
கோடைக்கால விடுமுறை, மழைக்கால விடுமுறை, அரசு விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என்று எந்த விடுமுறையும் இல்லாமல் வருடத்தின் 365 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை செயல்படும் பழங்குடியின பள்ளிக்கூடம் குறித்து இப்பதிவில் காண்போம்.
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் திரிம்பகேஷ்வர் என்ற தாலுகாவில் உள்ள ஹிவாலி என்று அழைக்கப்படும் சிறிய கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி 365 நாட்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரமும் பள்ளி இயங்குகிறது
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை பாடங்கள் போதிப்பதோடு மட்டுமல்லாமல் வெல்டிங், மின்சார வேலை மற்றும் இயற்கை விவசாயம் போன்ற வேலைகளையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.
இங்கு சேரும் மாணவர்கள் படிக்காத மற்றும் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தாலும் அசாதாரண திறமையுடன் வெளிவருகின்றனர்.
பள்ளியின் பாடத்திட்டத்தில் பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்றவை முக்கிய அம்சங்களாக இடம் பிடித்துள்ளன.
பள்ளியின் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்தாலும் இங்குள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலையில் பிரார்த்தனையில் இருந்து தொடங்கி, சில சமூகப் பணிகள், உடற்பயிற்சி, எழுதுதல், கடைசியாக பள்ளியில் இரண்டு முறை உணவு இடைவேளையுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
மேலும், எழுத்துப் பயிற்சி வழங்குதல், வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்தல் என இங்குள்ள மாணவர்கள் தினமும் தங்களது கற்றல் திறனை மேம்படுத்துகின்றனர்.
பள்ளிகளின் சுவர்களில் அழகான வார்லி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்து வரைந்த ஓவியங்களாகும். கிராமத்தில் உள்ள சில வீடுகளும் இதேபோல் வர்ணம் பூசப்பட்டுள்ளன.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டுவேளை உணவு வழங்கப்படுகிறது. மேலும் மூத்த மாணவர்கள் இளையவர்களுக்கு கற்பிக்கிறார்கள். ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கான யூடியூப் அணுகலும் இந்த மாணவர்களுக்கு உள்ளது.
"கற்றல் மீதான இந்த அர்ப்பணிப்பு குழந்தைகளிடையே படிப்பின் மீது ஆழமான அன்பை வளர்ப்பது மட்டுமல்லாமல் கல்வித் திறன்களையும் வளர்த்துள்ளது" என்பது உண்மைதானே!