பரவசமூட்டும் கங்ரோலி துவாரகா கோவில்!

துவாரகை கோவில்...
துவாரகை கோவில்...

தய்பூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் இந்தக்கோவில் அமைந்துள்ளது. துவாரகை என்றால் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள்.

அதிகாலை நல்ல குளிரில் பயணம் செய்வது நல்ல சுகானுபவம் தான். பனிக்காற்றில் அதனிடையே சூரியனின் கதிர்கள் பாயும் போது அனைத்து பொருட்களுமே பொன்மயமாக ஜொலிக்கின்றது. ஸ்ரீநாத்திலிருந்து கங்ரோலிக்கு பயணம் செய்தோம். துவாரகாதீஸ்வரின் அரண்மனை (ஹவேலி) என்று அழைக்கப்படும் கங்ரோலி ஆலயம் ராஜ்சமந்த் என்ற ஒரு ஏரியின் பிரம்மாண்டமான கரையில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் குழந்தை துவாரகாதீசன் கோயில் கொண்டுள்ளதால் "கங்ரோலி துவாரகை" என்று அழைக்கப்படுகிறது. புஷ்டி மார்க்கத்தின் மூன்றாவது பீடம் இத்தலம். புஷ்டி மார்க்கம் என்பது வல்லபாச்சாரியாரின் சம்பிரதாயப்படி பூஜைகள் நடைபெறுகிறது. இத்தலத்தில் வல்லபாச்சாரியாரின் பேரன் பாலகிருஷ்ணன்ஜி பூஜை செய்து வந்தாராம்.

ஸ்ரீ நாத்ஜி கோவர்த்தனகிரியிலிருந்து வந்தது போல் துவாரகாதீஷ் மதுராவிலிருந்து 1671 வருடம் மஹாராணா சிங் காலத்தில் இங்கு வந்தாராம். பின்னர் 1676 இல் ராஜ்சமந்த் ஏரியை உருவாக்கிய சமயம் அரசர் இக்கோவிலையும் அதன் கரையில் அமைத்தார்.

கோவிலுக்கு 21 படிகள் ஏறி செல்ல வேண்டும். ஆலயம் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் பிரம்மாண்டமாக பல வண்ண ராஜஸ்தானத்து ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

கங்ரோலி ஆலயத்தில் கட்டுரையாசிரியர்...
கங்ரோலி ஆலயத்தில் கட்டுரையாசிரியர்...

இத்தலத்தில் பெருமாள் நான்கு கைகளிலும் கதை, சங்கு,சக்கரம், பத்மம் ஏந்தி நின்ற கோலத்தில் சதுர்புஜதாரியாக காட்சி தருகிறார். இத்தலத்தில் பலராமர், கிரிதரர் சன்னிதிகளும் உள்ளன. இவ்வாலயத்தில் நிறைய பசு மாடுகளை பராமரிக்கிறார்கள். அவற்றின் பாலைக் கொண்டுதான் அபிஷேகம், நைவேத்தியத்திற்கான பலகாரங்கள் செய்கிறார்கள்.

துவாரகாபுரிவாசனை தரிசித்து விட்டு ராஜ்சமந்த் என்ற பெரிய ஏரியையும் அதன் அழகையும் கண்டு களிக்கலாம்.

இந்தக் கோவிலில் அடிக்கடி நடை சாற்றி சுவாமிக்கு அலங்காரங்கள், நிவேதனங்கள் நடைபெறும். எனவே நாம் காத்திருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிலர் மட்டும் எப்படி தனிமையை ரசிக்கிறார்கள் தெரியுமா? 
துவாரகை கோவில்...

சதுர்புஜதாரியாக விளங்கும் விஷ்ணுவை தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் யோகிகளால் அடைய முடியாத விஷ்ணு பதம் என்ற வைகுண்ட பதத்தை அடைய முடியும் என்பது ஐதீகம். 

இங்கு ஆரத்தி மிகவும் விசேஷம். ஆரத்தியின்போது அனைவரும் கைத்தட்டி ஜெயகோஷம் எழுப்பி கிரிதர்நாத்கீ ஜெய்! துவாரகாநாத்கீ ஜெய்! என்று ஆர்ப்பரிப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com