

பயணம் எல்லோருக்கும் பொதுவானது. பயணம் மேற்கொள்ளும் பொழுது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு விட்டீர்களா? குடை, செல், சார்ஜர் என்று வரிசையாக ஞாபகப்படுத்துவார்கள். நாமும் ஒவ்வொன்றாகப் பார்த்து சரி செய்து கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டோம். பயப்படாதீர்கள் போய் வருகிறோம் என்று கூறி புறப்படுவோம்.
அதை பயணம் செய்யும் பொழுதும், பயணம் முடிந்து அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து எழுந்திருக்கும் பொழுது நாம் கொண்டு சென்ற பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு விட்டோமா? எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று ஒருமுறை எழுந்திருக்கும் பொழுது அந்த இடத்தை பார்த்து விட்டு எழுந்திருப்பது அவசியம்.
ஒரு பயணத்தின் பொழுது எங்களுக்குப் பின்புறம் அமர்ந்திருந்த வயதான தம்பதிகள் காஸ்ட்லியான செல்போன் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். இறங்கும் பொழுது கையில் வைத்திருந்ததை நழுவவிட்டு விட்டு இறங்கியவர்கள் வேகமாக சென்றுவிட அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அந்தப் போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
எவ்வளவுசத்தம் போட்டு அழைத்தும் அவர்கள் இந்த பக்கம் அந்த பக்கம் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டனர். ஆதலால் கையில் செல்போனுடன் ட்ரெயின் மற்றும் பேருந்துகளில் இருந்து இறங்குபவர்கள் சற்று நிதானிக்க வேண்டும். செல்லை கைப்பைகளில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். பிறகு எடுத்துப் பயன்படுத்தலாம்.
அதேபோல் பேருந்து, ரயில் நிறுத்தங்களில் இறங்கும் சமயத்தில் யாராவது செல்லில் அழைத்தால் பதில் பேசாமல் இறங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு பேசுங்கள். இல்லையேல் செல்போன் தவறி தண்டவாளங்களுக்கு அடியில் போகும் வாய்ப்பை கவனிக்க முடிந்தது.
ட்ரெயின், பஸ் போன்றவற்றிலிருந்து இறங்கும் சமயத்தில் கையில் இருக்கும் செல்போனை மற்றவரின் கைகளுக்கு மாற்றாதீர்கள். அவர்கள் வாங்கும் பொழுது கை தவறி கீழே விழுந்து உடைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதோடு வழிப்பறி கொள்ளையர்கள் கையில் சிக்குவதற்கும் சரியான சந்தர்ப்பம் அதுதான்.
அதேபோல் புதிதாக செல்போனை வாங்கி டூவீலரில் பயணித்துக் கொண்டே அதை தோண்டி துருவி பார்த்துக் கொண்டே வராதீர்கள். இதனால் பின்புறமாக வந்த பெரிய லாரியில் அடிபட்டு அதே இடத்தில் உயிர் பிரிந்த அந்த வாலிபரைக் கண்டு உறவினர்கள் ஒன்று சேர்ந்து அழுது அரற்றிய அவலம் உயிரையே உலுக்கியது.
அதேபோல் பயணங்களின் பொழுது தூங்கும் நேரத்தில் சத்தம் போட்டு செல் ஸ்பீக்கரில் உரையாடாதீர்கள். அது மற்ற பயணிகளுக்கு குறிப்பாக உடல் நலம் சரியில்லாமல் ஆபரேஷன் செய்து கொண்டு ரயிலில் பயணிப்பவர் களுக்கு துன்புறுத்தலாக அமையும். அதேபோல் தூங்கும் நேரத்தில் செல்போனை ஆஃப் செய்து வைத்துவிடுவது அவசியம். இல்லை என்றால் அந்த நோட்டிபிகேஷன் சவுண்ட் அனைவரையும் பாதிக்கும்.
குறிப்பாக செல்போன் வந்ததால் எல்லாவிதமான தகவல் தொடர்புகளுக்கும் வசதியாக வழி வகுத்தது உண்மைதான். இருக்கும் இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் முடித்தும் விடலாம். ஆனபோதிலும் அதனால் நிகழும் துயர சம்பவங்களும் அதிகமே.
ஆதலால் அந்தக் கையடக்க கருவியை தேவையானபொழுது மட்டும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அல்லல்படாமல், மற்றவர்களையும் அல்லல்படுத்தாமல் பாதுகாப்பாக அதை வைத்திருப்பது நம் கையில்தான் உள்ளது. ஆதலினால் பயணம் மேற்கொள்பவர்கள் இதில் கவனம் செலுத்துவது அவசியம்.