இமைய மலையின் அடியில் இருக்கும் சம்பா, இமாச்சல் பிரதேசத்தின் அழகிய இடமாகவும், கலை கலாச்சாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. சம்பாவின் கட்டடக் கலை அற்புதங்கள், பழங்குடி மக்களின் மரபுகள், நகரத்தின் பாரம்பரியம், மத நடைமுறைகள் என அனைத்துமே பேசப்படக்கூடிய ஒன்றுதான்.
சம்பாவின் வரலாற்று பெருமை கி.பி.6 ம் நூற்றாண்டிலிருந்து சாஹில் வர்மன் என்கிற ராஜாவால் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதபின்னர் பல நூற்றாண்டுகளாக ஆண்ட சம்பா ராஜப்புத்திரர்கள், முகலாயர்கள் மற்றும் கூர்க்காக்கள் என அனைவரும் தங்கள் பங்கிக்கிற்கு கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சம்பாவில் வளர்த்தார்கள். அதேபோல் வர்த்தகத்திலும் சிறந்து விளங்கிய சம்பா, இப்போது வரை அதன் பெருமைகளை இழக்கவே இல்லை. அப்போது பல ராஜாக்களாலும் வளர்ந்த பாரம்பரியம், இன்றும் அந்த மக்களால் காக்கப்பட்டு வருகிறது.
சம்பாவில் பல பழமை வாய்ந்த கோவில்கள் இன்னும் அதன் வலிமை மற்றும் பெருமையைத் தாங்கி நிற்கின்றன. அந்தவகையில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லக்ஷ்மி நாராயணன் கோவில் இந்தப் பகுதியில் அழகு மற்றும் பழமையின் அடையாளமாக நிற்கிறது. அதேபோல், மலை உச்சியில் இருக்கும் பழமைவாய்ந்த கோவிலான சாமுண்டா தேவி கோவிலும் சம்பாவின் பரந்த காட்சியைத் தருகிறது.
சம்பாவில் உள்ள கட்டடங்களின் கலைகளும் அற்புதத்தின் சின்னமாகவுள்ளன. கோவில்கள் மற்றும் பழமைவாய்ந்த இடங்களின் மர முகப்புகள், சாய்வான கூரைகள் மற்றும் நுனுக்கமான வடிவங்கள் ஆகியவை கட்டடக்கலையின் சிறப்புகளாகும். அதேபோல் கலைப் பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவை இடைக்கால காலக்கட்டத்தின் வடிவமைப்புகளைக் கொண்டது.
அந்தப் பகுதியில் பங்கி கிராமத்தில் ஆடுகளின் முடியைப் பயன்படுத்தி செய்யப்படும் Black and Grey கம்பளிகள் மிகவும் புகழ்பெற்றவை. அதேபோல், 17ம் நூற்றாண்டில் Guler ன் ராஜா இமாலைய அழகை ஓவியம் தீட்ட சில கலைஞர்களை நியமித்தார். அவர்கள் உருவாக்கிய சம்பா ஓவியம் தனித்துவம் மற்றும் தனி அழகைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
அதேபோல், சம்பா செப்பல், வெண்கல தட்டு ஆகியவையும் சம்பாவின் புகழ்பெற்றதாக உள்ளன. 300 முதல் 400 வருடங்களாக சம்பாவில் செய்யப்படும் கைவினைக் கைக்குட்டைகள், அதன் கலாச்சாரத்தின் பெருமையை விளக்குகிறது. சம்பாவில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள், சடங்குகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.
ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் மின்ஜார் கண்காட்சி சம்பாவின் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகும். அறுவடை காலங்களில் இசை, நடனம் மற்றும் வண்ணமயமான ஊர்வலங்களுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தைப் பார்க்கவே இந்தியா முழுவதிலிமிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வார்கள்.
கலாச்சாரத்திற்கு பெயர்போன சம்பாவிற்கு திருவிழா காலங்களிலும், அறுவடை காலங்களிலும் சென்றால் ஒரு சூப்பரான அனுபவமாகவே இருக்கும்.