
-ஜெயா வெங்கட், கோவை
தோழியர்கள் நாங்கள் நால்வர் ஒன்றாகச் சேர்ந்தோம். பெங்களூருவில் இருந்து விமானத்தில் தில்லிக்குச் சென்று, பிறகு அங்கிருந்து காரில் ராஜஸ்தான் நோக்கிப் பயணம் தொடங்கினோம். போகும் வழியில் மதுரா, ஆக்ரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர் நகரங்களைச் சுற்றிப் பார்த்தோம். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தார் பாலைவனத்தின் மையத்தில் உள்ள ஜெய்சல்மேர் நகரத்தில் ஹோட்டல் ஒன்றில் இரவு தங்கிவிட்டோம். இரவு குளிர்ச்சியாகவும் பகல் பொழுது வெப்பம் மிகுந்ததாகவும் இருந்தது.
‘ஜெய்சாலின் மலைக்கோட்டை’ என்று பொருள் கொண்டது ஜெய்சல்மேர் நகரம். மஞ்சள் நிறக்கற்கள் அங்கு மிகவும் அதிகம் என்பதால், எங்கும் ஒருவிதமான மஞ்சள் நிறம் பூசிய கட்டடங்களும் கோட்டைகளும் காணப்பட்டன. இதனால் இந்நகரம் ‘இந்தியாவின் தங்க நகரம்’ என்று அழைக்கப்படுகிறது என்று அறிந்தோம்.
மறுநாள் காலையில் தார் பாலைவனம் நோக்கிக் காரில் பயணித்தோம். வழியில் மலைக் குன்றின் மீது இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெய்சல்மேர் கோட்டையைச் சுற்றிப் பார்த்தோம். கார் ஓட்டுனரே நல்லதொரு கைடாக அமைந்தது மிகவும் வசதியாக இருந்தது. மாலையில் பாலைவனம் சென்றதும் அங்குள்ள பாலைவன விடுதியில் லக்கேஜ்களை வைத்துவிட்டு பாலைவனக் கப்பலில் சவாரி செய்யத் தயார் ஆனோம். கப்பல் எங்கே வந்தது என்று யோசிக்கிறீர்களா? ஒட்டகங்கள்தான் பாலைவனக் கப்பல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பழங்குடியினர் வாழும் அப்பகுதியில் அவர்களின் தொழில் ஒட்டகம் மேய்ப்பது மற்றும் ஒட்டகச் சவாரிக்குச் செல்வதுதான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக அங்கு வணிகப் பாதைகள் அடைக்கப்பட்டு ஜெய்சல்மேர் வறட்சி நிலமாக மாறியது என்றும் அங்கு வந்த கைடு கூறினார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே மணல்வெளிதான். மணல் குன்றுகள் அடுக்கடுக்காக நீண்ட தொடர்போல அமைந்து மிகவும் அழகாக இருந்தது. ஆங்காங்கே ஒட்டகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிந்தனர்.
ஒட்டகச் சவாரி செல்ல ஆவலுடன் தயாரானோம். ஆனால், பெரிய ஒட்டகங்களை அருகில் கண்டதும் சற்று மிரண்டுதான் போனோம். அதிசயமான விலங்குதான் ஒட்டகம்.
ஒட்டகங்களை அமரச்செய்து ஒட்டகப்பாகன் எங்களை ஏற்றிவிட்டார். கழுத்திலிருந்த கயிற்றைப் பிடித்து ஏறி அமர்ந்ததும் ஒட்டகப்பாகன் அதைத் தட்டி எழுப்பி விட்டான்.
அப்பப்பா! அது அசைந்து எழுந்து ஒரு ஆட்டு ஆட்டியது. கெட்டியாகப் பிடித்துக்கொள்ள மனதில் லேசாகப் பயம் எட்டிப் பார்த்தது. எழுந்து நின்றதும் அந்தரத்தில் இருப்பதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது.
ஒட்டகப்பாகன் ‘சலோ சலோ’ என்று சொல்ல, நான் ‘தீரே தீரே’ என்று சொல்ல, ஒரு மணிநேரம் ஒட்டகத்தில் சாகச சவாரி முடித்து ஒரு வழியாக இறங்கினோம். எதையோ சாதித்த மாதிரிதான் உணர்ந்தேன்.
பிறகு, பழங்குடியினர் ஆடிய பாவாய் நடனம் கண்டுகளித்தோம். பானைகளைத் தலையில் வைத்துப் பெண்கள் சுழன்று சுழன்று ஆடினர். ஆண்கள் பாடல்கள் பாடினர். ரசித்துப் பார்த்தோம்.
இரவு அவர்கள் அன்புடன் பரிமாறிய ‘தாலி’ எனப்படும் சுவை மிகுந்த சைவ உணவு. அவர்களின் பாரம்பரிய உணவு. அதை உண்டு பசியாற்றிக் கொண்டோம்.
அன்று இரவு அங்கேயே தங்கி, மறுநாள் ரயில் மூலம் நீண்ட பயணமாக பெங்களூரு வந்தடைந்தோம்.