
உண்மையான காதலுக்கு வலியும், ஆழமும் அதிகமாம். இல்லையென்றால், மாவீரன் நெப்போலியனையே மண் கவ்வ வைத்த, இளைஞன் டியூக் வெலிங்டன் பிரபு, தன் காதலி காதரினுக்கு எழுதிய காதல் கடிதத்தில், இப்படி எழுதியிருப்பானா?
"நான் நேசித்ததும் உன்னையல்ல...
மணக்கப் போவதும் உன்னையல்ல...
உன் உள்ளத்தை..."
உலகமே எதிர்த்தாலும் காதல் எப்போதும் அழியாதது. காதலின் புகழ் பாடுவதற்கென்றே ஒரு நகரம் ஒளிரத் தொடங்கியது என்றால், நம்புவீர்களா?
பிரான்சின் தலைநகர் பாரிஸ். உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். எனவே, 'காதல் நகரம்' என்று போற்றப்படுகிறது.
பாரிஸின் அழகையும், ஈபிள் கோபுரம் கீழ் நின்று ஒரு செல்பி எடுத்தும், சீன் நதியில் படகில் சாய்ந்த வண்ணம் மிதந்து சென்றும், அன்பின் சுவர்களை கண்டு ரசித்தும் வருவோமா...
பாரிஸின் அழகும், காதல் சார்ந்த சூழலும், பலரின் கனவு நகரமாகவும் விளங்குகிறது.
பாரிஸ் ஏன் காதல் நகரம்?
அன்பர்கள் தங்கள் அழியாத பாசத்தை வெளிப்படுத்தவே இங்கு வருகிறார்கள். பாரிஸ் மகிழ்சியை காணும் இடங்களாக மட்டுமல்ல, கறைபடாத வரலாறும் கொண்டு மிளிரும் நகரமாகும்.
பாரிஸில், சூரியன் உதிக்கும் போது சீன் நதிக்கரை எழில் கூடி தெரியும் விதம், மழை பெய்யும் போது தெருக்கள் மின்னும் அழகு, அந்தி சாயும் நேரம் வானம் இளஞ்சிவப்பாக காணும் நளினம், இரவில் ஈபிள் கோபுரம் ஒளிரும் ஏகாந்தம் என இயற்கையாலும், இரவாலும், ஒளியாலும் தீட்டப்பட்ட காதல் காவியமும் ஓவியமுமாக கண்களை வசீகரிக்கும் பாரிஸ், காதல் நகரம் என்ற புனைப்பெயரில் அடையாளப்படுத்துவது அதிசயமில்லை!
பாரிசியர்கள்:
பாரிசியர்கள் இல்லாமல் பாரிஸ் காதல் நகரமாக இருந்திருக்காது. பாசத்தை வெளிப்படுத்தி, பண்பை பறைசாற்றி, கலாச்சாரம் பற்றி பெருமைப்படும் இவர்கள் தங்கள் இதயங்களை சட்டைகளில் அணிந்து கொண்டு, பாரிசை ஒரு காதல் நகரமாக நிலை நிறுத்த பங்களித்து வருகிறார்கள்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை என்றாலும், அந்த மொழி மட்டும் மயக்கி விடுகிறது. ஒரு இசையைப் போன்று ஓசையுடன் கவித்தன்மை கொண்ட சொற்களால் பிரெஞ்சு மொழி மென்மையானது. செவிக்கு எந்த வித சேதாரமில்லாதது; கவர்ச்சியானதும் கூட...
ஈபிள் கோபுரம்:
அன்பின் அடிப்படையில், பொக்கிஷங்களாக காதலர்கள் திரும்பத் திரும்ப வரும் படியும், இனிய நினைவுகளாக நினைத்துப் பார்த்து மகிழும் படியும் அழகாய் உயர்ந்து ஒளிர்கிறது ஈபிள் கோபுரம். இருட்டிய பிறகு வளி மண்டலம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் 20,000-க்கும் மேற்பட்ட வண்ண விளக்குகள் மின்னி மறைகின்றன. இருட்டு சுவரில் தீட்டிய சித்திரங்களாக கண்ணை மட்டுமல்ல, மனங்களையும் கவர்கின்றன.
சீன் நதி:
மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்ட சீன் நதிக்கரையோரம், ரம்மியமான விளக்கு ஒளியிலும் நிலவொளியிலும் துணையுடன் இரவு உண்ணும் உணவையும், சீன் நதி வெளிப்படுத்தும் கலையுணர்வுவையும் பார்த்து மகிழும் அனுபவத்தை அனுபவிக்கவே உலகம் முழுவதிலும் இருந்து வந்து காதலர்கள், புதுமணத் தம்பதிகள் வருகின்றனர்.
மயக்கும் தோட்டங்கள்:
ஏராளமான பூங்காக்கள், பசுமைத் தோட்டங்கள் உள்ளன. பிரமிக்கத் தக்க செயற்கை நீரூற்றுக்கள், அழகிய சிலைகள், ஆயிரக்கணக்கான தாவர வகைகள், ஜார்டின் டெஸ் பிளான்டெஸின் புல் வெளிகள் காண்போரை இடைநிறுத்தி தங்களின் அற்பதமான சூழலை உள்வாங்க அழைக்கின்றன.
கஃபே மொட்டை மாடிகள்:
வருடத்தின் எந்த நேரத்திலும் பாரிஸில் நாற்காலிகள், மேசைகள் நிரம்பிய மொட்டை மாடிகள் ஒரு பொதுவான காட்சிகள் ஆகும். நெருக்கமான இருக்கைகள். வாடிக்கையாளர்களை நெருங்கிச் சென்று உணவை அனுபவிக்கவும், மாறி வரும் காட்சிகளை பகிர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கின்றன. இங்கு பரிமாறுபவர்கள் நாம் அழைக்கும் வரை வரமாட்டார்கள். இது, உங்கள் மேஜை இது உங்கள் நிறுவனம். போதுமான நேரம் வரை இருந்து உண்டு மகிழ்ந்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள் என்று உணர்த்துகிறது.
பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ்:
உலகெங்கிலும் உள்ள காதலர்களின் ஆயிரக்கணக்கான பூட்டுக்களால் பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் பாலம் சுமை தாங்காது காதலுக்காக சுமந்து வருகிறது. ஆயிரக்கணக்கான காதலர்களின் நம்மிக்கை எனும் போது... இப்பாலம் சுமக்கும் சுகமான சுமைகள் தானே!
அன்பின் சுவர்கள்:
காதல் கடிதங்களும், காதல் ஓவியங்களும் நிறைந்த தெருக்கள் உள்ளன.
மோன்ட் மார்ட் ரேயில் உள்ள ஜெஹான் ரிக்டஸ் தோட்டச் சதுக்கத்தில் 40 சதுர மீட்டர் பரப்பளவில் காதல் கருப்பொருள் கொண்ட அன்பின் சுவர் உள்ளது.
இந்த சுவர் 2000 ஆம் ஆண்டு ஃப்ரெடெரிக், கிளேர் கிட்டோ ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இதில் “ஜ லவ் யூ“ என்ற சொற்றொடர் 250 மொழிகளில் இடம் பெற்றுள்ளது.
காதல் செய்வீர்
பாரிஸ் நகரம் அற்புதமான பிரகாசத்தை கொண்டுள்ளது. அன்புக்குரியவருடன் சிறிய மற்றும் அகல சாலைகளில் உலா வருவது அலாதியான இன்பம். கண்கவர் காட்சிகள் மற்றும் மகத்துவத்தின் ஒரு சூறாவளி! ஆதலினால்... காதல் செய்வீர்... பாரிஸ் நகரை!