த நாளின் நிகழ்ச்சிகள்.
மீண்டும் ஃபெர்ரிகளும் மோனோ ரயில்களும் வெகு சுறுசுறுப்புடன் இயங்கி, பார்வையாளர்களை என்ட்ரன்சுக்கு அழைத்துவர, அங்கு நிற்கும் ட்ராம்கள் அவர்களைப் பார்க்கிங் லாட்டுக்கு அழைத்துச் செல்கின்றன. நாமும் அவ்வாறே வந்து காரில் ஏறினோம்!
நாளைக்கு நாம் எப்காட் (EPCOT) சென்று வருவோமே!
தொடர்ந்து பயணிப்போம்!