கொடைக்கானலின் மறைந்திருக்கும் சொர்க்கம்: பூம்பாறை!

payanam articles
poombarai payanam articles
Published on

கொடைக்கானல் என்றாலே நமக்கு குணா குகை, பில்லர் ராக்ஸ், கொடைக்கானல் ஏரி போன்றவைதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதைத்தாண்டி பூம்பாறை என்றொரு அழகான இடம் உள்ளது. இது கொடைக்கானலுக்கு அருகிலுள்ள, மலைகளால் சூழப்பட்ட, 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட அழகான மற்றும் அமைதியான கிராமமாகும். இது கொடைக்கானல் ஏரியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் வழி முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் நம் கண்ணைக்கவரும்.

பூம்பாறை என்பது கொடைக்கானல் அருகே பழனி மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகான, அமைதியான கிராமம். இது படிக்கட்டு வயல்கள், பூண்டு உற்பத்தி மற்றும் குழந்தை வேலப்பர் கோவில் ஆகியவற்றுக்கு பிரபலமானது. மன்னவனூர் ஏரி, பூம்பாறை வியூபாயிண்ட் மற்றும் பெரிக்ஜாம் ஏரி போன்ற இடங்கள் அருகிலுள்ள சுற்றுலா தலங்களாகும்.

பூம்பாறையில் பார்க்க வேண்டிய இடங்கள்:

குழந்தை வேலப்பர் கோவில்:

குழந்தை வேலப்பர் கோயில் பூம்பாறையின் முக்கிய ஈர்ப்பாகும். சுமார் 3000 ஆண்டுகள் பழமையான, போகர் சித்தரால் பத்து வகையான மூலிகைகளால் செய்யப்பட்ட முருகர் சிலை இங்குள்ளது. இங்கு முருகர் ஒரு குழந்தை வடிவில் வெற்றிவேலுடன் காட்சி தருகிறார். ஒவ்வொரு வருடமும் இங்கு தேர் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகப் பயணம்; கோவில் குளக்கரையில் தொலைக்கும் பாவமும்... சேர்க்கும் பாவமும்!
payanam articles

பூண்டு சந்தை:

முருகன் கோவிலுக்கு வெளியிலேயே இந்திய புகழ்பெற்ற மலைப்பூண்டு சந்தை உள்ளது. பூம்பாறை மலைப்பூண்டின் வாசனை, சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்கு இந்தியா முழுக்க இதற்கு ஒரு பெரிய சந்தையே உண்டு. உள்ளூர் மலைப்பூண்டு மற்றும் தேன் வாங்க சிறந்த இடம்.

பூம்பாறை வியூ பாயிண்ட்:

பூம்பாறை கிராமத்தையும், சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளையும் காண சிறந்த இடமிது. குறிப்பாக சூரிய அஸ்தமன காட்சி இங்கு அழகாக இருக்கும். இங்கிருந்து பூம்பாறை கிராமத்தின் அழகிய நிலப்பரப்புகளையும், மொட்டை மாடி விவசாய நிலங்களையும், பரந்த பள்ளத்தாக்குகளின் பிரமிக்க வைக்கும் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம். மலை உச்சியில் இருந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

தட்டுப்பயிர்கள் (Step Farming):

மலைச்சரிவுகளில் படிக்கட்டு முறை விவசாயம் இங்கு மிகவும் பிரபலம். பார்ப்பதற்கு பச்சை நிறக் கம்பளம் விரித்தது போன்று அழகாக காட்சியளிக்கும்.

பூம்பாறை வனப்பகுதி:

இயற்கை நடைப்பயணம் செல்ல ஏற்ற இடம் இது. இது பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்த ஒரு அழகிய வனப்பகுதியாகும். வண்ணமயமான பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் காட்டு விலங்குகளைக் காணலாம்.

அருகில் உள்ள இடங்கள்:

மன்னவனூர் ஏரி:

பூம்பாறையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அழகான நீர்ப்பரப்பு, வளமான பல்லுயிர்கள் மற்றும் பசுமையான மலைகளுடன் மனதை கவரும் இடம். மற்றும் மன்னவனூரில் உள்ள ஆடு மற்றும் முயல் பண்ணைக்கு குழந்தைகளுடன் சென்று வரலாம்.

பேரிஜம் ஏரி (Berijam Lake):

இயற்கை அழகை ரசிக்கவும், பறவைகளை பார்க்கவும் ஏற்ற இடம் இது. அழகான காடுகளின் வழியாகச் சென்றாலா இதை அடைந்து விடலாம். ஆனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல வன அனுமதிச்சீட்டு அவசியம். அதாவது இங்கு செல்ல சிறப்பு அனுமதி தேவை. கருவமரம் மற்றும் தேவதாரு மரங்களால் சூழப்பட்ட இந்த அமைதியான காடு, அற்புதமான ஏரி காட்சிகளுடன் சிறப்பாக இருக்கும். கூம்பலகன், நீலக்கற்குருவி, கதிர்குருவி மற்றும் சில புலம்பெயரும் பறவைகளும் இந்த காட்டிற்கு வருகை தருகின்றன. மீன் பிடித்தல், பறவைகளைப் பார்ப்பது ஏரியை சுற்றி உலா வருவது போன்று அழகாக நேரத்தை செலவிடலாம்.

payanam articles
Berijam Lake

கூக்கல் ஏரி (Kookal Lake):

பூம்பாறைக்கு அருகில் உள்ள கூக்கல் கிராமத்தில் அமைதியான ஏரி மற்றும் பல சிறிய அருவிகளைக் காணலாம். அல்லி மலர்கள் நிறைந்த கூக்கல் ஏரி மிகவும் அழகானது.

பூம்பாறையில் வாங்க வேண்டியது:

மலைப்பூண்டு, நல்ல தேன். இது தவிர பலவகையான சீஸ் வகைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் செல்லும் பயணத்தின் ஒரு பகுதியாக பூம்பாறையை இணைத்துக் கொள்ளலாம். இங்கு காலை அல்லது மாலை நேரங்களில் கிராமத்தைச் சுற்றி பார்ப்பது இதமான அனுபவத்தைத்தரும். உள்ளூர் உணவகங்களில் பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளை சுவைக்கலாம். மலையேற்ற விருப்பம் உள்ளவர்கள் பெருமாள் சிகரம் போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.

எப்படி செல்வது?

அருகிலுள்ள விமான நிலையம் மதுரை. ரயிலில் செல்வதென்றால் பழனி ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து டாக்ஸி மூலம் செல்லலாம். கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com