விசாகப்பட்டினத்தைச் சுற்றிப் பார்ப்போமா?

விசாகப்பட்டினம் ...
விசாகப்பட்டினம் ...

ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஒரு வித்தியாசமான சுற்றுலாத் தலமாகும். குறிஞ்சி மற்றும் நெய்தல் இவை இரண்டும் ஒருங்கே அமையப் பெற்ற அபூர்வமான இடம். பக்தி, அறிவியல், பொழுதுபோக்கு, மலைவாசஸ்தலம், பள்ளத்தாக்கு, கடற்கரை, இயற்கையான குகை என பலவகையான விஷயங்கள் ஒருங்கே அமைந்து நமக்கு மனமகிழ்வைத் தரும் ஒரு சுற்றுலாத்தலம் விசாகப்பட்டினம். நான்கு நாட்கள் விசாகப்பட்டினத்தில் தங்கி உங்கள் விடுமுறை நாட்களை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளலாம். சென்னையிலிருந்து ரயிலில் சுமார் பதிமூன்று மணி நேரப்பயணத்தில் நீங்கள் விசாகப்பட்டிணத்தை அடையலாம். ரயில் நிலையத்திற்கு அருகில் ஆயிரத்து ஐநூறு ரூபாயில் நல்ல தரமான விடுதிகள் இங்கே கிடைக்கின்றன.

விசாகப்பட்டினத்தில் கண்டு மகிழ வேண்டிய முக்கியமான சுற்றுலாத் தலங்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. ஐ.என்.எஸ். கர்சுரா (INS Kurusura Submarine) நீர்மூழ்கிக் கப்பல் மியூசியம்

நீர்மூழ்கிக் கப்பல் மியூசியம்
நீர்மூழ்கிக் கப்பல் மியூசியம்

விசாகப்பட்டினம் செல்லுபவர்கள் குழந்தைகளோடு சென்று பார்க்க வேண்டிய முக்கியமான இடம். இந்திய கப்பல் படையினரால் பயன்படுத்தப்பட்ட கர்சுரா எனும் நீர்மூழ்கிக் கப்பலை இராமகிருஷ்ணா கடற்கரையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

வெளியே இந்த நீர் மூழ்கிக் கப்பலைப் பற்றி அனைத்து தகவல்களையும் எழுதி வைத்துள்ளார்கள். பிரம்மாண்டமான இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பொதுமக்கள் சென்று பார்த்து அறிந்து கொள்ள நுழைவு வழி வெளியேறும் வழி என இரண்டு வழிகளை ஏற்படுத்தி உள்ளே அழைத்துச் சென்று கப்பலுக்குள் உள்ள அனைத்து அம்சங்களையும் பணியாளர்கள் மிகச்சிறப்பாக விளக்குகிறார்கள்.

செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் இரண்டு மணி முதல் எட்டரை மணிவரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை பத்து மணிமுதல் பனிரெண்டு முப்பது வரையும் மதியம் இரண்டு மணி முதல் இரவு எட்டரை மணி வரையும் இந்த நீர்மூழ்கிக் கப்பலைப் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. ஓவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை நாளாகும். இந்த நீர்மூழ்கிக் கப்பலைப் பார்வையிட நுழைவுக்கட்டணம் உண்டு.

2. இராமகிருஷ்ணா கடற்கரை

இராமகிருஷ்ணா கடற்கரை
இராமகிருஷ்ணா கடற்கரை

சுருக்கமாக ஆர்கே பீச் என்று அழைக்கப்படுகிறது. கர்சுரா மியூசியம் இந்த கடற்கரையில்தான் அமைந்துள்ளது. மிக நீண்ட அழகிய கடற்கரையினை ஒட்டி மிக நீண்ட சாலை அமைந்துள்ளது. குதிரைச்சவாரி இருக்கிறது. கடற்கரையில் குடும்பத்தோடு நடந்து மகிழலாம்.

3. கைலாசகிரி

கைலாசகிரி
கைலாசகிரி

விசாகப்பட்டின நகரத்தில் அமைந்த ஒரு சிறிய மலைப்பிரதேசம் கைலாசகிரி. இந்த மலைக்குச் செல்ல ரோப்கார்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரோப்காரில் பயணிப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. மலை மீது மிக பிரம்மாண்டமான சிவன் பார்வதி சிலைகளை நிர்மாணித்து இருக்கிறார்கள். மலையில் சிறுவர்களுக்கான ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. மலை முழுவதும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையை முற்றிலுமாக சுற்றிப்பார்க்க இரயில் போக்குவரத்தும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி கைலாசகிரியை முழுவதுமாக சுற்றி வந்து இரசிக்கலாம். குடும்பத்தோடு மதியம் இரண்டு மணிக்குச் சென்று குழந்தைகளை விளையாடவிட்டு நீங்களும் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். இந்த அமைப்பு மனதிற்கு இதம் தரும் விதத்தில் உள்ளது.

ரோப்காரில் பயணிப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இரண்டு நிமிட நேரம் மிகவும் த்ரில்லிங் அனுபவமாக இருக்கிறது. இரண்டே நிமிடப்பயணத்தில் மலைக்குச் சென்று விடலாம். ரோப்காரில் சென்று வர கட்டணம் உண்டு. ரோப்கார்கள் காலை பதினோரு மணிமுதல் இரவு எட்டு மணிவரையிலும் இயக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சமைத்து உண்பதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் 10 காய்கறிகள்!
விசாகப்பட்டினம் ...

4. சிம்மாசலம்

சிம்மாசலம்
சிம்மாசலம்

விசாகப்பட்டினத்திலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வைணவ திருத்தலம் சிம்மாசலம். பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த திருக்கோயில் எண்ணூறு அடி உயர மலையின் மீது அமைந்துள்ளது. ஆலய கோபுரம் ஒரியா பாணியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவர் வராஹநரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். திருமால் இத்திருத்தலத்தில் வராஹ மூர்த்தியாகவும் நரசிம்மராகவும் இரண்டு அவதார நிலைகளில் எழுந்தருளியுள்ளார். இந்த கோவில் மிகுந்த கலைநயத்துடன் விளங்குவது காணக்கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது. காலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை இடைவிடாமல் இறைவனை தரிசித்து மகிழலாம். கோயிலுக்குச் சொந்தமான தங்கும் அறைகள் உள்ளன. விசாகப்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிம்மாசலத்திற்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

5. அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு
அரக்கு பள்ளத்தாக்கு

நாம் ஏராளமான மலைவாசத் தலங்களுக்குச் சென்றிருக்கிறோம். ஆனால் அற்புதமான ஒரு பள்ளத்தாக்கைப் பார்க்க இங்கே செல்லலாம். விசாகப்பட்டினத்திலிருந்து சரியாக 112 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. விசாகப்பட்டினத்திலிருந்து காலை ஆறரை மணி அளவில் ஒரு ரயில் இப்பகுதி வழியாகச் செல்லுகிறது. மாலை அதே ரயிலில் மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு இரவு ஒன்பது மணி அளவில் திரும்பலாம். வழியில் ஏராளமான மலைகளைக் குடைந்து ரயில் பாதைகளை அமைத்துள்ளார்கள். இவை டன்னல்கள் என்று அழைக்கப்படுகின்றன. சுமார் 25 டன்னல்களைக் கடந்து ரயில் செல்லுகிறது. அரக்கு பள்ளத்தாக்கில் காபி தோட்டங்கள் காணப்படுகின்றன. பல இடங்களில் நல்ல தரமான காபித்தூள் கிடைக்கிறது. ராஜ்மா, பட்டை, கேழ்வரகு மாவு போன்றவை நிறைய கிடைக்கின்றன. ஷாப்பிங் செய்ய ஒரு பெரிய கடையும் இருக்கிறது. வழியில் திரைப்படங்கள் எடுக்கப்படும் ஒரு ஷீட்டிங் ஸ்பாட் அமைந்துள்ளது. ஒரு வியூ பாயிண்ட் மற்றும் சில நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. அரக்கு பள்ளத்தாக்கைக் கண்டு திரும்பும்போது வழியில் நீங்கள் போரா குகையினைக் கண்டு வியக்கலாம்.

6. போரா குகை

போரா குகை
போரா குகை

விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வழியில் இந்த உலகப்புகழ் பெற்ற போரா குகை அமைந்துள்ளது. வில்லயம்கிங் எனும் பிரிட்டிஷ் புவியியல் வல்லுநர் கி.பி.1807 ஆம் ஆண்டில் இந்த போரா குகையினைக் கண்டுபிடித்தார். ஓரிய மொழியில் போரா என்றால் குகை என்று பொருள். இயற்கையாக உருவாகியிருக்கும் இந்த பிரம்மாண்டமான குகை சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த குகையின் மொத்த நீளம் சுமார் இருநூறு மீட்டர்களாகும். குகையின் மேல் பகுதியில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகள் இந்த குகைக்குள் சென்று அனுபவித்து மகிழ பாதைகளை அமைத்துள்ளார்கள்.

குடும்பத்தோடு விசாகப்பட்டினத்திற்குச் செல்லுங்கள். மகிழ்ந்து வியப்போடு வீடு திரும்புங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com