பாஸ்போர்ட்டை இப்படி வச்சிருந்தா எந்த நாட்டுக்குமே போக முடியாது... உடனே தெரிஞ்சுக்கோங்க!

passport-care-tips
passport-care-tips
Published on

வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதோ, வேலைக்காகப் பயணிப்பதோ பலருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்தப் பயணத்தை நிஜமாக்க நமக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு திறவுகோல் பாஸ்போர்ட் தான். இது ஏதோ சாதாரணமான ஒரு அடையாள அட்டை கிடையாது, பலத்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஒரு சர்வதேச ஆவணம். 

இதனைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால் உங்களின் ஒட்டுமொத்தப் பயணமும் பாழாகிவிடும் நிலை ஏற்படும். பாஸ்போர்ட் விஷயத்தில் பெரும்பாலான மக்கள் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள் எப்படிப்பட்ட பெரிய ஆபத்துகளைக் கொண்டு வரும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மடிக்கவோ, கசக்கவோ கூடாது!

பாஸ்போர்ட் கையில் கிடைத்தவுடன் அதனைப் பாதுகாப்பாக வைக்கிறேன் என்று சிலர் அதனைப் பாதியாக மடித்து வைப்பார்கள். இன்னும் சிலர் அதன் பக்கங்களை ஏதோ நோட்டுப் புத்தகம் போலக் கசக்கிப் பயன்படுத்துவார்கள். இப்படிச் செய்வது ஒரு மிகப்பெரிய குற்றமாகும். 

பாஸ்போர்ட்டில் கண்ணுக்குத் தெரியாத பல சென்சார்கள் மற்றும் பாதுகாப்பு குறியீடுகள் இருக்கும். அதனை மடித்தாலோ, சிறு கீறல் விழுந்தாலோ அது செல்லாத ஆவணமாக மாறிவிடும். இதனால் நீங்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, உங்கள் பயணம் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

பின் பாக்கெட்டில் வைக்க வேண்டாம்!

பொதுவாகவே பலருக்கு தங்களின் பர்ஸ் மற்றும் கைக்குட்டையைப் பேன்ட்டின் பின் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருக்கும். அதே பழக்கத்தில் பாஸ்போர்ட்டையும் பின் பாக்கெட்டில் சொருகி வைத்துக்கொண்டு சுற்றுவார்கள். இது ஆபத்தான ஒரு விஷயம். நீங்கள் உட்காரும் போது அது நசுங்கிப் பாழாக வாய்ப்புள்ளது. 

அதுமட்டுமில்லாமல், மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் சுலபமாகத் திருடர்கள் அதனை அபேஸ் செய்துவிடுவார்கள். அதனால் எப்போதுமே ஒரு பாதுகாப்பான சின்ன கைப்பையில் அதனை வைத்துக்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
இனி எங்கும் அலைய தேவையில்லை... குழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்..!
passport-care-tips

அசால்ட்டாக எங்கும் விட்டுச் செல்ல வேண்டாம்!

லட்சக்கணக்கான பணத்தை அல்லது கிரெடிட் கார்டை நீங்கள் எப்படிப் பாதுகாப்பாக வைப்பீர்களோ அதே மரியாதையை பாஸ்போர்ட்டுக்கும் கொடுக்க வேண்டும். விடுதியில் தங்கும் அறைகளில் உள்ள படுக்கை, சாப்பிடச் செல்லும் உணவகத்தின் டேபிள் அல்லது வாடகை கார்களின் சீட் என எங்கும் அதனை அசால்ட்டாக வீசிவிட்டுச் செல்லக் கூடாது. எங்குச் சென்றாலும் அதனைப் பாதுகாப்பான ஒரு பையிலோ அல்லது ஹோட்டல் அறையில் உள்ள லாக்கரிலோ பத்திரமாகப் பூட்டி வைப்பது தான் புத்திசாலித்தனம்.

தொலைந்து போனால் செய்ய வேண்டியவை!

இவ்வளவு பாதுகாப்பாக இருந்தும் ஒருவேளை உங்களின் பாஸ்போர்ட் எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ உடனே பதற்றமடைந்து அழத் தொடங்க வேண்டாம். அந்த நேரத்தில் கூலாகவும் அதேசமயம் வேகமாகவும் செயல்பட வேண்டும். உடனடியாக அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்திலும், உங்கள் நாட்டின் தூதரக அலுவலகத்திலும் முறையான புகாரைப் பதிவு செய்வது மிக மிக அவசியம். 

இப்படி முன்கூட்டியே உஷாராகச் செயல்பட்டால், உங்களின் அடையாளத்தை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். மேலும் உங்களுக்கு அவசரமாக மாற்று ஆவணம் கிடைக்கவும் இது உதவி செய்யும்.

இதையும் படியுங்கள்:
50 வயதிலும் "மின்னும்" அழகு - இதோ உங்களின் ஸ்பெஷல் கைடு!
passport-care-tips

உங்களின் பாஸ்போர்ட் தான் வெளிநாடுகளில் உங்களைக் காப்பாற்றும் ஒரே ஆபத்பாந்தவன். அதனை ஏதோ ஒரு சாதா காகிதம் போல நினைக்காமல் ஒரு கண்ணாடிப் பொருளைப் போலப் பாதுகாப்பாகக் கையாளப் பழகிக்கொள்ளுங்கள். பயணம் முழுவதும் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் சந்தோஷமாக ஊர் சுற்ற வேண்டும் என்றால், உங்களின் பாஸ்போர்ட்டை எப்போதுமே கண் இமை போலக் காப்பது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com