

சாலைகளில் பொதுவாக வெள்ளை, மஞ்சள் நிறக்கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு நெடுஞ்சாலையில் சிவப்பு வண்ண கோடுகள் இருக்கிறது . இதற்கான காரணம் குறித்து இப்பதிவில் காண்போம்.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சாலை விபத்துகளை குறைப்பதற்கும் ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் ஒரு புதிய வித்தியாசமான நடைமுறையை கையாண்டுள்ளது. அதன்படி போபால்- ஜபல்பூர் நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளில் சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
குவாலியரில் நெடுஞ்சாலையில் ஒரு சிறுத்தை குட்டி விபத்தில் உயிரிழந்த ஒரு வாரத்திற்கு பிறகு மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் - ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலை NH-45 இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் பாதுகாப்பை மேம்படுத்தவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும், விபத்துக்கள் அதிக அளவில் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து 5 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட சிவப்பு அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிவப்பு நிற அடையாளத்துடன் கூடுதலாக நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் வெள்ளைத் தோள்பட்டை கோடுகள் வரையப் பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் நடைபாதையில் இருக்க இந்த கோடுகள் வழிவகுத்தன. வன விலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து 119 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் 25 சுரங்கப்பாதைகளை கட்டியது. இதனால் வனவிலங்குகள் போக்குவரத்து மண்டலங்களுக்குள் நுழையாமல் கடக்கமுடியும்.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் காட்டு விலங்குகள் நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்க சங்கிலி-இணைப்பு வேலி மற்றும் சாலை பயனர்கள் தங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த எச்சரிக்கை செய்யும் வேகக் கண்டறிதல் சாதனங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.
முன்னர் நௌரதேஹி சரணாலயம் என்றும் தற்போது வீராங்கனை துர்காவதி புலிகள் சரணாலயம் வழியாக இந்திய நெடுஞ்சாலையில் செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சி இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .
நீளமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள் தொடர்ந்து பயணிக்கும்போது ஏற்படும் கவன சிதறலை இந்த சிவப்பு நிறக் கோடுகள் தடுப்பதோடு, வனவிலங்குகள் உணர்திறன் பகுதிக்குள் நுழைவதை ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையுடன் செல்ல சமிக்ஞை செய்கிறது.
மேலும் சிவப்பு நிற பெயிண்டுடன் கூடிய கூடுதல் கோடுகள் மூலமாக சிறிய அதிர்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் வேகத்தை ஓட்டுநர்கள் குறைப்பதற்கு ஏதுவாக உள்ளது.
NHAI ன் இந்த முயற்சி பலனளித்தால் வனவிலங்குகள் சாலையை கடக்கும் இடங்களிலும் அதிக விபத்துக்கள் நடக்கும் மற்ற இடங்களிலும் இதே நடைமுறையை பின்பற்றும் என்பதில் ஐயமில்லை.