
ஆக்ரா என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மஹால்தான். ஆழமான காதலின் சின்னம். உலக அதிசயங்களில் ஒன்றாகிய இதைக் காணவேண்டும் என்பது அநேகரின் கனவாகும். சந்தர்ப்பம் கிடைக்கையில், ஆக்ரா சென்று தாஜ்மஹாலை காண்பவர்கள் கண்களில் அவர்களையறியாமலேயே கண்ணீர் ததும்பும். அதில் அடியேனும் ஒருவள்.
வாவ் தாஜ்:
வெண்மை நிறத்துடன் யமுனை நதிக்கரையில் கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான், தன்னுடைய அன்பு மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய மதிப்பிற்குரிய கல்லறையாகும். இதன் கட்டிடக்கலை மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும். "வாவ் தாஜ்"! என பிரமிக்க வைக்கும். வருடம் முழுவதும் சுற்றுலாவினர் வருமிடம் தாஜ்மஹால்.
ஆக்ரா கோட்டை:
1654 ஆம் ஆண்டு, பேரரசர் அக்பரால் சிகப்பு நிற மணல் பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை, அரசு இல்லம் மற்றும் ராணுவ முக்கியத்துவம் கொண்ட இடமாக செயல்பட்டது. அரை வட்டத்தள வடிவம் கொண்ட கோட்டையின் நான்கு திசைகளிலும், நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கூரி பாக்; ஜஹாங்கீர் மஹால்; திவான்-இ-அம்; கண்ணாடி மாளிகை; மீனா மசூதி போன்றவைகள், ஆக்ரா கோட்டையினுள் உள்ளன. மேலும், "லால்கில்லா" என்றழைக்கப்படும் ஆக்ரா கோட்டையினுள்ளே இருக்கும் பெரும்பான்மையான கட்டிடங்கள் வெவ்வேறு கட்டிடக்கலை பாணிகளைக் கொண்டதாகும்.
பதேபூர் சிக்ரி:
பதேபூர் சிக்ரியை உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பேரரசர் அக்பருக்கு வாரிசு இல்லாத காரணத்தால், சிக்ரி என்ற இடத்திலிருந்த சூஃபி பெரியவரான ஷேக் சலீம் சிஷ்டி என்பவரிடம் சென்று ஆசி பெற்றார். பின்னர், சிக்ரியில் வைத்து மகன் பிறக்க, அங்கே புதிய நகரத்தை உருவாக்கினார் அக்பர். இது பதேபூர் சிக்ரியென்று அழைக்கப்பட்டது. அக்பருக்கு சிக்ரியில் பிறந்த மகன் ஜஹாங்கீர் ஆவார். இந்திய-இஸ்லாமிய கட்டிடக்கலை கொண்ட பதேபூர் சிக்ரி பார்க்கவேண்டிய இடம்.
புலந்த் தர்வாசா:
பதேபூர் சிக்ரியில், முகலாயாப் பேரரசர் அக்பரால் கட்டப்பட்ட பெரிய நுழை வாசல் (புலந்த்). 175 அடி உயரமான இதனை வெகு தூரத்திலிருந்தும் காண முடியும். பதேபூர் சிக்ரிக்குள் புலந்த் தர்வாசா வழியாகத்தான் நுழையவேண்டும்.
ராம் பாக்:
1528 ஆம் ஆண்டு பேரரசர் அக்பரால் அமைக்கப்பட்ட முகலாயத் தோட்டமாகிய "ராம் பாக்" - இன் இயற் பெயர் "ஆராம் பாக்". சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை திறந்திருக்கும் ராம் பாக் தோட்டம். இத்தோட்டத்திற்கு தேவையான தண்ணீர் யமுனை நதி மூலம் விநியோகிக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணம் உண்டு.
தாஜ்மஹால் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, கரமா-கரம் சோளே பட்டூரா மற்றும் ஃபேமஸ் டேஸ்ட்டி "ஆக்ரா பேட்டா" ஸ்வீட்டை ரசித்து சாப்பிட்டு, ஷாப்பிங் கம் வின்டோ ஷாப்பிங் செய்து, அருமையான ஆக்ராவை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம். ஓகே!