
சுவிட்சர்லாந்து, மேற்கு, மத்திய, தெற்கு ஐரோப்பா ஆகியவற்றின் சங்கமத்தில் ஆல்ப்ஸ் மலையால் சூழப்பட்டுள்ள நாடு. உலகின் மிகவும் தொன்மையான , மக்கள் ஆட்சியை உடைய வரலாற்றினைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து விளங்குகிறது. 1815 ம் ஆண்டிலிருந்து சுவிஸ் சர்வதேச அளவில் எந்த போரிலும் பங்கெடுத்திருக்கவில்லை. சுவிட்சர்லாந்து 26 மாநிலங்களைக்கொண்ட கூட்டாட்சி குடியரசாகும். ஜெர்மன் பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ரோமானிஸ் ஆகிய நான்கு தேசிய மொழிகள் கொண்ட ஒரு கூட்டாட்சியைத் தழுவிக்கொண்ட நாடு.
உலகின் தலைசிறந்த நாடாக சுவிட்சர்லாந்து இருக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரிந்து கொள்வோமா?. உலகின் புத்திசாலி நாடுகளைத் தேர்வு செய்வது எளிதான செயல் அல்ல. ஆனால் "வேர்ல்டு ஆப் கார்டு கேம்ஸ் (World of Card Games) " வெளியிட்ட புதிய ஆய்வு இந்த விஷயத்தில் ஒரு சிறப்பான தரவரிசையை வழங்கியுள்ளது. நோபல் பரிசு அமைப்பு, உலக மக்கள் தொகை ஆய்வு மையம், இங்கிலாந்து புள்ளியியல் துறை மற்றும் அமெரிக்கா சென்சஸ் பியூரோ அமைப்பு போன்ற உலகின் மதிப்புமிக்க அமைப்புகளின் தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து 92.02/100 மதிப்பெண்களுடன் உலகின் புத்திசாலிகள் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது புத்திசாலித்தனத்திற்கான பல காரணிகளை உள்ளடக்கியது: 1,099 நோபல் பரிசு பரிந்துரைகள்,99.24 IQ சராசரி, 40.02% பேர் குறைந்தது பட்டம் (Bachelor’s degree) பெற்றுள்ளனர், 18.05% பேர் மாஸ்டர் பட்டம் (Master’s degree) பெற்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் உயர் வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலைத்தன்மை, கல்வி அமைப்பு, சிறந்த தலைசிறந்த பாதுகாப்பு மற்றும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலையை சீராக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் என்னும் ஐந்து விஷயங்கள், உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்க காரணமாக அமைந்துள்ளன. சுவிட்சர்லாந்து தங்க சுத்திகரிப்புக்கு பெயர் பெற்ற நாடு, இங்கு தங்கத்திற்கு குறைவான வரியே விதிக்கப்படுவதால், இந்தியாவை விட இங்கு தங்கம் விலை மலிவாக கிடைக்கின்றது.
தனிநபருக்கான வருமானக் கணிப்பீட்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது.உலகிலேயே தனிநபர் சொத்து மதிப்பீட்டு அளவில் உலகின் மிக பெரிய பணக்கார நாடு சுவிட்சர்லாந்துதான். இங்கு சராசரியாக தனிநபர் ஒருவரின் சொத்து மதிப்பு 6 லட்சம் டாலர்கள்.
உலகில் அதிகளவில் சுதந்திரம் வழங்கும் 12 நாடுகளில் முதலிடத்தில் உள்ளது சுவிட்சர்லாந்து. இதன் உயர்ந்த பொருளாதார மற்றும் தனிப்பட்ட சுதந்திர சித்தாந்தங்களால் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற ஆட்சி, மற்றும் ஜனநாயக வாக்குப்பதிவு முறைகளும் காரணம் ஆகின்றன.
சட்ட மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரியாக நடக்காதபோது, திரும்ப அழைத்துக் கொள்ள வாக்காளர்களுக்கு இங்கு உரிமை உண்டு. இத்தனை வாக்காளர்கள், திருப்பி அழைக்கும் அதாவது, பதவி நீக்கக் கோரிக்கையில் கையெழுத்திட்டால் சட்டமன்ற உறுப்பினர் தம் பதவிக் காலம் முடிவதற்குமுன் விலகி விடவேண்டும். இது அங்கு அரசியல் சட்டம்.
உலகிலேயே சுவிட்சர்லாந்து நாட்டின் குடிநீர்தான் மிகச் சிறந்தது என்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு. சுவிட்சர்லாந்தின் குடிநீரில் பெருமளவு நீரோடைகள், ஆறுகள், பனிப்பாறைகள் மற்றும் 1,500 ஏரிகளிலிருந்து கிடைக்கிறது. 80 சதவிகிதம் அளவுக்கு இயற்கை ஊற்றுகளிலிருந்தும், நிலத்தடி நீரிலிருந்தும் நீர் பயன்பட, மீதமுள்ள நீர் ஏரிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
இரவு நேரத்தில் கழிவறை பிளஷ் செய்வதை சுவிஸ் அரசு 'ஒலி மாசு' (Sound Pollution) எனக் கருதுகிறது. சுவிட்சர்லாந்தில் பல வீடுகளில் 'Hausordnung' எனப்படும் வீட்டுத் தடைகளின் கீழ், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை கழிவறை ஃப்ளஷ் செய்யத் தவிர்க்க உத்தர விடப்பட்டுள்ளது.