இயற்கையழகு கொஞ்சும் இமாச்சல மலைப்பிரதேசங்கள் எல்லாமே அற்புதமானது. தவம் மற்றும் தியானம் செய்ய ஏற்ற இடங்கள். இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலிருக்கும் சமோலி மாவட்டத்திலுள்ள நாராயண பர்வத்தின் மடியில், கடல் மட்டத்திற்கு மேலே 3110 கி.மீ. உயரத்தில், அலக்நந்தா ஆற்றங்கரையருகே அமைந்திருக்கும் புனித ஷேத்ரம் "பத்ரிநாத்" ஆகும்.
கறுப்பு நிற சாளக்கிராமத்திலான மூலவர், பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல காட்சி அளிக்கிறார். கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் வெந்நீர் ஊற்றில், பக்தர்கள் ஸ்நானம் செய்த பிறகு, பத்ரிநாதரைத் தரிசித்து, சுற்றி வர இருக்கும் பஞ்சபத்ரிகளைத் தரிசிக்கவும் செல்கின்றனர்.
பஞ்ச (5) பத்ரி விபரங்கள்:
பஞ்ச பத்ரிகளாகிய ஆதிபத்ரி; விஷால் பத்ரி; பவிஷ்ய பத்ரி ; யோகத்யான் பத்ரி ; விருதா பத்ரி ஆகியவைகளை பத்ரிநாத் வரும் பல பக்தர்கள் நேரில் சென்று தரிசிக்கின்றனர். ஆனால் சிலர் நேரம் கருதி, பஞ்ச பத்ரியை "மிஸ்" செய்து விடுகின்றனர். வாருங்கள்! ஒவ்வொரு பத்ரியாக வலம் வந்து வணங்குவோம்.
ஆதி பத்ரி, பஞ்ச பத்ரிகளில் முதன்மையானது. குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் பல இங்கே இருப்பினும், நாராயணர் கோவிலே பிரசித்தமானது. கோவிலின் உள்ளே கருங்கல்லினால் ஆன 3 அடி உயரமுள்ள விஷ்ணு சிலை உள்ளது. மேலும், ஆதி குரு சங்கராச்சாரியார், நாராயணர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதாக கூறப்படுகிறது.
பத்ரி நாராயணர் என்று அழைக்கப்படும் பத்ரிநாதர் பிரதானமாக வீற்றிருக்கும் இடமிது. கோவில் வளாகத்தினுள், தியான நிலையிலுள்ள தெய்வீகச் சிலைகள் அநேகம் உள்ளன. பூஜைகள் முறைப்படி நடத்தப்படுகின்றன. அச்சமயம், பக்த ஜனங்கள், "ஜெய் பத்ரி விஷால் கி " என கோஷமிட்டு வணங்குவது வழக்கம்.
ஜோஷிமட்டிலிருந்து 19 கி.மீ. தூரத்தில் இருக்கும் "சல்தார்" கிராமத்திலிருந்து சுமார் 5 கி.மீ.மலையேற்றப் பாதையில் செல்ல வேண்டும். சிறிய ஊராகிய "பவிஷ்ய பத்ரி", கடல் மட்டத்தில் இருந்து 2,744 மீட்டர் உயரத்திலும், அடர்ந்த காடுகளிடையேயும் அமைந்துள்ளது.
"பவிஷ்யவாடி கோவில் என்று கூறப்படும் "பவிஷ்யபத்ரி", மெயின் பத்ரிநாதர் கோவிலின் வழக்கத்தைப் பின்பற்றி, அதே நாட்களில் திறக்கப்பட்டு மூடப்படுகிறது. பவிஷ்ய பத்ரியில் இருக்கும்பாறை ஒன்றில் இயற்கையாக வெளிப்படுகின்ற விஷ்ணுவின் நான்கு கோணச் சிலை ஆண்டுதோறும் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
புராண காலத்தில் பாண்டு மகராஜா, பாண்டுகேஷ்வரை நினைத்து தியானம் செய்த இடம் யோகத்யான் பத்ரியாகும். ஜோஷிமட்டிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருக்கும் இக்கிராமத்திலுள்ள பாண்டுகேஷ்வர் கோவிலினுள், கல்லால் செதுக்கப்பட்ட சாளிக்கிராமத்தைக் காணலாம்.
ஜோஷிமட்டிலிருந்து 7 கி.மீ. தூரத்திலுள்ள "அனிமத்" கிராமத்தில் அமர்ந்திருக்கும் எளிமையான கோவில் விருதாபத்ரி. இங்கேயுள்ள பத்ரிநாதரை, ஆதிகுரு சங்கராச்சாரியார் வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீ நாராயணர், முதியோர் வேடத்தில் இக்கோவிலுக்கு வந்து, நாரதமுனிக்கு தரிசனம் அளித்ததாக கோவில் புராணம் தெரிவிக்கிறது.
மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் மற்றும் மத ஸ்தலங்களின் கலவையாகிய "பஞ்சபத்ரியை" வலம் வருவது மிகவும் நன்மை பயக்கும். அதனால், சுற்றுலா மற்றும் ஆன்மீக சுற்றுலாப்பயணம் செல்பவர்கள், பஞ்சபத்ரியை ஸ்கிப் பண்ணாம, மறக்காம சுற்றிப் பார்த்து கும்பிட்டு வாங்க! குரு பத்ரி விஷால் நாராயண் கி ஜெய்!