
பச்சைப் போர்வை போர்த்திய எழில்மிகு மலைகள், கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மேகங்கள், உடலுக்கு மட்டுமல்லாது மனதிற்கும் குளிர்ச்சி தரும் தட்பவெப்பநிலை, பாறைகளுடன் விளையாடியபடி ஓடி வந்து நம் கண்முன்னே விழுந்து நம்மை மகிழ்விக்கும் அருவிகள் என இயற்கையின் ஆதிக்கம் அதிகம் நிறைந்திருக்கும் இடம் ஊட்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் உதகமண்டலம். ஊட்டியில் நாம் காண வேண்டிய இடங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மலை ரயில்
ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயிலை தினந்தோறும் இயக்குகிறார்கள். இரண்டு பக்கமும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள், பூத்துக் குலுங்கி நம்மைப் பார்த்து தலையசைக்கும் வண்ண வண்ண பூக்கள் இவை யாவும் கண்களுக்கு இயற்கை தரும் விருந்து. சுவாரசியமான இந்த இரயில் பயணம் சுமார் ஐந்து மணி நேரம் நீடிக்கிறது. வழியில் மலைகளைக் குடைந்து குகைப் பாதைகளை அமைத்திருக்கிறார்கள்.
தொட்டபெட்டா
நீலகிரி மாவட்டத்தின் மிக உயரமான இடம் ஊட்டியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொட்டபெட்டா. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2623 மீட்டர் உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு தொலைநோக்கி நிலையத்தை அமைத்துள்ளார்கள். சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக இயற்கைக் காட்சிகளை வெகு அருகில் கொண்டு வந்து ரசிக்கலாம். ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் பேருந்தில் ஏறினால் தொட்டபெட்டா ஜங்ஷனில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஷேர் ஜீப்பில் தொட்டபெட்டாவை அடையலாம்.
தாவரவியல் பூங்கா
ஊட்டியில் மிகவும் புகழ்பெற்ற ஒரு இடம் தாவரவியல் பூங்கா. 1847 ல் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா 22 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த பூங்கா தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
ரோஜாப் பூங்கா
தாவரவியல் பூங்காவிலிருந்து அருகில் அமைந்துள்ள ரோஜாப் பூங்காவிற்குச் செல்லலாம். உலகின் சிறந்த பதினைந்து ரோஜாத் தோட்டங்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையினைப் பெற்றுள்ளது. இந்த பூங்கா சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தியாவிலேயே அதிக அளவிலான ரோஜாச் செடிகளைக் கொண்ட பூங்கா என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த பூங்காவில் சுமார் 3600 வகையான ரோஜாச் செடிகள் அமைந்துள்ளன.
படகுத்துறை
விடுமுறைகளில் குடும்பத்தோடு படகுச் சவாரி செய்வது மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். ஊட்டியில் அமைந்துள்ள இந்த செயற்கை ஏரி சுமார் மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்டது. இங்கு பெடலிங் போட் வசதியும் இருக்கிறது.
குன்னூர்
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வழியில் ஊட்டியிலிருந்து இருபது கிலோமீட்டருக்கு முன்னால் அமைந்துள்ள இடம் குன்னூர். ஊட்டியிலிருந்து ஏராளமான பேருந்துகள் குன்னூருக்கு இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரப்பயணம்தான்.
டால்ஃபின் நோஸ்
குன்னூரிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு வியூபாயிண்ட் டால்பின் நோஸ். இங்கிருந்து நின்று பார்த்தால் கேதரின் நீர்வீழ்ச்சியைக் கண்டு களிக்கலாம். டால்பின் நோஸ் போகும் வழியில் அமைந்துள்ள மற்றொரு வியூபாயிண்ட் லேம்ப்ஸ் ராக். இந்த இடத்தில் நின்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாம். இந்த இரண்டு இடங்களிலும் வியூபாயிண்ட்டை அமைத்துள்ளார்கள்.
சிம்ஸ் தாவரவியல் பூங்கா
குன்னூரில் சிம்ஸ் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. குழந்தைகள் விளையாட நிறைய வசதிகள் இருக்கின்றன. ஒரு சிறிய நீச்சல் குளமும் இருக்கிறது. சிம்ஸ் பூங்காவிற்கு அருகில் ஊட்டியில் விளையும் அரிதான சீசனல் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஊட்டி வர்க்கி
ஊட்டிக்கு புகழ் சேர்க்கும் ஒரு பேக்கரி உணவு வர்க்கி. பேக்கரிகளில் கிடைக்கும் இந்த பிஸ்கட் போன்ற பொருள் மிகவும் சுவையுடையது. மேலும் இங்கு சாக்லேட் பர்பியும் மிகவும் பிரபலம்.
அவசரமயமான உலகத்தில் ஏதோ ஒன்றைத்தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதற்கு பரிசாகக் கிடைப்பதோ மனஅழுத்தமும் வியாதிகளும்தான். மனதை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்க வருடத்திற்கு ஒரு முறையாவது ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.