வரலாற்றை நேசிப்பவர்களுக்கான சொர்க்கம்... மகாராஷ்டிரா போனா இதையெல்லாம் கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க!

explore-dapoli-maharashtra
explore-dapoli-maharashtra
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் என்றாலே மும்பை மற்றும் புனே போன்ற இடங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால், கொங்கன் கடற்கரை ஓரமாக இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அற்புதமான இடம் இருக்கிறது. அதுதான் டபோலி (Dapoli). இதனை பலரும் மினி மகாபலேஷ்வர் என்று அன்போடு அழைக்கிறார்கள். இங்கு வெறும் அழகிய கடற்கரைகள் மட்டும் கிடையாது, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில்களும் வரலாற்றை பறைசாற்றும் பிரம்மாண்டமான கோட்டைகளும் நிறைந்துள்ளன. 

நகரத்தின் சத்தங்களில் இருந்து தப்பித்து ஒரு அமைதியான வரலாற்றுப் பயணம் செல்ல நினைப்பவர்களுக்கு டபோலி ஒரு மிகச்சிறந்த இடம். அங்கு என்னென்ன ஆச்சரியங்கள் ஒளிந்திருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

ஆன்மீக தலங்கள்!

டபோலியை சுற்றியுள்ள பகுதிகளில் பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக அஞ்சர்லே (Anjarle) கிராமத்தில் உள்ள கத்யாவர்ச்சா கணபதி கோவில் (Kadyavarcha Ganpati Temple) மலையின் உச்சியில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இங்கிருந்து பார்த்தால் கடலின் அழகும் சுற்றியுள்ள அடர்ந்த மரங்களின் பசுமையும் மனதை அப்படியே கொள்ளையடிக்கும். 

அதேபோல அசுத் (Asud) என்ற கிராமத்தில் இருக்கும் கேசவராஜ் கோவில் (Keshavraj Temple) அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைதியாக வீற்றிருக்கிறது. ஒரு சிறிய நீரோடையை கடந்து மரங்களின் நிழலில் நடந்து சென்று இந்த கோவிலை அடைவதே ஒரு தியானம் செய்வது போன்ற அற்புதமான உணர்வை நமக்குத் தரும். இங்குள்ள வியாக்ரேஷ்வர் சிவன் கோவில் (Vyaghreshwar Temple) அதன் பழமையான கட்டிடக்கலை மற்றும் அமைதிக்காக பெரும் பெயர் பெற்றது.

இதையும் படியுங்கள்:
புதிய வரலாற்று சாதனை! - முதல் முறையாக ஆண்களை முந்திய பெண் வாக்காளர்கள்!
explore-dapoli-maharashtra

வரலாற்று கோட்டைகள்!

கோவில்களை தரிசித்து முடித்த பிறகு நமது அடுத்த இலக்கு கோட்டைகளை நோக்கியதாக இருக்க வேண்டும். மராட்டிய பேரரசின் மாபெரும் கடற்படை வலிமையை உலகிற்கு காட்டும் சுவர்ணதுர்க் கோட்டை (Suvarnadurg Fort) இங்குதான் உள்ளது. கடலுக்கு நடுவே ஒரு குட்டி தீவு போல அமைந்திருக்கும் இந்த பிரம்மாண்ட கோட்டையை படகில் சென்று பார்ப்பது ஒரு செம அட்வென்ச்சர் ஆக இருக்கும். 

சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் கட்டப்பட்ட இந்த கோட்டை அன்று கடல் வழியே வரும் எதிரிகளை தடுக்கும் முக்கிய அரணாக இருந்தது. இதன் அருகிலேயே நிலப்பகுதியில் கனகதுர்க் கோட்டை (Kanakdurg Fort) உள்ளது. இந்த கோட்டையின் உச்சியில் ஏறி அரபிக்கடலின் அழகிய அலைகளை ரசிப்பது ஒரு அலாதியான அனுபவம். மாலை நேரத்தில் இங்கு வீசும் குளிர்ந்த கடல் காற்றும் சூரியன் மறையும் அந்த செக்கச்சிவந்த காட்சியும் உங்களை வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்றுவிடும். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் வலிமையானவரா? இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருக்கிறதா பாருங்கள்! 
explore-dapoli-maharashtra

நீங்கள் வரலாற்றையும் இயற்கையையும் ஒரே நேரத்தில் ரசிப்பவராக இருந்தால் உங்களுடைய அடுத்த ட்ரிப் நிச்சயம் இந்த டபோலியாகத்தான் இருக்க வேண்டும். உடனே உங்கள் நெருங்கிய நண்பர்களையோ அல்லது குடும்பத்தினரையோ அழைத்துக்கொண்டு இந்த அழகிய வரலாற்று நகரத்திற்கு ஒரு சூப்பர் ட்ரிப் பிளான் பண்ணுங்க.

logo
Kalki Online
kalkionline.com