பாவம் செய்தவர்கள் மேல் படாத அருவி… எங்கிருக்கு தெரியுமா?

வசுதாரா அருவி
வசுதாரா அருவி

ந்தியாவில் பல விதமான அருவிகள் இருக்கின்றது. உயரமான அருவி, நீளமான அருவி, தலைக்கீழாய் விழக்கூடிய அருவி, பாற்கடல் அருவி என்று பல அதிசயமான அருவிகள் இருக்கின்றது. இவற்றையெல்லாம் தாண்டி ஆன்மீக ரீதியாக புனிதமாக கருதப்படும் அருவியென்றால் அது வசுதாரா அருவியேயாகும். அப்படி என்ன  சிறப்பம்சம் இந்த அருவியில் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது வசுதாரா அருவி. உத்திரகாண்டில் மட்டும் 18 அருவிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வசுதாரா அருவி நீரானது அலாக்நந்தா ஆற்றில் சென்று சேருகிறது. இந்த அருவிக்கும் பத்ரிநாத்திற்கும் உள்ள தூரம் வெறும் 9 கிலோ மீட்டர்களே ஆகும். வசுதாரா அருவி கடல் மட்டத்திலிருந்து 13,500 அடி உயரத்தில் இருக்கிறது.  இந்த அருவி 400 அடி உயரம் கொண்டது.

இந்த அருவிக்கு வரும் பக்தர்கள் சொர்க்கத்திற்கு வந்தது போல உணர்வதாக கூறுகிறார்கள். இந்த அருவியின் அருகில்தான் அஷ்ட வசுக்கள் தவமிருந்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் இந்த அருவியை ‘வசுதாரா’ என்று அழைக்கிறார்கள்.

‘வசு’என்பது வாசுதேவரை குறிக்கிறது. அதாவது  விஷ்ணு பகவான். ‘தாரா’ என்றால் சமஸ்கிருதத்தில் ஆறு என்று பொருள். இந்த அருவி பாவம் செய்தவர்கள் மீது படாதாம். இதன் காரணமாகவே பக்தர்கள் இந்த அருவியின் நீரை பாட்டிலில் பிடித்து வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள். இந்த அருவியின் நீரை புனிதமாக கருதுகிறார்கள். இந்த அருவியின் நீர் நம் மீது பட்டால் நாம் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் என்று அர்த்தமாம். இதில் இருந்து வரும் நீர் ஆயுர்வேத குணங்களைக் கொண்ட செடிகளுடன் சேர்ந்து வருவதால், இதன் நீர் ஒருவர் மீது பட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

வசுதாரா அருவி
வசுதாரா அருவி

பாண்டவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல இந்த வழியையே பயன்படுத்தினார்களாம். சகாதேவன் இவ்விடத்திலேயே உயிர் நீத்தார் என்றும் கூறப்படுகிறது.

வசுதாரா அருவிக்கு மனா கிராமத்திலிருந்து மலையேற்றம் தொடங்குகிறது. வசுதாரா அருவி மனா கிராமத்திலிருந்து 7கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சரஸ்வதி கோவிலைக் கடந்த பிறகு மலையேற்றம் சற்று கடினமாக தொடங்குகிறது. எனினும் போகும் வழியில் உள்ள இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டே அருவியை அடைந்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியாக இருக்க...
வசுதாரா அருவி

சுற்றுலாப்பயணிகள் இந்த அருவியை காண வருவதற்கு சரியான மாதம் மே முதல் ஜூன் மாதமாகும். சவுக்கம்பா, நீலகந்தா, பாலகுன் போன்ற மலைகளை இங்கிருந்தே காண முடியும். அருவிக்கு அருகிலே கடைகள் ஏதும் கிடையாது. எனவே உணவு, தண்ணீரை கீழிருந்தே எடுத்து செல்வது நல்லதாகும். இந்த அருவியை தூரத்திலிருந்து பார்க்கையில் பால் ஊற்றுவது போல காட்சியளிக்கிறது.

சில கதைகளை கேட்கும் போது, அந்த இடத்திற்கே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றும். இந்த அருவியை பற்றி கேட்கும் போதும் அப்படி ஒரு ஆன்மீக பயணம் மேற்க்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த அருவியை ஆன்மீகம் மற்றும் பயணம் இரண்டுமே சேர்ந்து செய்ய விரும்புவோர் வாழ்வில் நிச்சயமாக ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com