
'மலைகளின் இளவரசி' என்று போற்றப்படும் கொடைக்கானலின் பழமையான கிராமங்களில் வெள்ளகவி கிராமமும் ஒன்று. 400 ஆண்டுகள் பழமையான இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் போக்குவரத்து வசதி மற்றும் சரியான சாலை வசதி இல்லை.
ஆனால் இதமான வானிலை கொண்டு சொர்க்க பூமியாக திகழும் வெள்ளகவி கிராமம் நகரத்தின் சலசலப்பின்றி அமைதியை விரும்பும் மக்களுக்கு சிறந்த விருப்பமான இடமாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டாரத்தில் வெள்ளகவி எனும் அழகு கொஞ்சும் கிராமம் அமைந்துள்ளது. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து வட்டக் காணலுக்கு ஜீப்பிில் சென்று வெள்ளகவி கிராமத்திற்கு செல்லலாம்.
பசுமையான மலைகளும், வெள்ளைப் பனி படர்ந்த முகடுகளும், மேகங்களும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். வட்டக்கானல் போவதற்கு முன்பே கொடைக்கானல் பஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள உணவகங்களில் நமக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்கிச் சென்றுவிடுவது நல்லது.
வெள்ளகவி கிராமத்தில் டீ கடையைத் தவிர பெரிதாக ஒன்றும் கடைகள் இல்லை. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கானல். அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் கண்ணுக்கு இனிமையான, குளிர்ச்சியான வெள்ளகவி கிராமத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம். காலை நேரப்பயணம் மிகவும் சுகமாக இருந்தது.
டால்ஃபின் நோஸிலிருந்து ஐந்து நிமிடம் நடந்தால்போதும் மிகச் சிறந்த வியூ பாயிண்ட் நம்மால் பார்க்க முடியும். வியூ பாயிண்டில் இயற்கை காட்சிகளை நன்கு ரசித்துவிட்டு வெள்ளகவி கிராமத்தை நோக்கி நடையை கட்டவேண்டியதுதான்.
வெள்ளகவி கிராமத்தில் இரவு தங்கி அடுத்த நாளும் கிராமத்தைச் சுற்றி பார்க்க விரும்புபவர்கள் ஆன்லைனில் முதலிலேயே தங்குவதற்கு இடத்தை புக் செய்துவிடலாம். தரமான தங்குமிடமும், உணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார்கள். கொடைக்கானலுக்கு வெள்ளைக்காரர்கள் முதன்முதலாக வெள்ளகவி பாதை வழியாகத்தான் சென்று கொடைக்கானலை கண்டுபிடித்தார்கள் என்று கூறப்படுகிறது.
அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் குதிரையிலும், பல்லக்கிலும் கொடைக்கானலுக்கு வெள்ளகவி வழியாகவே சென்று வந்திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. இந்த கிராமத்திற்கு கொடைக்கானல் வட்டகானலில் இருந்து மட்டுமின்றி கும்பக்கரை அருவி வழியாகவும் செல்ல வழிகள் உள்ளது. ஆனால் வன விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் வனத்துறை அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் செல்ல இயலாது.
போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இங்குள்ள மக்கள் குதிரையைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில்தான் கொடைக்கானலுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்வதும், போய் வந்து கொண்டும் இருக்கிறார்கள். கொடைக்கானல் வரை பஸ்ஸில் பயணம் செய்து அங்கிருந்து ஜீப் அல்லது காரில் பயணம் செய்து அங்கிருந்து மலையில் இறங்கும் பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும்.
போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடையாது. இருப்பினும் ரம்யமான அந்த இடத்தைக்காண மக்கள் வருகிறார்கள். ட்ரெக்கிங் செல்ல விரும்புவோர் கொடைக்கானலுக்கு அருகில் உள்ள வெள்ளகவி கிராமத்திற்கு வருகிறார்கள். கிராம சூழலை அனுபவிக்கவும் சுற்றி பார்க்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.