
சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. அது நம் அறிவு விரிவடையவும், புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளவும் கிடைத்த சிறப்பான வாய்ப்பாகும்.
சேரம்பாடி பழசி குகை (Cherambadi Palasi Cave) என்பது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க குகையாகும். ஆங்கிலேயர் களுக்கு எதிராக போரிட்ட மன்னர் பழசிராஜா, இதில் தங்கி இருந்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்த குகை வென்ட்வொர்த் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகே அமைந்துள்ளது. இது தற்போது பழசி ராஜா பயன்படுத்திய குகையாக உறுதிப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளுக்காக 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் பழசி ராஜாவின் ஆறாவது தலைமுறை வாரிசால் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கோட்டையம் மற்றும் மலபார் பகுதியின் மன்னராக கடந்த 1753ல் ஆட்சி புரிந்தவர் பழசிராஜா. ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், ஆங்கில அரசுக்கு எதிராக போராடியதால் மக்கள் இவருக்கு ஆதரவு அளித்து வந்தனர். ஆங்கிலேய படைகள் இவரின் கோட்டயம் அரண்மனையை சுற்றி வளைத்த பொழுது அங்கிருந்து வயநாடு மலைப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர் 1799 இல் வயநாடு பகுதிகளை தன்னுடைய ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார். தனது வீரர்களுடன் வனங்களில் தங்கி போர் புரிந்தார். அதில் ஒரு குகை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம், பழசி ராஜா ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொரில்லா போர் தொடுத்த பொழுது, மறைந்து தங்கியிருந்த இடமாகும். இது நீலகிரி மலைகளின் பசுமையான பகுதியில் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடியில் தேயிலை தொழிற் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த குகை கண்டறியப்பட்ட பிறகு பழசிராஜாவின் ஆறாம் தலைமுறை கொள்ளுப்பேத்தி கொச்சு தம்புராட்டி சுபா வர்மா இதனை திறந்து வைத்துள்ளார்.
ஐந்து பாதுகாப்பு அடுக்குகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த குகை இயற்கையான ஆறு, குறுகிய நுழைவாயில், உள்ளே இரும்புக் கூண்டு தடுப்பு ஆகியவை காணப் படுகின்றன. இந்த குகை 1797 முதல் 1801 காலப்பகுதியில் இரண்டாம் பழசி போரை முன்னிட்டு, கொரில்லா போருக்காக உருவாக்கப்பட்ட குகையாகும். அத்துடன் இது கேரளாவின் முதல் சுதந்திரப் போராளியின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது.
மலை மற்றும் காடுகள் சூழ்ந்த சேரம்பாடியில் குகையை பார்வையிட இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. இங்கு யானை, புலி, கரடி போன்ற விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
குகைக்குள் மொபைல் நெட்வொர்க் இல்லாத காரணத்தால் பவர் பேங்க், டார்ச் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்வது அவசியம். அத்துடன் அனுபவம் உள்ள வழிகாட்டியுடன் மட்டுமே இந்த குகைக்குள் செல்லவேண்டும். தனியாக செல்வதைவிட குழுவுடன் செல்வது பயணத்தை பாதுகாப்பாகவும், இனிமையாகவும் உணரவைக்கும்.
தமிழ்நாட்டின் கடைசி கிராமம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது சேரம்பாடி. இங்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கலாச்சாரம் காணப்படுகிறது. மக்கள் தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளையும் பேசுகிறார்கள். சேரம்பாடிக்கு அருகில் உள்ள எருமாடு என்ற கிராமத்தில் பனியா பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழும் இவர்கள் பாரம்பரிய உடைகளில் காணப்படுகின்றனர். நேரம் கிடைத்தால் குடும்பத்துடன் சென்று இந்த வரலாற்று சிறப்புமிக்க குகையை பார்த்துவிட்டு வாருங்கள்.