உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா பயணங்கள் ஏன் தவிர்க்கப்படுகின்றன?

Why are trips being avoided?
payanam articles
Published on

தினைந்து வருடங்களுக்கு முன்னால் குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தபோது பிரயாணம் என்பது அடிக்கடி நிகழ்ந்தது. மூன்று நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை என்றால் பிரயாணித்து விடுவோம். காலை கிளம்பி மாலை வீட்டுக்குத் திரும்பும் சிறு பிரயாணமும் மேற்கொண்டுள்ளோம்.

பெரும்பாலும் வாடகை காரில் காலையில் இரண்டு பைகளில் துணிமணிகளை அடுக்கிக்கொண்டு கிளம்பிவிடுவோம். பகல் முழுவதும் பிரயாணம், போகும் வழியில் சாப்பாடு, திட்டமிட்ட ஊரில் விடுதியில் இரவில் தங்கிவிடுவது அல்லது வீடு வந்து சேர்வது. பெரும்பாலும் கோவில்கள், பரிகார தளங்கள் என்றே பிரயாணம் திட்டமிடப்பட்டது..

குழந்தைகள் சற்று பெரியவர்கள் ஆகும்போது கோவில்களைக் குறைக்கும்படி, அல்லது தவிர்க்கும்படி கட்டளை பிறந்தது. சுற்றுலா தளங்கள், மலைப் பிரதேசங்கள், அருவி மற்றும் சீதோசனம் குறைவான பகுதிகள் என்று மாறியது. சொந்தக்காரர்களின் விசேஷங்கள் வெளியூரில் நடந்தால் அதனைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கும் இடங்கள் சென்று பார்ப்பது என்று பரிணாம வளர்ச்சி பெற்றது பிரயாணங்கள்.

எப்படிப்பார்த்தாலும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பிரயாணம் நிச்சயம். விடுமுறை நாட்கள், பொருளாதாரம், மனோநிலை, தேவைகள் பொறுத்துக் இவைக்கூடியும் குறைந்தும் அமையும்.

குழந்தைகள் பத்து பன்னிரண்டு என்று வகுப்புகள் கூட, படிப்பில் மிகவும் தீவிரமாகிப் படித்தார்கள் என்று சொல்லமுடியாது, பொதுப்புத்தியால் பிரயாணங்கள் குறைந்தது. இன்னும் மேல்படிப்பு மற்றும் வேலை என்றான பிறகு எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாட்கள் கிடைப்பது அரிதாகியது. அவர்களின் விருப்பங்களும் மாறுபட்டது.

ஆளுக்கு ஒரு இடத்தை சொல்லி சாதக பாதக சச்சரவுகள் ஏற்பட்டு, விவாதங்களாகி, அவன் சொன்ன இடத்திற்குப் போனால் நான் வரவில்லை, அவள் சொன்ன இடத்திற்கு நான் வரவில்லை என்று ரசாபாசமாகி, எங்கும் போகவேண்டாம் என்று முடிவினில் முடிந்தன பிரயாண திட்டங்கள். குடும்பத்துடன் இணைந்து போகும் சுற்றுலா, சண்டைக்கு வழிவகுக்கும் வரை சென்றுவிட்டது.

இதையும் படியுங்கள்:
வாஞ்சி மணியாச்சி: வரலாறும், இயற்கையும் இணைந்த பயணம்!
Why are trips being avoided?

குலதெய்வ கோவில் யாத்திரை வருடத்திற்கு ஒரு முறையாவது போக வேண்டும் என்று சூளுரைத்து மூன்று வருடத்திற்கு ஒருமுறையாவது என்று தளர்த்தப்பட்டு, முடியும்போது போகலாம் என்றாகி பின்னர் அதுவும் தவிர்க்கப்பட்டது.இதன் நடுவில், குலதெய்வம் நமக்கு அது இல்லை இது என்று குலதெய்வ கோவில்களே மூன்றாகிப் போன நிகழ்வும் நடந்தது. ஒன்றுக்கே முடிவதில்லை மூன்றானால் என்னாவது. போனால் மூன்றுக்கும் போகவேண்டும் என்று சர்ச்சையாகி, எந்தவொரு தெய்வமும் கோபித்துக்கொள்ளாமல் இருக்க மூன்றுக்கும் போவதைத் தவிர்த்தோம்.

பிரயாணத்தின் தன்மையும் இப்போது மாறிவிட்டது. இரண்டு நாட்கள் போய் வந்தால், அங்குள்ள அனைத்து பார்க்க வேண்டிய இடங்களையும் நேரம் குறித்துத் திட்டமிட்டு ஓயாமல் சுற்றி முடித்துவிட்டுத்தான் விடுதியோ, வீடோ திரும்புவோம். பரபரப்பு வாழ்க்கையிலிருந்து விடுபட்டு பிரயாணம் மேற்கொள்ளுவது மேலும் படபடப்பை அதிகரிக்கவா என்று உடம்பும், மனமும் கேட்கத்துவங்கியது. வேறு ஊருக்குச் சென்று அமைதியாகத் தங்கிவிட்டு வருவதுதான் சுற்றுலா, அதுவே புத்துணர்ச்சியைத் தரும் என்ற எண்ணவோட்டம் கூடியது.

ஒன்று அல்லது இரண்டு கோவில்களுக்கு மட்டும் செல்வது என்றும் அருவி அல்லது மலைப் பிரதேசங்கள் செல்வதே சுற்றுலா என்றும் பதினெட்டு சித்தர்களில் யாரோ ஒருவர் எங்களுக்கு ஞானம் போதித்தார் போலும்.நாள் முழுக்க சுற்றாமல், இப்படியும் ஒன்றிரண்டு சுற்றுலா சென்றோம்.

குடும்ப உறப்பினர்களின் தனித்த பிரயாணங்கள் சாத்தியப்பட்டது. கூட வேலை செய்பவர்களின் கல்யாணம், நண்பர்களுடன் சுற்றுலா என்று குடும்பமே திசைக்கு ஒரு பக்கமாக பிரிந்தது. நானும் மனைவியும் மட்டும் பிரயாணிக்க திட்டமிட்டால் எத்தனாவது ஹனிமூன் என்று கிண்டலடிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பயணத்திற்கு தயாராகும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Why are trips being avoided?

ஒரு கட்டத்தில் வேலைக்கு போய் வருவதே பிரயாணம் என்று ஆகிப்போனது. சௌகரியங்கள் நிறைய தேவைப்பட்டது அதற்கு தகுந்த பிரயாண பணத்தேவைகள் அதிகரித்தன.அதற்கு செலவழிப்பதை, மூன்று பவுன் வாங்கலாமே, பெரிய டிவி வாங்கலாமே என்று எண்ணங்கள் திசைமாறின. அவையெல்லாம் வாங்கியாதலும், வாங்காமல் விட்டதாலும், பிரயாணங்கள் அரிதாகி கடைசியாக எப்போது குடும்பத்துடன் பிரயாணம் போனோம் என்றே மறந்துவிட்டது.

பிரயாண புத்தகங்கள் படித்து கற்பனை பிரயாணங்கள் மட்டுமே சாத்தியமாகிப்போனது. இப்போதெல்லாம் பராயண யூடுப் சேனல்களை பார்த்து திருப்தி அல்லது ஏக்கம் கொள்ளுவது என்பதே நடைமுறை சாத்தியம் என்றாகிவிட்டது. பிரயாணிப்பதில் ஏற்படும் அனுபவமும் திருப்தியும் இவை தரவில்லையென்றாலும் சாத்தியப்பட்டதை ஏற்றுக்கொள்ள மனம் பழகி வருகிறது. அடுத்த பிரயாணம் மேற்கொள்ளும் வரை இதுவே நிதர்சனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com