
பயணம் செய்து இயற்கை காட்சிகளை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. கோடிக்கணக்கான ஆண்டுகளாகக் கனிமங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் செயல்பாட்டால் வழக்கமான மலைகளைப் போல் அல்லாமல் வண்ண நிறங்களில் காட்சியளிக்கும் 6மலைகளைப் பற்றியும் அவை எவ்வாறு தங்கள் வண்ணங்களைப் பெற்றன என்பதையும் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.
ஜாங்யே டான்ஷியா மலைகள் கான்சு மாகாணத்தின் வறண்ட பகுதியில் சிகப்பு, ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறங்களில் இயற்கையானவையாக இருந்தாலும் செயற்கையானவைப்போல தனித்து காட்சி தருகின்றன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக அடுக்கப்பட்ட மணற்கல் (sandstone) மற்றும் கனிமங்களிலிருந்து வரும் இந்த வண்ணங்கள், இயற்கையான அரிப்பினால் வெளிப்படுத்தப்பட்டு கையால் வரையப்பட்டதுபோல தோற்றமளிக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த அடுக்குகள் சிகப்பு நிறங்களையும், மற்ற கனிமங்கள் வேறுபட்ட நிறங்களையும் சேர்ப்பவையாக இருக்கின்றன.
அர்ஜென்டினாவின் ஜுஜுய் மாகாணத்தில் தனித்துவமாக அமைந்துள்ள ஹார்னோகல் மலைத்தொடர், 14 வண்ணங்களின் (shades) தொகுப்பாக விவரிக்கப்படுகிறது. பண்டைய சுண்ணாம்புக்கல் மற்றும் காலப்போக்கில் கனிம மாற்றங்களுக்கு உட்பட்ட பிற படிவுகளிலிருந்து உருவான இந்த அடுக்குகள் , புவி மேலோட்டின் நகர்வுகள் மேல்நோக்கித் தள்ளியதால் புதைந்திருந்த பொருள் பல வண்ணங்களைக் கொண்ட மலை முகப்பாக மாறியது.
சமீபத்தில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட தளங்களில் ஒன்றாக மாறியுள்ள 'ரெயின்போ மவுண்டன்' (Rainbow Mountain) என்றும் அழைக்கப்படும் பெருவின் வினிகுன்கா மலை, இரும்பு தாமிரம் போன்ற கனிமங்களின் ஆக்சிஜனேற்றம் (oxidation) காரணமாக சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை பட்டைகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. பனி மற்றும் பனியாறுகளுக்கு அடியில் இந்த மலை பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்து சமீபத்தில் பனி உருகத்தொடங்கியபோது, வண்ணங்கள் மெதுவாக வெளிப்பட்டன.
ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெயின்டட் ஹில்ஸ், உயரமாக இல்லாமல் சிகப்பு கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் தனித்துவமான பட்டைகளை காட்டி வெவ்வேறு சுற்றுச்சூழல் சகாப்தங்களை குறிக்கிறது. வெப்பமான, ஈரமான சூழ்நிலையின் கீழ் சிகப்பு நிறங்களும், லிக்னைட்டாக மாறிய பழைய தாவர பொருட்களில் கருப்பு நிறம் இருந்து வருவதோடு, வண்ணமயமான மற்ற மலைகளைப் போலல்லாமல், ஈரப்பதத்தின் அளவைப் பொறுத்து இங்குள்ள வண்ணங்கள் லேசாக மாறுகின்றன.
மொரீஷியஸின் சாமரெல் கிராமத்திற்கு அருகில், சிகப்பு, நீலம், மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களில் கோடு போட்டது போலத் தோற்றமளிக்கும் மணல் மேடுகள், எரிமலைப் பாறைகள் உடைந்து கனிமங்கள் நிறைந்த மணலாக மாறியதன் விளைவாக இவ்வாறு காட்சி தருகின்றன. மழை அல்லது காற்றிற்கு பிறகும் இந்த மணல்கள் ஒன்றோடு ஒன்று கலக்காமல் பிரிந்து இருப்பது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி விஞ்ஞானிகளை குழப்பமடையச் செய்து அரிய புவியியல் அம்சமாக உள்ளது.
ஆண்டீஸ் மலை அடிவாரத்திற்கு அருகில் இருக்கும் புர்மாமார்கா நகரம் 'ஏழு வண்ணங்களின் மலை'க்கு தாயகமாக உள்ளதோடு, அர்ஜென்டினாவில் , கண்கவர் புவியியல் தளமாக உள்ளது. புவியின் வெவ்வேறு காலங்களில் களிமண், மணற்கல் மற்றும் தாமிர ஆக்சைடுகள் போன்ற பல்வேறு கனிமங்கள், படிந்ததன் விளைவாக உருவான இந்த பச்சை ஊதா இளஞ்சிவப்பு நிற அடுக்குகள் சில நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.
மேற்கூறிய வண்ண மலைகளை வாழ்வில் ஒரு முறையேனும் காண முயற்சிப்போம்.