
கோடை விடுமுறை வந்தாச்சு. வீட்டில் உள்ள குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு, இந்த சுட்டெரிக்கும் வெயிலில் எங்கே உல்லாசப் பயணம் போவது என்று எல்லோரும் சிந்தித்து கொண்டிருப்பார்கள். இதோ சம்மர் விடுமுறைக்கு டூர் போகும்போது...
கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1. டூர் போவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே டூருக்கு கொண்டு போக வேண்டிய நமது ட்ராவெல் பேகுகளில் நமக்கு பயணத்துக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பயணப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்காமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. சுற்றுலா செல்வதற்கு ஒரு வாரம் முன்பு பழைய டைரி ஒன்றில் சுற்றுலாவுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய சாமான்களை நம் நினைவில் வர வர எழுதிக்கொண்டே வாருங்கள். பேக்கிங் சமயத்தில் இந்த டைரி பேருதவியாய் இருப்பதுடன் நம் டென்ஷனையும் பெருமளவில் குறைக்கும்.
3. ஒரு வாரத்துக்கு மேல் நீங்கள் சம்மர் டூர் மேற்கொள்ளுவதாக இருந்தால், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்து, உங்கள் வீட்டுக்குத்தேவையான பாதுகாப்பு தரச் சொல்லுங்கள். காவல்துறை உங்கள் வீட்டை கண்காணிக்க தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
4. வீட்டில் பேப்பர் போடும் பையனிடம் இனி எவ்வளவு நாட்களுக்கு பேப்பர் போட வேண்டாமென்று முன்கூட்டியே தெரிவித்து விடுங்கள். ஏனென்றால் வீட்டு வாசலில் சிதறிக்கிடக்கும் தினப்பத்திரிகை களையும்,வார இதழ்களையும் பார்த்தால் வீட்டில் யாருமில்லையென்று திருடர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள்.
5. சுற்றுலா செல்லும்போது நாம் தினமும் நமது வியாதிகளுக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும். போகுமிடத்தில் வாங்கிக் கொள்ளலாமே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளும் நாம் டூர் செல்லும் இடத்தில் கிடைக்குமென்று சொல்ல முடியாது.
6. நாம் டூர் போகும்போது நம்முடன் வயதான தாய், தந்தை இருந்தால் அவர்கள் தினமும் பயன்படுத்தும் மாத்திரைகளை மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும். தலைவலித் தைலம், வயிறு உபாதைக்கான மருந்துகள், காய்ச்சல், ஜலதோஷம் வந்தால் பயன்படுத்த வேண்டிய மருந்துகளும் நம் கைவசம் இருக்கட்டும்.
7. சம்மர் டூருக்கு உங்கள் வீட்டுக்காரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சுற்றுலா போகும் தேதிக்கு ஒரு வாரம் முன்னாடியே கார் மெக்கானிக்கிடம் கொடுத்து காருக்கு எதாவது தகராறு இருந்தால் அதை சரிசெய்ய சொல்லவேண்டும். நாம் சுற்றுலாவுக்கு பயன்படுத்தும் காரில் எதாவது இயந்திரக்கோளாறு ஏற்பட்டால் அது நமது சுற்றுலாவின் மகிழ்ச்சியை குறைத்துவிடும் என்பதை மறவாதீர்கள்.
8. சுற்றுலாவுக்காக ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போதுதகுந்த சில்லறைகளையும், 10, 20 ரூபாய் நோட்டுகளையும் நம்மிடம் வைத்துக்கொள்ளவேண்டும். இதனால் ரயில்வே பிளாட்பார்மில் டீ, காப்பி, வடை, போண்டா விற்பனையாளர்களிடம் ஏமாறாமல் இருக்கலாம்.
9. குளிர் அதிகமாக இருக்கும் ஹில் ஸ்டேஷனுக்கு டூர் செல்வதாக இருந்தால் கைவசம் கம்பளி, ஸ்வெட்டர், மங்கி கேப் போன்றவை எடுத்துக் கொள்ளவேண்டும்.
10. சுற்றுலாவில் மலை ஏற ஏற, நமக்கு காது அடைப்பதுபோல, குத்துவலிபோல உணர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க மலையேறும் சமயம் வாயில் ஒரு மிட்டாய் அல்லது சாக்லேட்டை போட்டுச் சுவைத்துக்கொண்டே சென்றால் அது போன்ற உணர்வு ஏற்படாது.
11. சுற்றுலா சமயத்தில் கண்ட கண்ட இடங்களில் உணவு சாப்பிட்டால் அது நோய் வருவதற்கு காரணியாக அமைந்துவிடும். எனவே விலை சற்று அதிகமானாலும் உங்கள் உணவுத்தேவைக்கு தரமான உணவகங்களையே நாடுங்கள்.
12. தினவாடகை சற்று அதிகமாக இருந்தாலும் சுற்றுலா சமயத்தில் தங்குவதற்கு, தரமான டூரிஸ்ட் ஹோம்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் நீங்கள் டூர் செல்லும்போது உங்கள் பயணப் பொருட்களும், பணமும் பத்திரமாக இருக்கும்.