கிருஷ்ணர் கோயில்கள்: சிலிர்க்க வைக்கும் வரலாற்று தகவல்கள்!

Krishna Temples
Pet Dwarka Kutch temple
Published on

பேட் துவாரகை கட்ச் வளைகுடாவில் உள்ள சிறு தீவாகும். (Pet Dwarka Kutch temple) வடமொழியில் பேட் என்றால் தீவு என்று பொருள். கோமதி துவாரகையிலிருந்து 32 கிமீ  தொலைவில் உள்ள ஒகா துறைமுகம் வரை தரை வழியே வந்து அங்கிருந்து படகில் சுமார் 25 நிமிடங்கள் பயணித்து பேட் துவாரகையை அடையலாம். படகில்தான் செல்ல வேண்டும். வேறு போக்குவரத்து வசதி கிடையாது. 

படகில் செல்லும்போது சீகல் (sea gull) என்னும் பறவைகள் நம் தலைக்கு அருகில் வட்டமிடுகின்றன. நாம் தரும் தின்பண்டங்களை அழகாக கையில் இருந்து எடுத்துக் கொண்டு இனிமையான ஓசை எழுப்பிக் கொண்டு பறக்கின்றன.

கோவிலுக்கு செல்லும் வழி நெடுகிலும் நிறைய கடைகள் உள்ளன இங்கு விதவிதமான சிப்பி பொம்மைகள், கிருஷ்ணரின் உருவங்கள், சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

Krishna Temples
கிருஷ்ணரின் உருவங்கள்

இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த கிருஷ்ணரை துவாரகா நாத்ஜி என்று அழைக்கின்றனர். இங்கே ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனை உள்ளது. இங்கு காலை மாலை வேளைகளில் ஆரத்தி மிகவும் விசேஷமாக காட்டப்படுகிறது. நிறைய மக்கள் இந்த ஆரத்திக்காக நின்று தரிசனம் செய்கிறார்கள்.

நாங்கள் நிவேதனத்துக்கு டிரை ஃப்ரூட்ஸ் எடுத்துச் சென்றோம். அதனை அழகாக கிருஷ்ணரிடம் காட்டி துளசி தளங்கள் போட்டு கொடுத்தார்கள். அனைவருக்கும் அதனை அங்கேயே விநியோகம் செய்தோம். மனதுக்கு மிகவும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

இங்கு கண்ணனுக்கு தினந்தோறும் குழந்தையைப் போலவும் அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். இங்கு ருக்மணி தேவி உற்சவராக அருள் புரிகிறார்.

முதலில் ப்ரத்யும் சன்னதி உள்ளது. பிறகு கண்ணனின் ஆலயம். 

தீவு துவாரகையில் கிருஷ்ணன் துவாரகா நாத்ஜி என்ற பெயருடன் மூலவராக தரிசனம் தருகிறார். இவருக்கு எதிரில் கிருஷ்ணனின் தாயார் தேவகியின் சன்னதியும் உள்ளது. வேறு எங்கும் இப்படி தேவகிக்கு தனி சன்னதி இருப்பதாக தெரியவில்லை.

இக் கோவிலில் கிருஷ்ணரின் 8 மனைவியர்களுக்கும் தனி தனி சன்னதிகள் உள்ளன. இதனை கிருஷ்ணரின் அந்தப்புரம் என்று சொல்கிறார்கள்.

மாதவன், லட்சுமி நாராயணன், திரு விக்ரமன், ஜாம்பவதி போன்றோர்களுக்கும் சன்னதிகள் உள்ளன.  இங்கு புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில் கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வரலாற்றை மாற்றிய வீரனின் குகை! நீலகிரியின் புதிய சுற்றுலாத் தளம்!
Krishna Temples

இந்த பேட் துவாரகை தீவு சிந்து சமவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களில் ஒன்றாகும். பேட் துவாரகையில் அகழாய்வு செய்தபோது ஹரப்பா காலத்து மண் பாண்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இங்கு கிருஷ்ணர் கோவிலுடன் தண்டி அனுமன் கோவிலும் விசேஷம். அனுமன் தன் மகன் மகரத்துவாஜனுடன் கோயில் கொண்டுள்ள தலம் இது. விநாயகர் பைரவர் ஆகியோரும் உள்ளனர். பிறகு கோல்டன் டெம்பிள் என அழைக்கப்படும் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு நுழைவு கட்டணம் உண்டு. மிகவும் தூய்மையாக பராமரிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com