
கொரோனா தொற்று, சீன எல்லை பிரச்னையால் நிறுத்தப்பட்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஜூன் 30 அன்று புதுடில்லி லிபுலேக் வழியாக தொடங்க இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 13 2025 கடைசி தேதியாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் யாத்ரீகர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
யாத்ரீகர் செப்டம்பர் 1ஆம் தேதி குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
நடப்பு ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதிப்படி 18 வயது முதல் 70 வயது இருக்க வேண்டும்.
உடல் நிறை குறியீட்டெண் அதாவது யாத்திரை செல்பவரின் பிஎம்ஐ 25 அல்லது அதற்கும் குறைவான பிஎம்ஐ உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தப் பயணத்திற்குச் செல்லும் நபர் உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
வெளிநாட்டினர் இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. அதே போல், வெளிநாட்டு இந்திய குடிமகன் அதாவது ஓசிஐ (OCI) அட்டை வைத்திருப்பவர்களும் இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும்போது செய்ய வேண்டியது
மானசரோவர் யாத்திரைக்கு பரிந்துரைக்கப்பட்ட வலைதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும். கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான குலுக்கல் முறையிலான தேர்வு, கணினி மூலம் நடத்தப்படுவதால் விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு இருப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யாவிட்டால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படது.
விண்ணப்பிக்கும் நபரின் புகைப்படம் ஜேபிஜே வடிவத்தில் இருக்க வேண்டும். ஒரு கணக்கில் இருந்து இரண்டு விண்ணப்பங்களை மட்டுமே நிரப்ப முடியும் இதற்குப் பிறகு, பாஸ்போர்ட்டில் எழுதப்பட்ட தகவலின்படி ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் பெயர், முகவரி அல்லது வேறு ஏதேனும் தகவலை மறைத்தால், நீங்கள் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்படலாம்.
பயணத்திற்கான தேர்வு எப்படி நடக்கிறது?
பயணிகள் செல்லவேண்டிய பாதை மற்றும் அவர்கள் சேர்ந்து செல்ல வேண்டிய குழு ஆகியவை கணினி முறையிலான குலுக்கலில் (தேர்வுக்குப்) தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். பிறகு, யாத்திரைக்கு விண்ணப்பித்திருந்த ஒவ்வொருவருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமாக, அவர்கள் பதிவு செய்திருந்த மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
இது தவிர, 011-23088133 என்ற உதவி எண் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம். இதன் பிறகு, விண்ணப்பதாரர் 'பயணிகளுக்கான கட்டணம் மற்றும் செலவுகள்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பயணச் செலவுகளை அமைச்சகம் வழங்கிய காலக்கெடுவுக்கு முன்னர் 'குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம்' அல்லது சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.
கட்டணத்தைச் செலுத்திய பிறகு, விண்ணப்பதாரர் டெல்லிக்கு செல்லும் முன்பாகவே ஆன்லைனில் தமது குழுவை (batch) உறுதிப்படுதிய பிறகுதான் அந்தக் குழுவில் சேர்க்கப்பட்டதாக அதிகாரபூர்வமாகக் கருதப்படும்.
பயணத்திற்கு முன்பாக மருத்துவ பரிசோதனைக்கு திட்டமிடப்பட்ட தேதியில் டெல்லியில் உள்ள 'ஹார்ட் அண்ட் லங் இன்ஸ்டிட்யூட்' (Heart and Lung Institute) சென்று பதிவு செய்யவேண்டும். மேலும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், ஆறு பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள் மற்றும் ரூ.100 மதிப்பிலான நோட்டரி சான்றளிக்கப்பட்ட இழப்பீட்டுப் பத்திரத்தை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவசரக் காலங்களில் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றுவதற்கான பிரமாணப் பத்திரமும், சீன பகுதியில் இறந்தால், அங்கேயே சடலத்தைத் தகனம் செய்வதற்கான ஒப்புதல் கடிதமும் வழங்கப்பட வேண்டும்.
22 நாட்கள் யாத்திரைக்கான செலவு பாதைக்குப் பாதை மாறுபடும். இந்தியாவில் கைலாஷ் மானசரோவர் இல்லை என்பதும், இது சீனாவின் திபெத்தில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்) இலிருந்து பயணத்திற்கான செலவு ரூ. 1 லட்சத்து 74 ஆயிரம். சுமார் 200 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும்.
21 நாட்கள் நாது லா கணவாய் வழியாகப் பயணிப்பவர் களுக்கான தோரயமான செலவு ரூ.2 லட்சத்து 83 ஆயிரமாக அதிகரிக்கும் 36 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும்.
கைலாஷ் மானசரோவர் சென்று சிவபெருமானை தரிசிக்க தயாராகி விட்டீர்களா?