
இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது இருக்கும் சுகமே தனிதான். காதில் ஒலிக்கும் படபடப்பான காற்றும், தலைமுடிகள் பறக்கும் கோலத்துடன் பைக்கில் பயணம் செய்வதே ஒரு இனிமையான அனுபவமாகும். அதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்துடன் பயணிக்கும்போது இருக்கும் த்ரில் வேறெதிலும் கிடையாது. காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு, மென்மையான காதுக்கு இனிமை தரும் பாடல்களை கேட்டுக்கொண்டே பயணம் செய்து பாருங்கள் ஆஹா அற்புதம் என்று உணர்வீர்கள்.
நெரிசல் மிகுந்த நகரங்களில் பயணிப்பதைவிட கிராமப்புற சாலைகளில் பயணிப்பது இன்னும் சுகமான அனுபவத்தைத் தரும். பச்சை வயல்கள் சூழ, நடுவே மலைகள் தென்பட பைக்கில் பறக்கும் பொழுது வானமே நம் வசப்பட்டதுபோல் ஆஹா என்ன ஒரு சாகச பயணமாக இருக்கும் தெரியுமா? நகரங்களின் கூச்சல்களில் இருந்து கிராமத்தின் அமைதியான பின்னணியில் பயணம் செய்யும்பொழுது நம் மனதிற்குள் நிறைய தேடல்கள் வந்து செல்லும். அந்த மறக்க முடியாத தருணங்கள் நம் வாழ்வில் நிச்சயம் ஒரு வசந்தகாலமாகத்தான் தெரியும்.
பைக்கில் ஒரு நீண்ட பயணம், அதுவும் தனிமையில். தொல்லை தரும் தொலைபேசிகள் வேண்டாம். எந்தவிதமான வெளித் தொடர்பும் இன்றி பயணப் படுங்கள். அதுவும் மௌனமாய் பயணப்படுங்கள் மௌனத்தோடு பயணப்படுங்கள். மனதில் அப்படி ஒரு அமைதி எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் சந்தோஷமாக பயணப்படுங்கள். பொதுவாக நீண்ட தூரம் பயணம் செய்ய அல்லது காட்டுப்பகுதிகள் போன்ற அணுக முடியாத இடங்களுக்கு பைக்கில் பயணம் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.
பைக்கில் பயணிக்கும் பொழுது கிடைக்கும் ஒரு சுதந்திரமான மற்றும் சுவாரஸ்யமான பயண அனுபவங்களே தனிதான். அந்த உணர்வுகளை எளிதில் யாராலும் விரிக்க முடியாது. இயற்கையை ரசிக்கவும், புதிய இடங்களை ஆராயவும் சாகசம் நிறைந்த, சந்தோஷம் தருகின்ற அதே சமயம் அமைதியான ஒரு உள் உணர்வை ஏற்படுத்துகின்ற பைக் பயணம் என்றுமே இனிமையானதுதான். வாழ்வில் ஒரு முறையாவது பைக் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
பைக் பயணத்திற்கு தயாராகும் பொழுது கவனமாக திட்டமிடுவது அவசியம். நல்ல நிலையில் உள்ள ஒரு பைக்கை தேர்வு செய்தால் மட்டும் போதாது, அதில் செல்ல விரும்பும் இடத்திற்கான வழியை முன்கூட்டியே திட்டமிடவும் வேண்டும்.
வானிலையை கவனித்து அதற்கேற்ப தயாராவதுடன் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதும், சிறிய காயங்களுக்கு முதலுதவி செய்ய ஒரு முதலுதவி பெட்டியையும் எடுத்துச் செல்லவும். தலைக்கவசம் அணிவதும், பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுப்பதும் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுவதும் அவசியம்.
சவாலான நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் பயணம் சிறந்த சாகச பயணமாக இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள், சாரல் அடிக்கும் நீர்வீழ்ச்சிகள் அருகே வழியாக செல்லும்பொழுது கிடைக்கும் உணர்வே தனிதான். அந்த இடத்தின் அழகை ரசித்தபடி, சுற்றி இருக்கும் அழகை உள்வாங்கியபடி நண்பர்களுடன் குழு பயணம் செல்வது இன்னும் அற்புதமாக இருக்கும்.
பைக் பயணம் சுதந்திரமானது. எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்த இடத்திலும், நேரத்திலும் நம் வசதிக்கேற்ப நிறுத்தலாம். இயற்கையை மிக நெருக்கமாக அனுபவிக்கலாம்.