

என்னதான் பிசினஸ் என்றாலும் அதிலும் ஒரு நேர்மை வேண்டுமென்பதில் டிஸ்னி வேர்ல்ட் நிர்வாகத்தினர் குறியாகவே இருக்கிறார்கள். நாங்கள் உட் செல்கையில் எங்கள் கார்டு உடனடியாக ரீட் ஆகவில்லை. ஒரு கம்யூனிகேஷன் கேப் (Communication Gap) காரணமாகத் தாமதம் ஏற்பட்டு விட்டது. அதனைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அவர்கள், தாமதத்தை ஈடு செய்யும் விதமாக, அதிகக் கூட்டமுள்ள ரைடில் தாமதிக்காமல் செல்ல லைட்னிங் (Lightning way) பாஸ் வழங்கினார்கள்.
எல்லா ரைடுகளுக்கும் லைட்னிங், ஸ்டாண்டர்டு என்று இரு வழிகள் உள்ளன. அத்தோடு வெயிட்டிங் டைம் எவ்வளவு என்பதையும் நாம் க்யூவில் நுழையும் இடத்திலேயே போர்டில் காட்டுகிறார்கள். உலகின் வளர்ந்த நாடுகள் வரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், பொறுமையையும், நிதானத்தையும் அனைவருமே கடைப் பிடிக்கிறார்கள். அடித்துப் பிடித்து ஓடுவதோ, அடுத்தவரை முந்துவதோ எல்லாம் இங்கில்லை!
ஏரியைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் அரங்குகளும், அந்தந்த நாட்டின் முக்கிய உணவுகளைத் தயாரித்து வழங்கும் ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. அங்கு பணியிலிருப்போர் கூட அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தாய் நாட்டையும், தாய் நாட்டு உணவு வகைகளையும் தாய் நாட்டு மக்களே பரிமாறிச் சாப்பிடுவதில் ஓர் அலாதி திருப்தி உள்ளதென்பதை உணர்த்தும் விதமாக இந்தச் செயல் அமைந்துள்ளது!
இந்தியா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கிரீஸ், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள் பட்டியலில் அடக்கம். இங்கு ஆகஸ்ட் 27 தொடங்கி நவம்பர் 21 வரை ‘உணவு மற்றும் ஒயின் திருவிழா’ (Food & Wine Festival) நடைபெறுகிறது. அதனைக் கருத்தில் கொண்டும் உணவகங்கள் வகை வகையாகச் சமைத்து அசத்துகின்றன.
சீனாவின் உணவகங்களின் நடுவில் பார்வையாளர்களைக் கவரும் விதமாக ஒரு தியேட்டர் அமைத்துள்ளார்கள். வட்ட வடிவமான அந்தத் திரையரங்கில் நடுவில் நின்று கொண்டும், நின்றபடி சாய்ந்து கொண்டும் பார்க்கும் அமைப்பு உள்ளது. விசேஷம் என்னவென்றால் சுற்றிலும் (360 டிகிரி) மிகவும் பெரிய அளவிலான திரைகள் உள்ளன.
நீண்ட, நெடிய சீனச் சுவரையும், அங்குள்ள நகரங்கள், ட்ரகானை முன்னிலைப்படுத்தும் திருவிழாக்கள் போன்றவற்றையும் திரையிடுகிறார்கள். நம்மைச் சுற்றிலும் படம் ஓடுகிறது. ஏதோ நாம் நேரிலேயே அவற்றைக் காண்பதைப் போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
அதைப் போலவே கனடா நாட்டின் அரங்கிலும் வட்டத் திரையரங்கு அமைத்துள்ளார்கள். அவர்கள் நாட்டின் சிறப்பான நகரங்களையும், பனிச் சறுக்கு விளையாட்டுக்கள் நடைபெறும் இடங்களையும், வளமான பசுமை நிறைந்த இடங்களையும் கண்கள் குளிரக் காட்டுகிறார்கள்.
இனி உலகில் இதுபோன்ற 360 டிகிரி திரைகள் வர வாயப்புகள் உள்ளன.
மேஜிக் கிங்டம் போல் இது இரவு 11 மணிவரை செயல்படுவதில்லை. ஒன்பது மணி வரையிலுமே இது திறந்திருக்கிறது. சரியாக ஒன்பது மணிக்கு ஏரியின் நடுவில் பயர் ஒர்க்ஸ் ஆரம்பமாகி விடுகிறது. சுமார் 15-20 நிமிடங்களுக்கு நிறுத்தாமல் வாண வேடிக்கையைத் தொடர்கிறார்கள். லேசர் கதிர்களும் உண்டு.
நான் சிறுவனாக இருந்த போது எனது கடைசி சித்தப்பா ‘காசைக் கரியாக்காமல் வெடி வாங்கிக் கொளுத்துங்கள்’ என்பார். வெடி கொளுத்தினாலும் இறுதியில் மிஞ்சுவது கரிதான் என்பதைச் சூசகமாக அப்படிக் கூறுவார்.
ஆனால் வெடி சாம்பலாகிப் போவதற்கு முன்னால், தன் ஒளி வெள்ளத்தால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சிக் கடலைப் பொங்கச் செய்கிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது. விதம் விதமான வெடிகள் கண நேரத்தில் ஏரி நீரில் தங்கள் முகம் பார்த்து மறைகின்றன. பெரிய ஏரி என்பதாலும், அதனைச் சுற்றி எங்கு வேண்டுமானாலும் நின்றோ, அமர்ந்தோ இதனைக் காணலாம் என்பதாலும், அதிக நெருக்கம் இன்றி ஆங்காங்கே இருந்தபடி இந்த வெடி வேடிக்கையைக் கண்டு களிக்க முடிகிறது.
நம் நாட்டில் இது போன்ற பொழுது போக்கும் தீம் பார்க்குகள் இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கின்றன. இவை மேலும் பெருகினால் நமது மக்களும் வாழ்க்கையை எஞ்சாய் செய்ய வழியேற்படும். மேலை நாடுகளின் மிகப் பெரிய வரப் பிரசாதம் நாம் நினைத்த நேரத்தில் இயற்கை உபாதைகளைக் கழிக்க உள்ள வசதிகள்தான். எங்கள் பழைய தஞ்சை மாவட்டத்தில் ‘தடுக்கி விழுந்தால் நீர் நிலைகள்’ என்பார்கள். அதிக அளவில் குளங்களும் குட்டைகளும் உண்டு என்பதைத்தான் அப்படிச் சொல்வார்கள். இங்கும் தடுக்கி விழுந்தால் ரெஸ்ட் ரூம்களையும், குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
நமது நாட்டில் இன்னமும் பெண்கள் போதுமான ரெஸ்ட்ரூம்கள் இன்றி அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள், கைக் குழந்தையுடன் வெளியில் சென்றால் படும் அவதி கொஞ்சமல்ல. இப்பொழுதுதான் பாலூட்டவென்று தனி அறைகளைச் சில பொதுவிடங்களில் காண முடிகிறது.
வளர்ந்த நாடு என்றால் அன்டர்ஸ்டேன்டிங் உள்ள மக்கள்தான் ஆணி வேர். பொது விடங்களில் இங்குள்ளவர்கள் மனதுக்கு இதமளிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். செல்லில் போட்டோ எடுப்பது தெரிந்தால், நமக்கு இடைஞ்சல் ஏற்படாமல் அப்படியே நின்று விடுகிறார்கள். குடும்பத்துடன் நாம் நின்று போட்டோ எடுக்கலாமா என்று யோசிக்கும் போதே, ’நான் எடுக்கிறேன்! நில்லுங்கள்!’ என்று உதவிக்கரம் நீட்டுகிறார்கள். ’நான்தான் முந்தி’ என்ற நமது மனப்பான்மைக்கு எதிராக, ‘நீயே முந்தி’ என்று விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தைப் பெரும்பாலானோரிடம் காண முடிகிறது.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. கூட்டமாகப் போய்க் கொண்டிருந்த போது ஒருவர் வந்து "ஹலோ! வி ஆர் சைலிங் ஆன் த சேம் போட்!யு நோ ஹௌ?" என்றார். நான் பதில் சொல்வதற்குள் அவரே முந்திக் கொண்டு சொன்னார். "சீ த க்ரவுட்! யூ அன்ட் மீ அலோன் வேரிங் புல் பேண்ட்ஸ். அதர்ஸ் வேரிங் ஹால்ப் பேண்ட் ஒன்லி!"
உண்மைதான்! பெரும்பாலானவர்கள் டிராயரும், டி ஷர்ட்டுமே அணிகிறார்கள். பேண்ட், ஷர்ட் குறைந்து கொண்டே வருகிறது. நமது திருப்பூர் அன்பர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படலாம்.
சரி! அன்பர்களே! பின்னர் சந்திப்போம்! பை!