புதிய சூழல்... புதிய சுவாசம்: ஏன் நாம் அடிக்கடி பயணிக்க வேண்டும்?

Payanam articles
Payanam articles
Published on

யணம் என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவம். பலர் தனியாகப் பயணம் செய்ய விரும்புவார்கள். வேறு சிலரோ குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பயணிப்பதையே அதிகம் விரும்புவார்கள். எப்படிச் சென்றாலும் பயணம் தரும் அனுபவம் சுகமானது. சிலருக்கு சாகச பயணங்கள் மிகவும் பிடிக்கும். சிலர் கடற்கரை பகுதிகள் உள்ள அமைதியான இடத்தை விரும்புவார்கள். நகரத்தின் சலசலப்பில் இருந்து ஒதுங்கி, விலகி அமைதியான இடத்தை விரும்புபவர்கள் அதிகம்.

பயணம் செய்வது வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லை. அது நமக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையை ரசித்துக்கொண்டே நடைப்பயணம் செய்யும்பொழுது அது நம் உடலுக்கும் இதயத்திற்கும் ஆரோக்கியத்தை வழங்குகிறது. புதிய கலாச்சாரம், இடங்கள் மற்றும் மக்களை அறிவதன் மூலம் படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றல் பெருகுவதுடன், நேர்மறை எண்ணங்களும், வாழ்க்கையை ரசிக்கும் மனப்பக்குவமும் அதிகரிக்கின்றது.

ஒரு பயணத்தை நாம் திட்டமிடும் பொழுது அதற்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பது நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய சூழல், மாறுபட்ட கலாச்சாரம், புதிய உணவுகள் ஆகியவை நம் மூளையை சிறப்பாக செயல்பட வைக்க உதவும்.

உள்ளூர் கலாச்சாரங்களையும், புதிய இடங்களையும் அறிந்துகொள்வது நம் புத்தியை கூர்மையாக்குவதுடன், மூளையை பாதிக்கும் அல்சைமர் போன்ற வியாதிகளை தடுக்கும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வித்தியாசமான அனுபவங்களையும், சூழல்களையும் தரும் பயணம் நம் மூளை துரிதமாக செயல்படவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புத்துணர்வு பெறவும் பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தென்னிந்தியாவின் ஸ்பா: குற்றால சீசன் 2026 - ரெடி ஆகிக்கோங்க மக்களே!
Payanam articles

பயணங்கள் நம் தினசரி பணிகளில் இருந்து ஓய்வு கொடுப்பதால் ஆக்கபூர்வமான புதிய யோசனைகள் தோன்றுவதுடன், பிரச்னைகளை தீர்க்கும் திறனையும் வளர்த்து நம் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வது நம் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன் சுயமரியாதையை மேம்படுத்தி, சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை அளிக்கிறது. நம் ஆளுமையை மேம்படுத்தும் பயணங்களை வருடத்திற்கு இரண்டு முறையாவது மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அறிவைத் தேடியோ, பொருளைத் தேடியோ, அமைதியைத் தேடியோ, ஆர்வத்தின் காரணமாகவோ, எந்த வகையில் பயணத்தை மேற்கொண்டாலும் பயணம் என்பது என்றுமே சுவாரஸ்யமானது. அலுப்பு தட்டாதது. நிறைய விஷயங்களை நமக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கும்.

பயணம் செய்வதில் சிறுவர்கள் முதலில் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். தரைவழிப் பயணமோ, கப்பல்வழிப் பயணமோ, வான்வழிப் பயணமோ எதுவாக இருந்தாலும் நமக்கு வாழ்க்கையில் சிறந்த பாடங்களையும், அனுபவங்களையும் தந்து கொண்டுதான் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com