

வியட்னாமின் பனாமலைகளில் (Ba Na Hills) உள்ள தங்கப்பாலம் (Golden Bridge), டா நாங் நகரத்திற்கு அருகில் உள்ள பனா ஹில்ஸ் ரிசார்ட்டில் அமைந்துள்ளது. இது ஒரு பாதசாரி பாலமாகும். டா நாங்கில் உள்ள தங்கப்பாலம் மாபெரும் இரண்டு ராட்சத கல் கைகளால் தாங்கப்படுவதுபோல் தோற்றமளிக்கிறது. இது சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை வழங்குகிறது. இந்த பாலம் கேபிள் கார் மூலம் மட்டுமே அணுகமுடியும். இது ஏப்ரல் 2018 இல் கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 2018ல் சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இது பயணிகளின் இதயங்களைக் கவர்ந்த ஒரு அற்புதமான கட்டிடக்கலையாக திகழ்கிறது.
புத்தர் கைப் பாலம்:
இந்த தங்கப்பாலத்தை ராட்சத கைப்பாலம், புத்தர் கைப்பாலம் என்றும், புராண பாலம் என்றும் அழைக்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து 1,414 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் மொத்தம் 150 மீட்டர்(சுமார் 490 அடி) நீளம், 12.8 மீட்டர் அகலம் மற்றும் 8 நீட்டங்களை கொண்டுள்ள இந்த பாதசாரி பாலம் பனா கேபிள் கார் நிலையத்திற்கும் சுற்றியுள்ள தோட்டங்களுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாகவும், உலகம் முழுவதிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு சிறந்த இடமாகவும் உள்ளது.
வடிவமைப்பு:
பனாமலையிலிருந்து நீண்டு செல்லும் இரண்டு பாசி படிந்த கைகளால் தழுவப்பட்ட ஒரு பட்டுத் துண்டுபோல இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வித்தியாசமான வடிவமைப்பு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது. இது வியட்நாம் மற்றும் உலகின் கலாச்சார பரிமாற்ற நடவடிக்கைகள், சிறந்த ஃபேஷன் நிகழ்ச்சிகளுக்கான இடமாகவும் மாறியுள்ளது.
பளபளப்பான டைட்டானியம் பூசப்பட்ட துருப்பிடிக்காத எஃகு பூசப்பட்ட எஃகு தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே சூரிய ஒளி படும்பொழுது ஒரு மாறுபட்ட பிரதிபலிப்பை உருவாக்குகிறது. இதனால் தங்கப்பாலம் பிரகாசமாக மலைகள் மற்றும் காடுகளுக்கு இடையில் தனித்து நிற்கிறது. இந்த கைகள் பாறை மலைகளில் இருந்து உருவாக்கப்பட்டவைபோல் காணப்பட்டாலும் உண்மையில் கை குழாய் எஃகு தூண்கள், கம்பி வலை மற்றும் கண்ணாடியிழை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க பாலத்தை பார்வையிடுவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வ வலைதளங்கள் உள்ளன.
உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ள இந்த கோல்டன் பிரிட்ஜ் உலகின் மிகச்சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. "உலகின் முதல் 10 புதிய அதிசயங்கள்" பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இது தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகப் பயண விருதுகளில் "உலகின் முன்னணி சுற்றுலா ஈர்ப்பு பாலம்" என்றும் சிறப்பு பெற்றது.
செல்ல சிறந்த நேரம்:
கோல்டன் பிரிட்ஜ் மற்றும் பனா ஹில்ஸை பார்வையிட சிறந்த நேரம் ஜனவரி முதல் ஜூலை வரை. இந்த நேரத்தில் இங்கு பல திருவிழாக்களும் நடத்தப் படுகின்றன. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான குளிர் மாதங்களில் லேசான ஜாக்கெட் அல்லது குடையை எடுத்துச்செல்ல மறக்கவேண்டாம். வியட்நாமில் உள்ள பனா ஹில்ஸ் மற்றும் கோல்டன் பிரிட்ஜ் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலமாகும். இது ஒரு மறக்க முடியாத பயண அனுபவங்களைத் தரும். அனுபவித்துப் பாருங்கள்!