

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ப்ளஃப் தீவு (Bluff Island). இது வடக்கு மற்றும் மத்திய அந்தமானின் நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்டது. போர்ட் பிளேருக்கு வடக்கே சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தீவு அற்புதமான இயற்கை அழகுடன், மாறுபட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு பெயர் பெற்ற ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
இத்தீவிற்கு வருபவர்கள் அழகிய கடற்கரைகள், படிகத் தெளிவான நீர்நிலைகள் மற்றும் எங்கும் பசுமையை அனுபவிக்க முடியும். இத்தீவை 500 மீட்டர் அகலமுள்ள குறுகிய கால்வாய்கள் மேற்கில் சிபைக் தீவிலிருந்தும், தெற்கில் தெற்கு அந்தமானில் இருந்தும் பிரிக்கின்றன. இந்த தீவின் பரப்பளவு 1.14 கிலோமீட்டராகும்.
மற்ற பிரபலமான இடங்களைவிட குறைவான மக்கள் கூட்டம் உள்ள, அமைதியான அனுபவத்தைப் பெற விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாகும்.
கடற்கரைகள், நீச்சல், சூரிய குளியல், ஸ்நோர்கெலிங் மற்றும் டைவிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாகும். இதன் தெளிவான நீர், பவளப்பாறைகள் மற்றும் பசுமையான தாவரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. இயற்கை அழகு நிரம்பிய இத்தீவு அமைதியான விடுமுறையை விரும்புவர்களுக்கு சிறந்த இடமாகும்.
1949 ஆம் ஆண்டில் எஞ்சியிருந்த அந்தமான் தீவுக் கூட்டத்தின் சில பழங்குடி மக்களை நோய்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க இத்தீவுக்கு இடம் மாற்றப்பட்டனர். 1961 ஆம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 19 நபர்கள் என்ற மிகக் குறைவான அளவை எட்டியிருந்தது. 1969 ஆம் ஆண்டில் அவர்களை ப்ளஃப் தீவைவிட சற்று பெரிய சிட்ரெய்ட் தீவிற்கு மீண்டும் இடம் மாற்றினர். 1987 ஆம் ஆண்டில் ப்ளஃப் தீவு ஒரு இயற்கை பாதுகாப்பகமாக மாறியது.
வனவிலங்கு சரணாலயம்:
இத்தீவு ப்ளஃப் தீவு வனவிலங்கு சரணாலயமாக (Bluff Island Wildlife Sanctuary) பாதுகாக்கப்படுகிறது. இது குறிப்பாக கடற்பறவைகள் மற்றும் பல்வேறு கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒரு முக்கியமான வாழ்விடமாகும்.
சுற்றுச்சூழல்:
இங்கு மனிதக் குடியிருப்புகள் எதுவும் கிடையாது. இது முற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த, அடர்ந்த காடுகள் மற்றும் பவளப்பாறைகள் கொண்ட பகுதியாகும்.
இத்தீவு ஒரு பாதுகாக்கப்பட்ட சரணாலயம் என்பதால் இங்கு செல்வதற்கு வனத்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
செல்ல சிறந்த நேரம்:
அக்டோபர் முதல் மே மாதம் வரை வானிலை இனிமையாகவும், தெளிவான வானத்துடனும், கடல் அமைதியாகவும் இருப்பதால் நீர் விளையாட்டுகள், கடற்கரை செயல்பாடுகள் மற்றும் தீவுப் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் என்பதால் பயணம் தவிர்ப்பது நல்லது.