

பயணம் செய்யும்பொழுது எதையெல்லாம் செய்யவேண்டும் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டால் பயணம் இனிமையாக அமையும். அது ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, இன்பத் சுற்றுலா பயணமாக இருந்தாலும் சரி.
ஆன்மீகப் பயணத்தில் சிலர் வேண்டுதலுக்காகவும், பரிகாரம் செய்யவும் செல்வது உண்டு. சிலர் அங்குள்ள கலை நயங்களை ரசித்து, மௌனத்தில் கரைந்து, நன்கு பிரார்த்தித்து அனைத்தையும் நினைவில் ஏந்தி வீடு திரும்புவது உண்டு. கிட்டத்தட்ட இது இன்பச் சுற்றுலா போல்தான் இருக்கும்.
பரிகாரம் செய்வதற்காக செல்பவர்கள் கோயிலில் உள்ள குளக்கரையில் நீராடி விட்டு, அங்கேயே துணிகளை எல்லாம் போட்டு விட்டு வந்து விடுவதும் உண்டு. துணிகளை அப்படி விட்டு விட்டு வந்தால் துன்பம் குறையும்; பாவம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் அதே குளக்கரையில் படிக்கட்டுகளில் குளிக்க செல்லும் மற்றவர்களுக்கு அதை பார்த்தால் ஒரு பயம் ஏற்படும். அந்த பாவம் நம்மை தொற்றிக் கொள்ளுமோ என்று நினைக்கத் தோன்றும்.
ஆதலால் கூடியவரையில் துணிமணிகளை அப்படியே விட்டு விட்டு வராமல் இருப்பது நம்மை நாகரீகத்தில் சிறந்தவர்களாக எடுத்தியம்பும். குறிப்பாக துணிமணிகளை இங்கே விடாதீர்கள் என்று எழுதி இருந்தால் அதை நாம் கட்டாயமாக பின்பற்றுவது சாலச் சிறந்தது.
அதேபோல் இந்த இடத்தில் காசு பணங்களை தூக்கி எறியாதீர்கள் என்று அந்த கிணற்றில் மூடி போட்டு தடுத்து வைத்திருப்பார்கள். காலம் காலமாக அங்கே சில்லறைகளை வீசி எறிந்தவர்களும் உண்டுதான். என்றாலும் இனி இங்கு போடாதீர்கள் என்று சொன்னால் அதை அப்படியே பின்பற்றுவது நல்லது.
38 வருடங்களுக்கு முன் ஒருமுறை தஞ்சையில் இருந்து ஒரத்தநாடு சென்று கொண்டிருந்தபோது சூரக்கோட்டை வந்ததும் அங்குள்ள அய்யன் கோயிலுக்கு வாகனங்களில் பயணித்தபடியே, பஸ்ஸில் அமர்ந்தபடியே எல்லோரும் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் சில்லறையை தூக்கி வீசுவது உண்டு. ஏனென்றால் அதற்கு நேராக உள்ள ரோட்டில் சிறு வளைவு இருக்கும். அந்த இடத்தில் அவ்வப்போது விபத்து ஏற்படுவது உண்டு.
அதைத் தடுக்கும் வண்ணம் வேண்டிக் கொண்டு பயணிப்பவர்கள் சில்லறையை தூக்கிப்போட, அதை அங்கிருப்பவர்கள் கோவிலில் சேர்ப்பார்கள். அப்படி ஒருவர் 25 பைசா கனமான காயினை தூக்கி வீசியபொழுது அந்தப் பக்கமாக சென்றவரின் காதில் போய் விழுந்துவிட்டது. அது அவருக்கு வலி ஏற்படுத்தி அதில் இருந்து மீண்டு வர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். செவித்திறனும் பாதிக்கப்பட்டது.
ஆதலால் ஒரு நேரத்தைபோல் எல்லா நேரமும் சுமூகமாக இருக்காது. அது போவோர் வருவோரை பாதிக்கும் என்பதால், அதன் பிறகு இப்படி காசு தூக்கி போடுவதை நிறுத்தமாறு கோரிக்கை வைத்து நிறுத்திவிட்டார்கள். காணிக்கை செலுத்துபவர்கள் நேரடியாக அங்கு சென்று செலுத்திவிட்டு பயணத்தை தொடர்வது வழக்கமாக உள்ளது.
பயணத்தின்போது சாலை விதிகளை எப்படி பின்பற்றுகிறோமோ, அதேபோல் இதுபோன்ற விதிமுறைகளையும் பின்பற்றினால்தான் நம் பயணம் சிறப்பாக அமையும். மற்றவர்களும் துன்புற மாட்டார்கள்.