
கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் சுற்றுலா செல்வதை அதிகமாக விரும்பத் தொடங்கிவிட்டார்கள். உலகெங்கும் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தப் பதிவில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஐடியாக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. தனிமைப் பயணம்:
அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியாகப் பயணம் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். குடும்பத்துடன் செல்லும்போது அனைவரின் பாதுகாப்பு, தங்கும் இடம் மற்றும் பிற வசதிகள் பற்றிய திட்டமிடுதல் அதிகமாக இருக்கும். ஆனால் தனியாக செல்லும்போது இது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்பதால் மக்கள் தனியாக பயணம் செய்வதை விரும்புகிறார்கள்.
விரும்பும் இடத்திற்கு செல்வதற்கும் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதற்கும் புதியவர்களை சந்திப்பதற்கும், புதிய பயணிகளோடு கலந்து பழகவும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம் தனியாக பயணம் செய்வதை எளிதாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது.
2. உண்மையான அனுபவங்களை தேடுதல்:
கூட்டம் கூட்டமாக கைடுகளின் துணையுடன் பிரபலமான இடங்களை சென்று பார்வையிடுவது பழைய ட்ரெண்டிங். உள்ளூரில் இருக்கும் இடங்களை ரசித்து அனுபவிப்பதுதான் தற்போதைய ட்ரெண்டிங். உள்ளூரில் கிடைக்கும் உணவுகள், பொருள்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களின் மொழியில் சில சொற்றொடர்களை கற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடுவது, உள்ளூர் கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்பது போன்று அந்தப் பகுதி மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதுதான் தற்போதைய ட்ரெண்டிங்காக இருக்கிறது.
3. தொழில்நுட்பத்தின் உதவி:
முன்பு போல மக்கள் டிராவல் ஏஜென்சி நிறுவனத்தை அணுகுவதற்குப் பதிலாக, ஏ. ஐ பயன்பாட்டில் தங்கள் செல்ல விரும்பும் இடத்தை பற்றிய விவரங்கள், ஹோட்டல்கள், முன்பதிவு தளங்கள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை அறிந்து கொள்கிறார்கள். ஏ. ஐக்கள் (Chat bot) சாட் பாட்டில் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கின்றன. பிரத்தியேகமான டிராவல் ஆப்களில் பயணத்தை முன் பதிவு செய்வது, ஹோட்டல் புக் செய்வது, உள்ளூரில் சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கான முன்பதிவையும் ஸ்மார்ட்போனிலேயே செய்து விடுகிறார்கள்.
4. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்:
தங்களுடைய பயணம் பூமியையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்தார்போல பயணங்களை அமைத்துக் கொள்கிறார்கள். விமானங்களுக்கு பதிலாக ரயில்களில் செல்வது, உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை வாங்குவது என்று அதில் கவனம் செலுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள்.
5. குளிர்ச்சியான இடங்கள்:
உலகளாவிய வெப்ப நிலை அதிகரித்து வருவதால் சில பயணிகள் குளிர்ச்சியான இடங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். தற்போது டெஸ்டினேஷன் ட்ரிப்புகள் பிரபலம் அடைந்து வருகிறது. தாங்கள் சுற்றிப் பார்க்கும் இடங்கள் அமைதியாக, அதிக நெரிசலின்றி குறைந்த செலவில் சென்று பார்க்குமாறு இருப்பதை விரும்புகிறார்கள்.
6. இளம் பயணிகளின் விருப்பம்
நடுத்தர மற்றும் முதியவர்கள் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள். ஆனால் இளவயதில் இருக்கும் ஜெனரல் இசட் மற்றும் மில்லினியல்ஸ் போன்றவர்கள் சர்வதேச பயணம் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் பெரியவர்களைப் போல கூட்டமாக சென்று உல்லாசமாக இருப்பதை விரும்புவதில்லை. மொழிபெயர்ப்பு ஆப்கள், கூகுள் மற்றும் ஆப்பிள் வரைபடங்களை பயன்படுத்தி புதிய இடங்களுக்கு செல்கிறார்கள்.
திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்வு படம் பிடிக்கப்பட்ட இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள். பெரிய அளவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்வதை, பொழுதுபோக்குடன் இணைந்த பயணமாக கருதுகிறார்கள்.
7. தனிப்பட்ட விருப்பங்கள்:
ஏ ஐயைப் பயன்படுத்தி தங்களுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய அல்லது விரும்பிய உணவுகள் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்கிறார்கள். பயணடிக்கெட்டுகள், ஹோட்டல் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள். எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள மக்களை தொடர்பு கொள்வதற்கு மொழிபெயர்ப்பு ஆப்பை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதுவே தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்கள்.