நிலத்தில் கால் வைக்கவே பயப்படும் மக்கள்! பஜாவ் பழங்குடியினரின் ஆச்சரியமூட்டும் வாழ்க்கை முறை!

Payanam articles
amazing lifestyle of Bajau tribe!image credit - theguardian.com
Published on

பூமியின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடியினர்கள் வசிக்கின்றனர். சாதாரண உலகத்தில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட தண்ணீரில் பிறந்து, தண்ணீரில் வாழ்ந்து, தங்கள் வாழ்க்கை முழுக்க நிலத்தில் கால் வைக்க பயப்படும் பஜாவ் பழங்குடியினர் குறித்து இப்பதிவில் காண்போம்.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் பகுதிகளில் வசிக்கும் தனித்துவமான பஜாவ் பழங்குடியினருக்கு வெளி உலகம் தெரியாது. அதேபோல் வெளிஉலகத்தில் இருப்பவர்களுக்கு அந்த பழங்குடியினரைத் தெரியாது. கடல்தான் இந்த' கடல் ஜிப்ஸிகள்' 'கடல் நாடோடிகள்' என்று அழைக்கப்படும் பழங்குடி  மக்களின் வாழ்வாதாரமாகவும் வீடாகவும் இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் நிலத்தில் குடியேற மாட்டார்கள்.

கடல் நீரில் வீடுகட்டி அல்லது படகுகளை வீடாக மாற்றி வாழும் பழக்கம் கொண்ட இந்த பஜாவ் பழங்குடியினர் தாங்கள் பிடிக்கும் மீன்களை விற்பதற்காக அல்லது வேறு தேவைகள் வரும்போது மட்டுமே நிலப்பகுதிகளுக்கு சென்று மீன்களை விற்று அதன் மூலம் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்.

மற்றபடி நிலப் பகுதிகளுக்கு இவர்கள் செல்வது அரிது. இவர்களின் ஜீவாதாரம் கடல்தான் என்பதால் ஒரு இடத்தில் வசிக்காமல் மீன் பிடித்துக் கொண்டே பயணிப்பதால் கடல் நாடோடிகள் என்று அழைக்கப்படும் பஜாவ் பழங்குடியினர் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சுலு தீவுகள் பகுதியிலிருந்து வந்தவர்கள். 

இந்த பழங்குடியினர் நாடோடி வாழ்க்கை காரணமாக இறுதியில் மலேசியா, புருனே மற்றும் இந்தோனேசியாவின் நீர் நிலைகளில் இடம்பெயர்ந்து கிழக்கு இந்தோனேசியாவில் மாலுகு, ராஜா அம்பட், சுலவேசி மற்றும் கலிமந்தனின் வடக்கு பகுதியின் கடலில் வாழ்கின்றனர். 

Payanam articles
பஜாவ் மக்களின் வாழ்க்கை

அற்புதமான நீச்சல் மற்றும் டைவிங் செய்யும் திறனுக்கு பெயர் பெற்ற பஜாவ் மக்களின் வாழ்க்கையின் பெரும் பகுதி கடலை மையப்படுத்தி இருப்பதால் ஆழ்கடலில் மூச்சை பிடித்து டைமிங் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆழமான கடலில் எந்த நவீன உபகரணங்களும் இல்லாமல் அவர்களால் 5 முதல்13 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியும் என்பதால் இவர்களுக்கு நீர் மனிதர்கள் என்று வேறு பெயரும் உண்டு.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி இந்த மக்களின் உடல் உறுப்பான மண்ணீரல் சாதாரண மக்களைவிட சற்று பெரியதாக இருப்பதோடு மரபணுவின் மாறுபாட்டால் இது சாத்தியமாகியுள்ளது எனக்கூறுகிறது. தண்ணீரில் நீண்ட நேரம் மூச்சை பிடித்து நீச்சல் செய்ய இது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. 

கடலில் 30 மீட்டர் ஆழத்திலும் பஜாவ் மக்கள் தங்களது பாரம்பரிய ஈட்டிகளை பயன்படுத்தி மீன், ஆக்டோபஸ் போன்ற கடல் வாழ் உயிரினங்களை வேட்டையாடு கிறார்கள். பஜாவ் இன மக்களின் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியான நீச்சல் மற்றும் டைவை குழந்தைகள் சிறு வயதில் இருந்தே கற்றுக் கொள்கிறார்கள்.

பஜாவ் மக்களின் மூதாதையர்கள் மலேசியா மற்றும் புரூனே கடல் பகுதிகளுக்கு பயணம் செய்ததிலிருந்து முஸ்லிம் மதத்தை தலைமுறை தலைமுறையாக கற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கியதால் இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக உள்ளனர். இவர்களிடம் இன்னும் கைவிடாத சில நம்பிக்கைகளும் சடங்கு பாரம்பரியங்களும் இருந்தாலும் கடலில் பிறந்து வளர்ந்து இறக்கும் பஜாவ் பழங்குடியினர் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை.

இதையும் படியுங்கள்:
வளையல்களின் அற்புதம்: வரலாறு, வகைகள் மற்றும் இந்தியாவின் தலைநகரங்கள்!
Payanam articles

பஜாவ் பழங்குடியினருக்கு கல்வி அறிவு இல்லாததால் அவர்களின் வயது பற்றி கூட தெரியாது என்கிறது ஒரு ஆய்வு. இது தவிர எந்த நாடும் இந்த பழங்குடியின மக்களை இதுவரை தங்கள் மக்கள் என அங்கீகரிக்க வில்லை என்பதுதான் கூடுதல் ஆச்சரியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com