

நாட்டில் ஆதார் கார்டுகள் அறிமுகத்திற்கு வந்த பிறகு, முக்கியமான தனிநபர் அடையாள அட்டையாக இது பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கேஒய்சி சரிபார்ப்பு மூலம் அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு உடனேயே ஆதார் அட்டையை விண்ணப்பிப்பது மிகவும் கடினமான செயல். இருப்பினும் இதனையும் தற்போது சாத்தியப்படுத்தி காட்டியுள்ளது, தென்கிழக்கு மண்டல ரயில்வேயுக்குச் சொந்தமான ஒரு அரசு மருத்துவனை.
ஆதார் அட்டை இந்திய மக்களின் முக்கிய அடையாள ஆவணமாகத் திகழ்கிறது. அரசு சம்பந்தப்பட்ட வேலைகளை முடிப்பதாக இருந்தாலும் சரி, புதிதாக வேலைக்குச் சேர்வதென்றாலும் சரி, முதலில் அவர்கள் கேட்பது ஆதார் அட்டையைத் தான். இப்படியான சூழலில் குழந்தைகள் பிறந்த பிறகு, ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க பெற்றோர்கள் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால், இனி இந்த அளவிற்கு தாமதம் ஆகாது. ஏனென்றால் பிறந்தவுடனேயே குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை விண்ணப்பிக்க சில மருத்துவமனைகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
குறைந்தபட்சம் 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகே, பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த நாட்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பிறந்த அடுத்த சில நாட்களிலேயே ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து விட முடியும் என சில அரசு மருத்துவமனைகள் முயற்சி மேற்கொண்டன. இதன்படி தற்போது தென்கிழக்கு ரயில்வே மண்டலத்திற்குச் சொந்தமான ஜார்க்கண்ட் சக்ரதார்பூர் ரயில்வே மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இருக்கும் இந்த மருத்துவமனையில், நேற்று முன்தினம் பிறந்த 4 குழந்தைகளுக்கு ஆதார் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பிறந்த குழந்தைகளுக்கு அடுத்த சில தினங்களிலேயே ஆதார் அட்டையை வழங்குவது இதுதான் முதல்முறை.
ஆதார் திருத்தங்களுக்கு விண்ணப்பித்தால் கூட அப்டேட் ஆக ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் குழந்தை பிறந்த இரண்டே நாட்களில் ஆதார் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழை வழங்குவது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே மண்டலம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு சக்ரதார்பூர் மண்டல ரயில்வே மேலாளர், ஊழியர் நிர்வாக அமைப்பு, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்பட பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியால் தான், பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் செயல்முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மாநிலம் முழுக்க விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும் நாடு முழுக்க பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை உடனே வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயவும் திட்டமிடப்பட்டுள்ளது” என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த ஓரிரு நாட்களிலேயே ஆதார் கார்டை வழங்கும் செயல்முறை வெகு விரைவில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.