
பொதுவாக நடந்து செல்லும் பொழுது, வானத்தில் சத்தம் கேட்டால் அண்ணாந்து பார்ப்பீர்கள்தானே! அங்கே ஆகாயவிமானம் பறந்து கொண்டிருக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ஆகாயவிமானத்தை ரசிக்காதவர் எவருண்டு? சொல்வீர்.
பார்க்கப் பார்க்க பரவசம் ஊட்டுபவை கடல், இரயில், ஆகாயம், ஆகாய விமானமும் கூட எல்லோருக்கும் வாழ்நாளில் ஒரு முறையாவது வானத்தில் பறக்கத்தான் ஆசை. கோடை விடுமுறை வந்து விட்டது வெளியூர் பயணம் இந்த முறை விமான பயணம் என மனதிற்குள் ஆசை அதை நிறைவேற்ற இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் முதன்முதலாய் ஆகாய விமானத்தின் நுழைவாயிலில் நுழைகிறீர்கள்.! அப்பொழுது சில பாதுகாப்பு அம்சங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டாமா? இதோ உங்களுக்காக !
1) ஆகாய விமானத்தின் இருக்கையில் அமர்ந்தவுடன், அழகுப் பணிப்பெண்கள் உங்களிடம் ”குடிதண்ணீர் அருந்துகிறீர்களா?“ என வாஞ்சையோடு கேட்பார்கள். நீங்கள் தலையாட்டுவீர்கள். குடிநீர் ஒரு காகித கோப்பையில் தருவார்கள். அது பாதுகாப்பானதா? என அறிய இயலாது.
ஆகாயத்தில் காற்றில் நுண்ணுயிர் கிருமிகள் பரவி இருக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் குடிநீரில் உட்புகலாம். ஆகவே நீங்கள் விமானம் ஏறுவதற்கு முன்னரே தேவையான குடிநீர் பாட்டிலைக் கொண்டு செல்வது உங்களுக்கு ஆரோக்கியமானதாகும்.
2) கொரோனா போன்ற பேரிடர் காலத்தில்தான் சானிடைசர் உபயோகிக்க வேண்டுமா? நீங்கள் விமான பயணத்தின் போதும் உபயோகிக்கலாம். யார் தடுப்பார் உங்களை? அவசியம் சானிடைசர் கொண்டு சென்று உங்களைத் தற்காத்து கொள்ளுங்கள்.
3) உங்கள் லக்கேஜ்களை உங்கள் இருக்கைக்கு மேற்புறமுள்ள பெட்டகத்தில்தான் வைக்க வேண்டும். அவற்றை விடுத்து உங்கள் கால்களுக்கிடையே வைப்பது உங்களுக்கும், சகபயணிக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் அல்லவா?
4) பயணங்களின் பொழுது பெரும்பாலானவர்களுக்கு சன்னல் ஓர இருக்கையே விரும்புவார்கள். மனித இயல்பும் கூட. ஆகவே நீங்கள் விமான பயணம் பயணச்சீட்டு பதிவு செய்யும் பொழுதே, சன்னலோர இருக்கையைத் தேர்வு செய்யுங்கள். அல்லது பக்கவாட்டு இருக்கையைத் தேர்வு செய்யுங்கள். நடுஇருக்கையைத் தேர்வு செய்வதைத் தவிர்க்கவும்.
5) விமானத்தில் அமர்ந்தவுடன், பணிப்பெண்களின் அழகைப் பார்த்து வாயைப் பிளந்தவாறு இருக்காதீர்கள். முதலில் உங்கள் இருக்கை, சீட்பெல்ட லக்கேஜ்களை சானிடைசரால் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
6) உள்நாட்டு பயணமென்றால் அதிகபட்சம் இரண்டரை மணிநேரம்தான் ஆகும். ஆனால் வெளிநாட்டு பயணமென்றால் இரண்டு நாட்கள் கூட ஆகலாம். அது நீங்கள் செல்லும் வெளிநாட்டைப் பொறுத்தது. ஆகவே கையோடு சிறிய போர்வை சிறிய தலையணை கொண்டு செல்லவும்.
7) காற்றிலேதான் நுண்ணுயிர்க் கிருமிகள் எளிதாக பரவும். ஆகவே விமானப்பயணத்தின் பொழுது அவசியம் முககவசம் அணிவது நண்மையே!
8) பயணம் முடித்த பின்னர் நீங்கள் அணிந்திருந்த ஷூக்கள் செருப்புகளை நன்றாக சோப் தண்ணீரால் கழுவிவிடுவது நல்லது. நுண்ணுயிர் கிருமிகளை அது கொன்று விடும்.
இத்தனையும் கடைபிடித்து ஆகாய விமானத்தில் பயணித்தீர்கள் என்றால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலேதான்!