
சிங்கப்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்து ரசித்த காட்சிகள் கண் முன் காட்சியாக ஒளிர்கிறது. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதுபோல் நாங்கள் கண்டு களித்த காட்சிகளை நீங்களும் கண்டுக்களிக்க வேண்டாமா? அதற்கான அசத்தலான இடங்கள்தான் இவை.
கார்டன்ஸ் பை த பே என்பது சிங்கப்பூரில் அடையாளமாக திகழும் ஒரு பிரம்மாண்ட இயற்கை பூங்கா. இங்குள்ள 'சூப்பர் ட்ரீ' (Super tree) எனப்படும் செயற்கை மரங்கள் இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிப்பதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி ஆக இருக்கும். மேலும் இங்குள்ள (CIOUD FOREST)கிளவுட் ஃபாரஸ்ட், மற்றும் பிளவர் டோம் (FlOwer Dome) ஆகியவை உலகத்தரம் வாய்ந்தவை.
சிங்கப்பூர் வானலாவிய கட்டிடங்களுக்குப் புகழ்பெற்றது. மெரினா பே சான்ட்ஸின் 57-வது மாடியில் உள்ள ஸ்கை பார்க் (Sky park) கண்காணிப்பு தளத்திலிருந்து ஒட்டுமொத்த நகரத்தின் அழகையும் கண்டு களித்தோம். இதன் தனித்துவமான படகு போன்ற வடிவமைப்பு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. அதிலம் குழந்தை களுக்கு அடடா! இன்னும் கொஞ்ச நேரம் இருக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கிறது.
சென்டோஸா தீவு பொழுதுபோக்கு மற்றும் சாகச விரும்பிகளுக்கு சொர்க்கம் என்று கூறலாம். இங்கு யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (Universal studios), அட்வென்ச்சர் கோவ் வாட்டர் பார்க் (Universal cove water park) மற்றும் அழகான கடற்கரைகள் உள்ளன. குடும்பம் மற்றும் நண்பர் உறவினர்களுடன் ஒரு முழு நாளைக் கழிக்க மிகவும் சிறப்பான இடம் இந்த சென்டோசா தீவு.
சிங்கப்பூரின் தேசிய சின்னமான மெர்லயன் சிங்கத்தலை மற்றும் மீன் உடல் கொண்ட சிலை இங்கு உள்ளது. இதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பின்னணியாக வைத்து புகைப்படம் எடுப்பது சுற்றுலா பயணி களிடையே மிகவும் பிரபலம். மெரினா விரிகுடாவின் அழகை ரசிக்க இது ஒரு அற்புதமான இடம். இந்த சிலையைப் பார்த்தவுடன் குழந்தைகள் மகர ராசி சிம்பல் மாதிரி இருக்கிறது . அது மானும் மீனும், இது சிங்கமும் மீனும் என்று கூற குழந்தைகளின் ஒப்பீட்டை கண்டு அனைவரும் கொல் என்று சிரித்தோம்.
யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு ஏற்றது.இங்குள்ள தேசிய ஆர்கிட் தோட்டம் (National orchid Garden) ஆயிரக்கணக்கான ஆர்கிட் மலர் வகைகளை கொண்டுள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் குழந்தைகள் மிகவும் விரும்பி ரசித்த இடம் இது.
இது உலகின் முதன் முதலான இரவு நேர விலங்கியல் பூங்காவாகும். இரவு நேரத்தில் சுற்றிப் பார்க்க விரும்புகிறவர்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க. இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் மின்ன ஆங்காங்கே விலங்கினங்கள் நடப்பதையும், சத்தம் கொடுப்பதையும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் த்ரில்லிங்காக இருக்கும்.
ஃபாரின் ட்ரிப் என்றாலே ஒரு சிங்கப்பூர் ஆவது பார்த்துவிட வேண்டும் என்று கூறுபவர்கள் அதிகம் உண்டு. காரணம் குறைந்த நேரத்தில் நிறைந்த காட்சிகளை கண்டுகளித்து வருவதற்கு ஏற்ற இடம், அதன் சுத்தம் மற்றும் பாதுகாப்பு அம்சம் எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அமைக்கப்பட்ட அழகின் அழகான சின்ன நகரம் என்பதால் தான் அப்படி கூறுகிறோம். ஆதலால் நீங்களும் இந்த ஆறு இடங்களையும் மிஸ் பண்ணிடாம கண்டுகளித்து வாருங்கள்.