
ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சூப்பரான கோடைக்கேற்ற ஸ்பாட் இது. பெரிய பெரிய மரங்களுக்கு நடுவே அழகான தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்து செல்லும் அனுபவம் வாழ்வில் என்றும் மறக்க முடியாததாக இருக்கும். பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. குடும்பத்துடன் எங்கு செல்லலாம் என்று திட்டமிடுவோம். பெரும்பாலானவர்கள் மறக்காமல் ஊட்டியைத்தான் பார்க்க நினைப்பார்கள்.
ஊட்டியில் பார்க்க தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி ஏரி, கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள், முதுமலை தேசிய பூங்கா என பல இடங்கள் இருந்தாலும் இந்த 'கேர்ன்ஹில்' மிகவும் வித்தியாசமான ரசிக்கும் இடமாக உள்ளது. இது நீலகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இரு புறங்களிலும் அடர்ந்த மரங்களுடன் காணப்படும் இந்த இடம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஊட்டியில் கேர்ன்ஹில் வனப்பகுதி நீலகிரி மாவட்ட வனத்துறையால் சூழல் சுற்றுலாவாக (Eco) செயல்பட்டு வருகிறது. இது சிறுத்தைப் புலி, கடமான், காட்டெருமை, மலபார் அணில், நீலகிரி லாங்கூர் குரங்கு போன்ற வனவிலங்குகளுக்கும், பல்வேறு பறவைகளுக்கும் வாழ்விடமாக உள்ளது.
உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களில் அரிய வகை பறவைகள் காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் செடிகள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. வனவிலங்குகளும், பறவைகளும் என இயற்கை சூழல் நிறைந்த இந்த கேர்ன்ஹில் வனப்பகுதி சூழல் சுற்றுலாவாக செயல்பட்டு வருகிறது.
சிறிய வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய இரண்டு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்த ஒரு குறுகிய சாலையில் சிறு தூரம் சென்றால் அடர்ந்த காட்டுக்குள் வனத்துறை செயல் விளக்க கட்டிடம் ஒன்று காணப்படுகிறது. அதற்கு அருகிலேயே டிக்கெட் கவுண்டர் உள்ளது. இப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு தோடர் பழங்குடி மக்களின் பாரம்பரிய வளைவுக் குடில் உள்ளது. இங்கு வனப்பகுதியின் மாதிரி, பாறைச் சரிவில் மாநில விலங்குகளான வரையாடு, சிறுத்தை, கருமந்தி போன்றவற்றின் உருவங்களும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
வனத்துறையால் நடத்தப்படும் தங்கும் விடுதிகளும் உள்ளன. இந்த வனத்திற்கு நடுவில் சுற்றுலாப்பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ள வசதியும் உள்ளது. வனப்பகுதிக்குள் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த மரங்களுக்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
நடைப்பயணமாக சென்று வனத்தின் நடுவில் உள்ள காட்சி கோபுரத்தில் இருந்து இயற்கை காட்சிகளை கண் குளிரக் காணலாம். இங்குள்ள ராட்சச மரங்களுக்கு நடுவே தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி நடந்து சென்று பார்ப்பது பரவசம் ஊட்டுவதாக உள்ளது. ஊட்டிக்கு அருகில் இப்படி ஒரு அருமையான இடம் இருப்பது அதிகம் யாருக்கும் தெரிவதில்லை.
இந்த கோடை விடுமுறைக்கு அழகான இந்த வனப்பகுதியை குடும்பத்துடன் சென்று பார்ப்போமா!