
முன்னேற துடிப்பவர்களை கூர்ந்து கவனித்தால் சிறு குழந்தைகள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கூட விடாமல் கவனிப்பார்கள். அதேபோல் வீட்டில் இருப்பவர்கள் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்பார்கள். சக அலுவலர் மற்றும் விருந்தினர், உறவு முறைகள், நட்பு வட்டம் என்று அவர்கள் பழகும் விதமே வித்தியாசமாக இருக்கும். சட்டென்று எதையும் பேசி விட மாட்டார்கள். இப்படி கொஞ்சமாக பேசி அதிகமாக கவனிப்பதே இவர்களுக்கு அனுபவத்தை வாரி வழங்குகிறது.
குறிப்பாக அடுத்தவர்களை கவரவேண்டும் என்பதற்காக எதையும் செய்யமாட்டார்கள். நாம் இயல்பாக எப்படி இருக்கிறோமோ அப்படியே இருந்து மற்றவர்களை கவர்வார்கள். அதுதான் அவர்களின் தனி பண்பு.
இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய தவறுகளுக்கு மற்றவர்கள் மீது குறையை சுமத்தமாட்டார்கள். அது என்னுடைய தவறுதான் என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். அதிலிருந்து பாடம் கற்று பிறகு எப்பொழுதுமே தவறு நேரா வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.
ஒருவர் படிப்பை நிறுத்திவிட்டு சும்மா இருந்தார். அவரிடம் ஏன் படிப்பை நிறுத்தினீர்கள், என்று கேட்டதற்கு என் தலையில் ஒரு பெரியவர் ஓங்கி அடித்தார். அதிலிருந்து எனக்கு படிப்பு ஏறாமல் போய்விட்டது என்று கூறினார். இது போன்ற சாக்கு போக்கை எல்லாம் தவிர்ப்பவர்கள்தான் முன்னேறத் துடிப்பவர்கள்.
உணவு, உடை, உல்லாசம் ல்லாவற்றிற்கும் சிறிதளவு பணம் செலவழித்தால், அவர்களின் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு கொஞ்சமும் கஞ்சம் இல்லாமல் பணத்தை செலவழித்து திறமையை வளர்த்துக்கொள்வார்கள். இதற்காக கடன் பட்டாலும் கவலைப்பட மாட்டார்கள். இதில் அவர்கள் தனி குறிக்கோளுடன் திகழ்வதைக் காணமுடியும்.
ஒரு காரியத்தில் துணிந்து இறங்கிவிட்டால் கடினமான வேலைகளை கூட ரிஸ்க் எடுத்து செய்யத் தயங்க மாட்டார்கள். இப்படி தயங்காமல் செய்வதற்கான காரணம், அவர் இறங்கி இருக்கும் காரியத்தில் உள்ள சாதக, பாதகங்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்திருப்பதால்தான்.
பணியாளர்களிடம் கோபத்தை வெளிக்காட்ட மாட்டார்கள். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார்கள். இப்படி இருக்கும்போது எப்பொழுதாவது ஒருமுறை அவர் கோபப்பட்டால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள் .அந்த நியாயத்திற்கும் தலைவணங்குவார்கள்.
பணத்தை சம்பாதிப்பதுபோல் அனுபவங்களையும் சேர்த்து சம்பாதிப்பார்கள். நிறை செல்வம் என்று வந்த பிறகு அவருக்குக் கீழ் வேலை செய்த அனைவருக்கும் மாதா மாதம் ஒரு பென்ஷன் தொகையை அனுப்புவதற்கும் மறக்க மாட்டார்கள்.
இதுதான் "எல்லாருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வற்கே செல்வம் தகைத்து" என்ற திருக்குறளின் மேன்மையை உணர்த்துவதாகும். எல்லோரிடமும் பணிவாக இருப்பது நல்லதுதான். என்றாலும் செல்வம் வந்த பிறகு பணிவாக இருப்பது என்பது மிகவும் உயர்வான காரியம். அதுபோல் எல்லோரும் இருக்கவும் மாட்டார்கள். அப்படி இருப்பவர்களைத்தான் செல்வம் தேடி வந்து சேரும். உலகமும் கொண்டாடி மகிழும்.
இப்படி வசதி மற்றும் சொகுசான வாழ்க்கைதான் கிடைத்து விட்டதே என்று தேங்கி நிற்காமல் அதையும் தாண்டி 'குந்தித் தின்றால் குன்றும் மாலும்" என்பதை உணர்ந்து மேலும் வளர வேண்டும் என்பதில் குறியாகவே இருப்பவர்கள்தான் முன்னேற்ற பாதையின் முன்னோடிகள்.
ஆதலால் நாமும் நம் வழியில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்ல இது போன்ற வழிகளை கடைபிடிப்பது அவசியம்.
வெற்றி வந்தால்
பணிவு அவசியம்...
தோல்வி வந்தால்
பொறுமை அவசியம்...
எதிர்ப்பு வந்தால்
துணிவு அவசியம் ...
எது வந்தாலும்
நம்பிக்கை அவசியம்...!