மகாபாரதப் போரில் கௌரவர்களை வதம் செய்த தோஷத்திற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டி வந்த பாண்டவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான் காளை வடிவம் எடுத்து இமயமலை கர்வால் பகுதியில் ஒளிந்து கொண்டார். ஆனால் பாண்டவர்களும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தனர். அவர்கள் கேதார்நாத்திற்கு அவரை பின்தொடர்ந்தனர். சிவபெருமான் அவர்களது உறுதியைக் கண்டு மகிழ்ந்து அவர்களுக்கு காட்சியளித்தார்.
பஞ்ச கேதாரத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் ஈசன் தோன்றினார். சிவபெருமானின் கரங்கள் துங்கநாத்திலும், வாய் ருத்ரநாத்திலும், வயிற்றுப் பகுதி மத் மகேஷ்வரிலும், ஜடாமுடி கல்பேஸ்வரிலும், கேதார்நாத்தில் முதுகுப் பகுதியும் சேர்த்து "பஞ்ச கேதார்" என்று அழைக்கப் படுகிறது.
அவரது உடலின் ஒவ்வொரு பகுதியுடன் தொடர்புடைய இடங்களே இந்த பஞ்ச கேதாராகும்.
1) கேதார்நாத் கோவில்:
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலை தொடரில் அமைந்துள்ளது. இக்கோவிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னும் இடத்திலிருந்து 14 கிலோமீட்டர் மலை ஏறியே கோவிலுக்கு செல்ல முடியும். ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. இது சம்பந்தராலும், சுந்தரராலும் தேவார பாடல் பெற்ற தலமாகும்.
இது எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சிவலிங்கம் காளையின் முதுகுப் பகுதி கூம்பு வடிவில் காணப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 3583 மீட்டர் உயரத்தில் உள்ளது.
2) துங்கநாத் கோவில்
(உலகின் மிக உயரமான சிவன் கோவில்):
பஞ்ச கேதார் தலங்களில் ஒன்றான துங்கநாத் சிவன் கோவில் கடல் மட்டத்திலிருந்து 3680 மீட்டர் (12,073 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் உள்ள இந்த சிவன் கோவில் பஞ்ச கேதார ஸ்தலங்களிலும் மிகவும் உயரமான இடத்தில் அமைந்த சிவன் கோவிலாகும். துங்கநாத் என்பதற்கு "கொடுமுடிகளின் நாதர்" எனப் பொருள். 5000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. காளையின் கரங்கள் வெளிப்பட்ட இடமாகும்.
3) மத் மகேஷ்வர் ஆலயம்:
மத் மகேஸ்வர் ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3497 மீட்டர்(11,473 அடி) உயரத்தில் அமைந்துள்ள பஞ்ச கேதார ஸ்தலங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. ருத்ரபிரயாக் மாவட்டத்தின் மன்சூனா கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் நந்தி சிவபெருமானாக காட்சியளிப் பதாகவும், காளையின் நடுப்பகுதி மற்றும் தொப்புள் பகுதி விழுந்த இடமாக கூறப்படுகிறது. கோவிலில் கருங்கல்லால் ஆன சிவலிங்கம் தனித்தன்மை வாய்ந்த தொப்புள் வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலிது. சௌகந்தா, நீலகண்டம் மற்றும் கேதார்நாத் மலைகளின் பனி சிகரங்களால் சூழப்பட்டுள்ளது.
4) கல்பேஸ்வரர் கோவில்:
உத்தரகண்ட் மாநிலத்தில் கர்வால் பகுதியில் உள்ள ஊர்காம் பள்ளத்தாக்கில் 2,200 மீட்டர் (7,217 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பஞ்ச கேதார தலங்களில் இது ஐந்தாவது ஆலயம். காளையின் ஜடாமுடி கல்பேஷ்வரில் விழுந்த இடமாக கூறப்படுகிறது. இங்குள்ள கோவில் பூசாரிகள் ஆதிசங்கரரின் சீடர்களான தஸ்னாமிகள் மற்றும் கோசைன்களாகும். இது பயணிக்க எளிதான மலையேற்றமாகும்.
5) ருத்ரநாத் கோவில்:
ருத்ரநாத் கோவில் கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோவில் இயற்கையான பாறைகளால் உருவானது. இங்குதான் காளையின் முகம் தோன்றியதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூலவரை நீலகண்ட மகாதேவர் என்பர். அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் பஞ்சார கேதார தலங்களில் மூன்றாவது ஆகும். இந்த ஆலயத்தை அடைவது மிகவும் கடினமானதாகும். சூரிய குண்ட், சந்திர குண்ட், தாரா குண்ட் மற்றும் மன குண்ட் ஆகியவை கோவிலை சுற்றி உள்ள சில புனித குளங்களாகும்.
பஞ்ச கேதார் யாத்ராவின் புனித யாத்திரை செல்வதற்கு சிறந்த மாதங்கள் மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். இவை அனைத்தும் கோடையில் ஆறு மாதங்களுக்கு தரிசனத்திற்காக திறந்திருக்கும். கல்பேஸ்வர் தாம் என்னும் ஆலயம் மட்டும் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். இந்த ஐந்து கேதாரத் தலங்களையும் ஒரு சேர தரிசிக்க 15 நாட்களாகும். பயணம் தொடங்குவதற்கு முன் நம் உடல் தகுதியுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு செல்வது நல்லது.