டிஸ்னி வேர்ல்டு சுற்றுலா: மேஜிக் கிங்டம் முதல் எப்காட் வரை - பகுதி 3

வால்ட் டிஸ்னியின் கனவு உலகமான ஆர்லண்டோ டிஸ்னி வேர்ல்டுக்கு ஒரு வர்ணனைப் பயணம்.
Disney World Travel
Disney World TravelImage Credit: Walt Disney World
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

இன்றைக்கு நாம் டிஸ்னி லேண்டின் எப்காட் (EPCOT - Experimental Prototype Community Of Tomorrow) வந்து விட்டோம். சுமார் 300 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இது, ஆண்டு முழுவதும் செயல்படும் தீம் பார்க். நடுவிலுள்ள பெரும் ஏரியைச் சுற்றி பல ரைடுகளையும் அமைத்திருக்கிறார்கள். ஏரியின் நடுவே வாண வேடிக்கைக்கான ஓபன் மண்டபத்தையும் அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரும் சூட்டியுள்ளார்கள்.

நாம் உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்பது ‘ஸ்பேஸ்ஷிப் எர்த்’ என்ற உருண்டை அமைப்புதான். எப்காட்டின் பெரும் அடையாளமாக நிற்கும் இது, தூரத்தில் வருவோரையும் கவர்ந்து இழுக்கிறது.

இது ஏதோ பூகோள உருண்டை அமைப்பிலுள்ள வெற்று அமைப்போ என்று எண்ணிச் சென்றால் அதன் உள்ளேயே ஒரு ரைடை அமைத்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். நாம் இருக்கையில் அமர்ந்ததும் மெல்ல மேல் நோக்கிப் பயணிக்கிறது அது. கற்காலத்திலிருந்து தற்காலம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை இரு பக்கமும் பில்ம் மூலம் காட்டி நம்மை ஆரம்பத்திலேயே அகம் மகிழ வைக்கிறார்கள்.

நாம் அமர்ந்திருக்கும் சீட் முன்னே, பின்னே, பக்கவாட்டில் என்று பல பக்கமும் திரும்புகிறது. உச்சி வரை சென்ற நம் சீட், மெல்லப் பின்னோக்கி இறங்குகிறது. கீழிறங்கியதும் உள்ள ஹாலில், பல கம்ப்யூடர் கேம்ஸ் உள்ளன. சிறுவர்கள் அவற்றில் விளையாடி மகிழ்கிறார்கள்.

காரோட்டலாம்; கணினி கேள்விகளுக்குப் பதிலளித்து மகிழலாம்; நம் நினைவாற்றலை நாமே டெஸ்ட் செய்து கொள்ளலாம்; இது போன்ற இன்னும் பல உள்ளன.

அடுத்த ரைடில் இருண்ட குகை போன்ற அமைப்புக்குள் நம் வாகனம் செல்ல, அழகழகான டிசைன்களும், நளினம் மிகுந்த பெண்கள் நடத்தும் கச்சேரி அமைப்புகளும் அனைவரையும் ஈர்க்கின்றன. நாம் ஒரு தனி உலகத்தில் சஞ்சரிப்பதைப் போன்ற எண்ண ஓட்டத்தை அவை ஏற்படுத்துகின்றன.

Disney World Travel
Disney World Travel

இந்த ரைடில் இன்டோர், அவுட் டோர் ஆகிய இரண்டையும் இணைத்து, நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள். இது சற்றே நீண்டதுங்கூட. அவுட்டோரில் செல்கையில் அக்ரிகல்சர் அதாவது வேளாண்மை சம்பந்தப்பட்ட அனைத்தையும் ரியலாகவே செய்து வைத்துள்ளார்கள். நாம் தக்காளியைச் செடிகளாகத்தான் பார்த்திருக்கிறோம். சில இடங்களில் சற்றே படர்ந்து அடர்த்தியாக இருப்பதையும் கண்டுள்ளோம். ஆனால் இங்கு தக்காளியை மரமாகவே வளர்த்து, தக்காளி மரம் (Tomato Tree) என்றே பலகையும் வைத்துள்ளார்கள்.

இன்னொரு ரைடு! நாம் பார்த்தவற்றில் மனதில் அதிகமாகப் பதிந்தது. நீண்ட ப்ரேமில் பத்துப் பதினைந்து இருக்கைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒருவர் அமர, விமானத்தில் உள்ளது போன்று பெல்டால் இருக்கையுடன் சேர்த்து இணைத்துக் கொள்ள வேண்டும். விளக்குகள் அணைக்கப்பட்டு, நமது இருக்கைகள் மேல் நோக்கிச் செல்ல, நமது முன்னால் உயரமான கட்டிடங்கள் தோன்றுகின்றன. திறந்த விமானத்தில் பறப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தி, நமது கண் முன்னே இயற்கையை விரித்துப் போடுகிறார்கள்.

உயரத்திலிருந்து மலைகளையும், சோலைகளையும் காணும் நாம், திடீரெனக் கீழிறங்கி கடற்கரைக்கு வருகிறோம்.

பின்னர் பள்ளத்தாக்கின் அருகில் வருகிறோம். அதனைத் தொடர்ந்து நயாகரா நீர் வீழ்ச்சியைக் கண்குளிரக் கண்டு களிக்கிறோம். சற்று நேரத்தில் பச்சைப் பசேலென்று பரந்து கிடக்கும் புல்வெளிக்குப் போகிறோம். தொடர்ந்து விமானத்திலிருந்து கீழே பார்க்கும் விதமான உயரத்திற்குச் சென்று விடுகிறோம். இவ்வளவுக்கும் நாம் அமர்ந்திருக்கும் சீட் மேலெழும்பி அங்கேயேதான் உயரத்தில் நிற்கிறது. விஞ்ஞானம் வியத்தகு முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது! அமர்ந்திருக்கும் இடத்திற்கே அகிலத்தைக் கொண்டு வரும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது. ஆனாலும் அதனை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோமா என்பதே பெரும் கேள்விக்குறி. நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தினால் இப்பூவுலகே சொர்க்கமாகும்!

நடுவில் சிறுவர்களை மேலும் மகிழ்விக்க சிறு பூங்காக்களும் உண்டு. அப்படி ஒரு பூங்காவில் சிறுவர் ரயில்கள் இரண்டு மூன்றை ஓட விட்டிருக்கிறார்கள். ரயில்கள் தடம் புரள்வதையும் (Derail) தத்ரூபமாகக் காட்டியுள்ளார்கள்!

ஏரியில் ஃபெர்ரி சர்வீசும் உண்டு. வெயிலுக்கு இதமாய் நீரில் சுற்றி வர விரும்புபவர்கள், அதில் ஆசை தீரச் சுற்றி வரலாம்.

இருக்கின்ற அத்தனை ரைடுகளிலும் சென்று வர ஓரிரண்டு நாட்கள் போதா. ஆனால் மனிதர்களாகிய நம்மிடம் ஒரு வழக்கம் உண்டு. நமக்கு எது பிடிக்குமோ அதற்கே நாம் முக்கியத்துவம் கொடுப்போம். மற்றவற்றைப் பற்றி அதிகமாகக் கண்டு கொள்ளமாட்டோம். இந்த மனவியலை அடிப்படையாகக் கொண்டே பிசினஸ் பீப்பிள் காசு பார்த்து விடுகிறார்கள். இதற்கு இந்த நாடு. அந்த நாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லா நாட்டிலும் பிசினஸ் பிசினஸே!

சரி! மீதமுள்ள ரைடுகளை அடுத்ததில் பார்ப்போம்!

தொடர்ந்து பயணிப்போம்!