

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாலிதானா (Palitana) நகரம். இங்கு ஒரே மலையில் 900க்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பது சிறப்பாகும். சமண மதத்தின் தலமாக இருக்கும் இந்த இடம் சைவ நகரமாக, அசைவ உணவுகளுக்கு தடைவிதிக்கும் ஒரு இந்திய நகரமாக விளங்குகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்நகரம் 100% சைவ நகரமாக மாறியது. அதற்குக் காரணம் 200 ஜைனத்துறவிகள் 250 இறைச்சிக் கடைகளை தடைசெய்து, நகரத்தை சைவ நகரமாக மாற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புனித சத்ருஞ்சய மலை:
சத்ருஞ்சய மலையில் 900க்கும் மேற்பட்ட சமணக் கோயில்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற முக்கிய புனித யாத்திரை தலமாகும். 3000-க்கும் மேற்பட்ட படிகளைக் கடந்து மலை உச்சியை அடைய வேண்டும். இங்குள்ள ஆயிரக்கணக்கான கோயில்கள் அற்புதமான கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாகும்.
பாலிதானா, ஸ்வேதாம்பர சமணர்களின் மிக முக்கிய யாத்திரை தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவில்கள் 900 ஆண்டுகால பழமையான மற்றும் புனிதமான வரலாற்றைக் கொண்டுள்ளன. அசைவ உணவுகள் மற்றும் விலங்குகளைக் கொல்வதற்கு சட்டபூர்வமாகத் தடை விதிக்கப்பட்ட, முழுமையான சைவ நகரமாக திகழ்கிறது.
ஜெயின் சமூக மக்கள் அதிகமாக வசித்து வரும் பாலிதானாவில் 25% சிறுபான்மையினரும் இருக்கின்றனர். இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மகாவீர் கோவிலும் அமைந்துள்ளது.
சமணக் கட்டிடக்கலையின் மணிமகுடமான ஆதிநாத் கோவில்:
சத்ருஞ்ஜய மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிநாத் கோவில் நூற்றுக்கணக்கான பாலிதானா கோயில்களில் முதன்மையான தலமாகும். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பலமுறை புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் பளிங்கு கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு தலைசிறந்த படைப்பாகும்.
புனித மலையின் அடிவாரம் தலேட்டி:
சத்ருஞ்ஜய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தலேட்டி புனித யாத்திரையின் தொடக்கப்புள்ளியாக விளங்குகிறது. இங்கு ஆதீஸ்வரர் கோவில், ராம்குண்ட் மற்றும் சீதல்சயா போன்ற கோவில்கள் அமைந்துள்ளன.
கங்கா தேரி:
பளிங்கு கற்கள் நிறைந்த பாலிதானா சுற்றுலாத் தலங்களைப் போல் இல்லாமல் கங்கா தேரி கோதிக் பாணியில் கட்டப்பட்ட சிறிய, ஆனால் மிகவும் அழகான கட்டிடமாகும். வளைவு நுழைவாயில், குவிமாட விதானம் கொண்டு தனித்து நிற்கிறது. கங்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில் தலேட்டி பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
சௌமுக் கோயில்:
மலை உச்சியில் உள்ள கோவில்களில் சௌமுக் எனப்படும் நான்கு முகக் கோவில் உலகளாவிய தரிசனத்தின் சின்னமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு நான்கு நுழைவாயில்களும், வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு நான்கு ஆதிநாதப் பெருமானின் சிலைகளும் உள்ளன.
ஸ்ரீ விஷால் ஜைன அருங்காட்சியகம்:
தலேட்டிக்கு அருகில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் சமண நூல்கள், ஓவியங்கள், பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள புகழ்பெற்ற சமணக் கோயில்களின் மாதிரிகளை காட்சிப்படுத்துகிறது.
சமவாசரன் கோவில்:
அருங்காட்சியகத்திற்கு அருகில் உள்ள சமவாசரன் கோவில், ஒரு தீர்த்தங்கரர் ஞானமடைந்த பிறகு உருவாக்கப்படும் தெய்வீக உபதேச மண்டபத்தின் கட்டடக்கலைப் பிரதியாக விளங்குகிறது. இதன் நுணுக்கமான வடிவமைப்பு, அமைதியான சூழல் போன்றவை இந்த இடத்தை தனித்துவமான இடமாக ஆக்குகின்றது.
செல்ல சிறந்த நேரம்:
அக்டோபர் முதல் மார்ச் வரை செல்வதற்கு ஏற்ற காலமாகும். காரணம் அந்த காலங்களில் கோவில் படி ஏறுவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் காலநிலை ஏற்றதாக இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை அதிக வெப்பம் காரணமாக செங்குத்தான மலையேற்றம் கடினமாகிவிடும்.
எப்படிச் செல்வது?
பாலிதானாவிற்கு ரயில், பேருந்து, விமானம் போன்ற எந்த போக்குவரத்தையும் தேர்வு செய்யலாம். பாவ் நகர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலிதானாவை அடையலாம். அருகில் உள்ள விமான நிலையம் அகமதாபாத் அல்லது பாவ் நகர்.