

தற்போது பத்துநாள் விடுமுறை என்றாலும் இந்தியர்கள் அதிக அளவில் சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த அளவிற்கு முன்பை விட வெளிநாட்டு பயணம் எளிதாகிவிட்டது. சிங்கப்பூருக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் சுற்றுலா செல்லும் நிலையில் சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனை ஆணையம் NBD எனப்படும் 'பயணம் தடை உத்தரவு' (No-Boarding Directive) முறையை ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிறப்பித்துள்ளது.
சிங்கப்பூர் விதித்துள்ள இந்த புதிய உத்தரவின்படி, சிங்கப்பூரில் நுழைய தகுதி பெறாத பயணிகள் விமான நிலையங்களில் விமானம் ஏறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுவர். சிங்கப்பூர் செல்லும் பயணியிடம் உரிய டாக்குமெண்ட் இல்லை என சிங்கப்பூர் அரசு கருதினால் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் செக்கிங் கவுண்டரிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்.
விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை விமான நிறுவனங்களுக்கு என் .பி .டி. வழங்குகிறது. சாங்கி விமான நிலையம் செலெக்டர் விமான நிலைய த்திற்கு செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் இந்த உத்தரவு பொருந்தும்.
விமான நிறுவனங்கள் சிங்கப்பூர் அரசுக்கு பயணிகளின் சிங்கப்பூர் வருகை அட்டை (SG Arrival Card) விவரங்கள், பாஸ்போர்ட் விசா தரவுகள், கடந்த காலக் குடிவரவு அல்லது பாதுகாப்பு தொடர்பான தடைகள் குறித்த விவரங்களை சிங்கப்பூரின் ஐ.சி.ஏ-வுக்கு அனுப்புவர். பயணி தகுதியற்றவராகவோ அதிக ஆபத்துள்ளவராகவோ சிங்கப்பூர் ஐ. சி. ஏ கருதினால் தடுத்து நிறுத்த விமான நிறுவனத்திற்கு உத்தரவு நேரடியாக அனுப்பப்படும். ஏதாவது சந்தேகம் என்றாலும் கூடுதல் சோதனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தடை உத்தரவு பெற்ற பயணிகள் விமானத்தில் ஏற அனுமதி இல்லை. இதற்கு முன்பு இந்த சோதனைகள் அனைத்தும் சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கிய பிறகே மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது புறப்படும் விமான நிலையத்திற்கு இத்தகைய செயல்முறை மாற்றப்பட்டுள்ளது.
தடைக்கான காரணங்கள்
ஆறு மாத காலத்திற்கு குறைவாக செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன் பயணிப்பது, சரியான விசா இல்லாமல் பயணிப்பது, பிழையாக அல்லது விடுபட்ட சிங்கப்பூர் வருகை அட்டையை சமர்ப்பிப்பது, முந்தைய பயணத்தின்போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவும், தடை செய்யப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டோரும் சிங்கப்பூர் அரசால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பயணம் செய்ய முடியாது.
ஆகவே, இந்தியர்கள் சிங்கப்பூருக்கு செல்லும்போது தங்களது பாஸ்போர்ட் 6 மாத காலம் வாலிடிட்டியை கொண்டுள்ளது, முன்கூட்டியே விசாக்களுக்கு விண்ணப்பிப்பது துல்லியமாக சிங்கப்பூர் வருகை அட்டையை சமர்ப்பிப்பது ஆகியவற்றை உறுதி செய்து மகிழ்வான பயணத்தை தடையின்றி மேற்கொள்ளுங்கள்.
ஆனாலும் ஒருமுறை தடை வந்தால் அது நிரந்தர தடை அல்ல. மேலும் விதிக்கப்பட்ட தடை தவறானது என கருதினாலும் கடிதம் மூலம் மீண்டும் ஒப்புதலை பெற்று சிங்கப்பூர் பயணிக்கலாம் என்பது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான விஷயமே.