
உலகின் நான்காவது பெரிய தீவான மடகாஸ்கரிலிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில், ஆப்பிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய தீவு நாடு மொரீஷியஸ். இது பிரெஞ்சு காலனியாக இருந்தபோது இங்கு வேலைக்கு அழைத்து வரப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் இந்துக்கள். 1835 ஆம் ஆண்டு முதல் பல இந்தியர்கள் மொரிஷியஸில் குடியேறி, அதைத் தங்கள் தாயகமாக மாற்றிக்கொண்டனர். சமீப மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 48% இந்துக்கள்.
இங்கு குடியேறிய இந்துக்கள் தங்கள் பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க கோயில்களைக் கட்டினர். மொரீஷியஸ் கோயில்களைக்காண ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சமீபத்தில் நானும் என் கணவரும் மொரீஷியஸில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்தோம். இங்கு குறிப்பாக மயில் வாகனனான முருகனுக்கு பல கோயில்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையில் தமிழ் கலாச்சாரம் வேறூன்றி இருப்பதைப் பார்க்க முடிகிறது.
கங்கா தலாவ் கோயில் அல்லது கிராண்ட் பாசின் கோயில் கிராண்ட் பாசின் என்றும் அழைக்கப்படும் கங்கா தலாவ், கடல் மட்டத்திலிருந்து சுமார் 550 மீட்டர் உயரத்தில் மொரீஷியஸின் தெற்கில் சவண்ணே மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரிகள் சூழ்ந்த கோயில். இங்குள்ள 108 அடி உயரமான துர்காதேவி மற்றும் சிவன் சிலை கண்ணைக் கவருகிறது.. அனைவரையும் ஈர்க்கக்கூடிய இங்குள்ள சிலைகள் 2007 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டனவாம். குஜராத்தின் வதோதராவில் உள்ள .சுர்சாகர் ஏரியில் உள்ள சிலையின் பிரதி என்றும் கூறப்படுகிறது. நாங்கள் அங்கு சென்றபோது சிறிது மழை பெய்து கொண்டிருந்தது. சிவலிங்க அபிஷேகம் செய்து வணங்கியது சிலிர்க்கும் அனுபவம்.
இந்து மதம் முக்கிய மதமாக இருப்பதால் இந்த தீவு நாட்டில் மஹா சிவராத்திரி மிகவும் குறிப்பிடத்தக்க மத விழாவாகும். மஹா சிவராத்திரி தினத்தில் மொரீஷியஸைச் சுற்றியுள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வணங்குவதற்காக இந்த ஏரிக்கருகில் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து செல்கின்றனர்.
சாகர் சிவன் கோவில்
இது Goyave de Chine தீவில் உள்ள ஒரு அற்புதமான மொரீஷியஸ் இந்து கோவில். அனைத்து பக்கங்களிலும் இந்திய பெருங்கடலால் சூழப்பட்ட சாகர் சிவன் கோவில் சிவபெருமானின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், பார்வதி, சாய்பாபா என அநேக தெய்வங்களின் சிலைகள் உள்ளன. மிகவும் அமைதியான இடம்.
அருள்மிகு மஹா மாரியம்மன் திருக்கோயில்
போனா அகேல் என்ற இடத்தில் உள்ள இந்த மாரியம்மன் கோயில் மதுரை மாரியம்மன் கோயிலுக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தியது. கருவரையில் அம்மன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். கோயில் வளாகத்தில் இடும்பன், கடம்பன், முனீஸ்வரன், மதுரை மருத வீரன், பீமனின் பேரன் பார்பரிகா போன்ற காணக்கிடைக்காத உருவ சிலைகள் உள்ளன. மேலும் பல தெய்வங்களின் பெரிய உருவ சிலைகளும் காணப்படுகின்றன. தைபூச தினத்தன்று சிறப்பு பூஜைகள், தீமிதி, காவடி போன்ற விஷேச நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா ஆலயம், சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீ சிவ சுப்ரமண்ய ஆலயம், திரௌபதி அம்மன் ஆலயம் என இன்னும் பல இந்து ஆலயங்கள் உள்ளன. மொரீஷியஸில் இந்து மதம் ஆதிக்கம் செலுத்துவதால் தீபாவளி, விநாயக சதுர்த்தி, ஹோலி, மகர சங்கராந்தி மற்றும் தைப்பூசம் உள்ளிட்ட அனைத்து முக்கிய இந்து பண்டிகைகளும் கொண்டாடப் படுகின்றன.
மொரீஷியஸின் தெளிவான கடற்கரைகள், கடற்கரை சாகசங்கள் மற்றும் மயக்கும் இடங்களை விட மொரீஷியஸ் கோயில்களைக்காண ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.