
இமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் (Kinnaur) மாவட்டத்தில் உள்ள யுல்லா காண்டாவில் (Yulla Kanda) உலகின் மிக உயரமான கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை மலையேற்றம் மூலம் மட்டுமே அணுக முடியும். யுல்லா ஏரியின் கரையில் அமைந்துள்ள இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,778 அடி (3,895 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இந்த உலகின் மிக உயரமான கிருஷ்ணர் கோவில் உள்ளூர் மக்களால் பக்தியுடன் வணங்கப்படுகிறது.
புராணக்கதை:
இமாச்சலப் பிரதேசத்தின் தேவ் பூமியில் அமைந்துள்ள கின்னார் மாவட்டத்தில் உள்ள ரோரா (Rora) பள்ளத்தாக்கில் யுல்லா காண்டா அமைந்துள்ளது. யுல்லா ஏரியை பாண்டவர்கள் வனவாசத்தின்போது உருவாக்கியதாக நம்பப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் கிருஷ்ணருக்காக இக்கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் புராணங்களின்படி, ஒரு பாரம்பரிய கின்னௌரி தொப்பியை எடுத்து கோவிலின் அருகே ஏரியில் தலைகீழாக மிதக்க விட வேண்டும். தொப்பி மூழ்காமல் ஆற்றின் எதிர்கரையை அடைந்தால் எதிர்காலத்தில் அமைதியும், நிறைவான வாழ்க்கையையும் காண முடியும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
யுல்லா ஏரி கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கிருஷ்ணர் கோவிலை அடைவதற்கு மலையேற்றம் செய்துதான் அடைய முடியும். ஒரு மிதமான கடினமான மலையேற்ற பாதையான இது இயற்கை, ஆன்மீகம் மற்றும் சிறந்த கலாச்சார அனுபவத்தை வழங்குகிறது.
யுல்லா காஸ் கிராமத்திலிருந்து இந்த மலையேற்றம் தொடங்குகிறது. இதன் ஒருவழிப் பயண தூரம் சுமார் 12 கிலோமீட்டர் ஆகும். இந்த மலையேற்றத்தை முடிக்க சுமார் நான்கு முதல் ஆறுமணி நேரம் வரை ஆகும். யுல்லா காஸ் கிராமத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்கினால் கின்னௌரி ஆப்பிள்கள், காட்டுப் பூக்கள், அழகான நீர் ஓடைகள் ஆகியவற்றை கண் குளிர கண்டு கொண்டே செல்லலாம். மலைப்பாதை செங்குத்தானது மற்றும் மிதமான சவாலானது. ஆனால் வழி நெடுகிலும் பிரமிக்க வைக்கும் ஆல்பைன் புல்வெளிகள், உயர்ந்த பைன் மரங்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலை ஆகியவை நம் கண்ணை கவர்கின்றன.
அடிப்படை முகாமை அடையும் இடத்தில் மேகி மற்றும் ராஜ்மா சாவல் போன்ற எளிய உணவுகள் கிடைக்கின்றன.
மலையேற்றத்திற்கு சிறந்த நேரம்:
யுல்லா காண்டா மலை ஏற்றத்தை மேற்கொள்ள சிறந்த நேரம் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வரையாகும். அப்பொழுது வானிலை மிகவும் சாதகமாக இருக்கும். மிதமான வெப்பநிலையும், கனமழைக்கோ, பனிக்கான வாய்ப்புகளோ குறைவாக இருக்கும். இக்கால கட்டத்தில் எங்கும் பசுமை மற்றும் விதவிதமான காட்டுப் பூக்கள் மலையேற்றத்தின் அழகை மேம்படுத்தும். பாதைகள் மிகவும் அணுகக் கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
எப்படி செல்வது?
சிம்லாவில் இருந்து கின்னௌர் மாவட்டத்தில் உள்ள தப்ரிக்கு சென்று(பஸ் மற்றும் தனியார் டாக்ஸி வசதிகள் உள்ளது) அங்கிருந்து யுல்லா காஸ் கிராமத்திற்கு செல்லலாம். மலையேற்றத்திற்கு ஹைகிங் பூட்ஸ், சூடான ஆடைகள், முகாம் உபகரணங்கள், போதுமான ஸ்னாக்ஸ் ஐட்டங்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை எடுத்துச்செல்வது நல்லது.
அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:
யுல்லா காண்டா மலையேற்றத்திற்கு அருகில் உள்ள கிராமமான சராஹன், பீமகாளி கோவில் மற்றும் ஸ்ரீ கண்ட் மகாதேவ் கோவில், சட்லெஜ் நதிக்கரையில் அமைந்துள்ள ராம்பூர் புஷாஹர் கிராமம் போன்றவை பாரம்பரிய ஹிமாச்சல வாழ்க்கையைப் பற்றிய அழகான ஒரு பார்வையை வழங்குகிறது.