
சன் டூங் குகை என்பது வியட்நாமில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய சுண்ணாம்புக்கல் குகையாகும். இது வியட்நாமின் மத்திய பகுதியில் உள்ள போங் நா-கே பாங் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. 1991இல் ஹோ கான் என்ற ஒரு உள்ளூர் விவசாயியால் கண்டுபிடிக்கப்பட்ட குகை இது. அதன் பிரம்மாண்டமான அளவு, நிலத்தடி ஆறுகள் மற்றும் அடர்ந்த காடு போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டு விளங்குகிறது. குகையின் உள்ளே ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பும், சில இடங்களில் மரங்களும், ஒரு நிலத்தடி ஆற்றோடும் அமைந்துள்ளது.
மர்ம குகை:
வியட்நாமின் மர்ம குகை (Vietnam's mysterious cave) மனித காலடி தடமே படாத ஓரிடம் சன் டூங் குகை. இங்கு உலகில் வேறு எங்கும் வசிக்காத வித்தியாசமான சிலந்திகள், தேள்கள், இறால்கள், மீன்கள் மற்றும் பலவகை பூச்சிகளையும் இந்த குகைக்குள் கண்டறிந்துள்ளனர். இந்த உயிரினங்கள் எவற்றிற்குமே கண்கள் இல்லை. அத்துடன் இவை எல்லாம் வெள்ளை நிறத்தில் மட்டுமே காணப்படுகின்றன. சில பறவை இனங்களும், வௌவால், அணில் மற்றும் குரங்குகளும் இங்கு காணப்படுகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய சுண்ணாம்புக்கல் குகை:
200 மீட்டர் உயரமும், 175 மீட்டர் அகலமும் ஆன இந்த குகை 9.4 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. மிகப்பெரிய விசாலமான இந்த குகை சில இடங்களில் 503 மீட்டர் வரை உயரமாக உள்ளது. இது 150 தனித்தனி குகைகளின் தொடராகும். ஹாங் சன் டூங் அருகிலுள்ள ஒரு குகையில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அப்படி யாரும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. இங்கு இரண்டு இடங்களில் மட்டுமே சூரிய வெளிச்சம் வரும் வகையில் துளைகள் உள்ளன. அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் வரை மங்கலாக நம்மால் பார்க்க முடிகிறது.
ஏதோன் தோட்டம்:
லாவோஸ்-வியட்நாம் எல்லையில் வியட்னாமின் குவாங் பின்க் மாகாணத்தில் உள்ள ட்ராக் என்னுமிடத்தில் அடர்ந்த மலைக்காட்டில் இந்த குகை அமைந்துள்ளது. ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால் இந்த குகை உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குகையின் உடைந்த மேற்கூரை வழியே வெளியே பார்த்தால் காடுகள் அடர்ந்த சோலைவனம் போல் அழகாக காட்சி தருகிறது. இதனால் இப்பகுதியை 'ஏதோன் தோட்டம்' என்று அழைக்கிறார்கள்.
செல்ல சிறந்த நேரம்:
இந்த குகையில் உள்ள காடுகளில் 50 மீட்டர் வரை உயரமான மரங்கள் இருக்கின்றன. இந்த குகையில் பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வியட்னாமில் இது சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது பூமியின் இயற்கையான உருவாக்கமாகும். இது பல மில்லியன் ஆண்டுகளாக உருவாகியுள்ளது. குகையின் உள்ளே தாவரங்கள், விலங்குகள் மற்றும் மழைக்காடு போன்ற அம்சங்கள் இந்த குகையை தனித்துவமாக்குகின்றன. இந்த குகையை சுற்றிப் பார்ப்பது ஒரு சாகச அனுபவமாக கருதப்படுகிறது.
ஒரு ஆண்டுக்கு ஆயிரம் பயணிகள் மட்டுமே குகையை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தோடு நம்முடன் தேர்ந்த நீச்சல் வீரர்கள் கைடாக வருகிறார்கள். Oxalis Adventure Tours என்ற நிறுவனத்தின் மூலம்தான் இந்த குகைக்கு நாம் பயணிக்க முடியும்.