ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் பாபநாசம் அகத்தியர் அருவி!

Agasthiyar waterfall
Agasthiyar waterfall

கோடை விடுமறையில் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், மனச் சோர்வை நீக்கவும் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்குச் செல்கின்றனர். அவ்வகையில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அகத்தியர் அருவி சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும். அல்வாவிற்கு பெயர் போன இந்த குளிர்ச்சியான சுற்றுலாத்தலம் வருடந்தோறும் சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. கோடையில் எவ்வளவு தொலைவு என்றாலும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளைத் தேடித் தான் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். அவர்களுக்கு எல்லாம் வரப்பிரசாதமாக விளங்குகிறது பாபநாசம் அகத்தியர் அருவி.

தமிழ்நாட்டில் அருவி என்று சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றால அருவி தான். இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும். அவ்வரிசையில் பாபநாசம் அகத்தியர் அருவிக்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல அருவிகள் உள்ளன. இருப்பினும் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருவியாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவி விளங்குகிறது. இந்த அருவிக்கு சேர்வலாறு மற்றும் காரையார் நீர்த் தேக்கங்களில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25 அடி உயரத்தில் இருந்து விழுகிறது அகத்தியர் அருவி.

அகத்தியர் அருவியில் நாள் தவறாமல் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. மேலும், ஆன்மீகத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். அதிலும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். குற்றால அருவியில் இருந்து அகத்தியர் அருவி மிகவும் அருகிலேயே இருப்பதால், குற்றாலத்தில் நீர்வரத்து குறையும் நேரத்திலும் மற்றும் நீர்வரத்து அதிகரித்து அனுமதி மறுக்கப்படும் நேரத்திலும் சுற்றுலா பயணிகள் உடனே அகத்தியர் அருவிக்கு வந்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு ஏற்ற 3 நீர்வீழ்ச்சிகள்: புத்தூருக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க!
Agasthiyar waterfall

சுற்றுலா பயணிகள் அருவியில் குடும்பத்தோடு குழந்தைகளுடன் சேர்ந்து, குளித்து மகிழ்வார்கள். தற்போது கோடை கால வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆனந்தமாக குளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால், அகத்தியர் அருவிக்கு செல்கின்ற பயணிகளை வனத் துறையினர் சோதனைச் சாவடியில் சோதனை செய்த பின்னரே அனுமதிப்பார்கள். இங்கு பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களுக்கு அனுமதியில்லை என்பதால், சுற்றுலா பயணிகள் இவற்றை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மீறி எடுத்துச் சென்றால் வனத் துறையினர் பறிமுதல் செய்து விடுவார்கள். அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் சோப்பு மற்றும் ஷாம்பு போட்டு குளித்தால், சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதால், இவற்றைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அகத்தியர் அருவி, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று குளித்து விட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com