

ஆலப்புழாவில் உள்ள வேம்பநாடு ஏரியின் நடுவே அமைந்துள்ள பத்திரமணல் தீவு (Pathiramanal) இயற்கை ஆர்வலர்களுக்கும், பறவை பார்வையாளர்களுக்கும் ஏற்ற தீவாகும். இந்த சிறிய, மக்கள் வசிக்காத தீவு, அமைதியையும் பல்வேறு பறவை இனங்களை கவனிக்கும் வாய்ப்பையும் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும். ஆலப்புழா முகம்மா பகுதியில் அமைந்துள்ள இத்தீவை படகு மூலம் மட்டுமே சென்றடைய முடியும். முகம்மா படகுத்துறையில் இருந்து (Muhamma Boat Jetty) ஏராளமான படகுகள் கிடைக்கின்றன.
இத் தீவு புலம்பெயர்ந்த மற்றும் வசிக்கும் பறவைகளுக்கு ஒரு சிறந்த புகலிடமாக உள்ளது. புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாகத் திகழும் இத்தீவின் அமைதி பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து ஒரு அமைதியான ஓய்வு நிலையை வழங்குகிறது.
பத்திர மணல் தீவு அடர்த்தியான இயற்கை தாவரங்களால் சூழப்பட்டுள்ளது. இது பிராந்திய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் செழித்து வளர ஏற்ற காலநிலையை கொண்டுள்ளது. இது இயற்கை ஆர்வலர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. 'இரவின் மணல்' என பொருள்படும் இந்த பத்திரமணல் பசுமையான வனாந்தரம், அமைதியான ஏரிக்கரை மற்றும் அழகிய நிலப்பரப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்தத் தீவு பல அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் தாயகமாக இருப்பதால், பறவைகளை காண்பதற்கு ஏற்ற இடமாகும்.
இங்கு 50 வகையான புலம்பெயர்ந்த பறவைகளும், 90 வகையான உள்ளூர் பறவைகளும் காணப்படுகின்றன. அயல்நாட்டு பறவைகளில் ஊசிவால் வாத்துகள், நீலக் கருவாலி, இரவு நாரை, நீர்க்காகம், டார்ட்டர், இந்திய ஷாக், ஊதா நாரை, கால்நடை கொக்கு, இந்திய குளம் நாரை, சிறிய கொக்கு, வெண்கல இறக்கைகள் கொண்ட ஜக்கானாக்கள், விசில் வாத்து, பருத்தி குள்ள வாத்து, சிறிய நீர்க்காகம், மீசை கொண்ட டெர்ன் போன்றவை காணப்படுகின்றன. இங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரங்கள் செழித்து வளர்கின்றன.
ஆனந்த பத்மநாபன் தோப்பு என்று அழைக்கப்படும் பத்திரமணல் 70களின் பிற்பகுதி வரை தாய்மட்டத்தில் குடும்பத்தின் தனியார் உரிமையின் கீழ் இருந்துள்ளது. கொச்சின் மெஸ் பீம்ஜி தேவ்ஜி அறக்கட்டையிடமிருந்து செவாலியர் ஏ.சி.எம். அந்த்ரப்பர் இதை வாங்கினார். இருப்பினும் 1979 ஆம் ஆண்டு நில சீர்திருத்த சட்டங்களுக்குப் பிறகு, தீவு இந்திய அரசாங்கத்தின் கீழ் வந்தது. பின்பு இது இந்திய சுற்றுலா துறையால் நிர்வகிக்கப்பட்டது. 70களின் பிற்பகுதி வரை, 14 குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. தற்போது இத்தீவில் மக்கள் யாரும் வசிப்பதில்லை. சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
டிசம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் வானிலை இதமாக இருப்பதால் பார்வையிட சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இத்தீவில் தங்குமிட வசதிகள் இல்லை என்பதால் அதற்கேற்ப திட்டமிட வேண்டியது அவசியம். இத்தீவு இடம்பெயர்வு பறவைகளின் பருவத்துடன் இணைந்து அக்டோபர் முதல் மார்ச் வரை பார்வையிட சிறந்த நேரமாக உள்ளது.
எப்படி செல்வது?
வேம்பநாடு ஏரியின் நடுவில் அமைந்துள்ள இத்தீவு ஆலப்புழாவிலிருந்து 13 km தொலைவில் உள்ளது. 30 நிமிட வேக படகு(Speed Boat) பயணம் அல்லது 1.5 மணி நேர மோட்டார் படகு சவாரி மூலம் இதை அடையலாம். இத் தீவில் தங்க முடியாது என்பதால் படகு வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தீவுக்கு அருகில் நீரில் இரவைக் கழிக்கலாம். சுகமான அனுபவமாக இருக்கும்.