இந்தியாவின் பேய் நகரங்களுக்கு செல்வோமா?

Ghost cities
Ghost cities
Published on

அமானுஷ்யம் மற்றும் த்ரில்லான அனுபவங்களை பலர் மிகவும் விரும்புவார்கள். அவர்களுக்கான கட்டுரைதான் இது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ தேசத்திற்கு வந்துவிட்டோம் என்று கதாநாயகன் மற்றும் நாயகிகள் சொல்லும் இடத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த இடத்தைப் பார்த்தோமானால், அமானுஷ்ய இடம்போல் இருக்கும். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதேபோன்ற இடங்களை நேரில் காண விருப்பம் கொள்பவர்கள், இந்தியாவில் இந்த இடங்களுக்கெல்லாம் கட்டாயம் செல்லலாம்.

1. குல்தாரா, ராஜஸ்தான்:

ஜெய்சால்மர் நகரத்தின் அருகில் இருக்கும் இந்த கிராமம், ஒருகாலத்தில் மிகவும் மகிழ்ச்சியான கிராமமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த கிராமம், மக்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. அதற்கு ஒரு கதையும் உள்ளது. அதாவது அந்த கிராமத்திற்கு வந்த ராஜா ஒருவன், கிராமவாசி ஒருவரின் மகளது அழகில் மயங்கி திருமணம் செய்ய விரும்பியிருக்கிறான். இது தொடர்பாக கிராம மக்கள் முடிவு செய்வதற்கு ஒரு இரவு அவகாசம் கொடுத்திருக்கிறான். அந்த இரவில் அந்த கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். போகும்போது அந்த ராஜா மீது சாபமும் இட்டனர். அதன்பின்னர் மக்கள் வாழவே முடியாத இடமாக மாறி பேய் நகரமாக மாறியிருக்கிறது அந்த நகரம்.

2. மண்டு, மத்தியபிரதேசம்:

தார் மாவட்டத்தின் மால்வா பகுதியில் உள்ள இந்த நகரம் மலையின் மேல் உள்ளது. வரலாற்றின் பல கதைகளில் இந்த இடம் குறிப்பிடப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் அதிகம் வருகின்றனர். அந்த கதைகளில் பிரபலமானது, ராணி ரூப்மதிக்கும் சுல்தான் பாஸ் பகதூருக்கும் இருந்த காதலாகும். பல ஜெயின் கோவில்கள், மசூதிகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்கள் இந்த நகரில் உள்ளன. இந்நகரம் ஒரு மலையின் மீது உள்ளது. மக்கள் அதிகம் செல்லும் பேய் நகரங்களில் இதுவும் ஒன்று.

3. ஃபதேபூர் சிக்ரி, உத்தரபிரதேசம்:

இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் 1569ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலும் 1571 முதல் 1585 வரை முகலாயப் பேரரசின் தலைநகராகவும் ஃபதேபூர் சிக்ரி விளங்கியது. இங்கு வாழ்வதற்கு போதுமான தண்ணீர் இல்லை என்பதால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர்.

மக்கள் வெளியேறிய சிறிது காலத்திலேயே ஃபதேபூர் சிக்ரி ஒரு பேய் நகரமாக மாறியது. பல பேய்க்கதைகளுக்கு இந்நகரம் பிரபலமானது. இன்றும் நகரில் பிரம்மாண்டமான நுழைவாயில்கள் மற்றும் மொகலாய கட்டிடக்கலைக்குச் சான்றாக, பல கட்டிடங்கள் இங்கே உள்ளன.

இதையும் படியுங்கள்:
Allure Of The Seas - உல்லாச கடல் உலா போவோமா?
Ghost cities

4. ராஸ் தீவு, அந்தமான் நிக்கோபர் திவு:

முன்னோர்காலம் அழகான தீவாக இருந்த இந்த நகரம், தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இத்தீவு முற்றிலும் அழிந்து போனது. அதன் பின்னர் இதுவும் ஒரு பேய் நகரமாக மாறியது. ராஸ் தீவு 2018 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாடு இத்தீவைக் கைப்பற்ற முயன்றது. அதன் பிறகு ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம் காரணமாக தீவு சிதைந்து ஒரு பேய் நகரமாக மாறியது.

பொதுவாக வெகுகாலமாக மக்கள் இல்லாத இடங்கள், அமானுஷ்யம் நிறைந்த இடங்களாகவே மாறும். அப்படித்தான் இந்த இடங்களும் பேய் நகரங்களாக மாறின. இந்த இடங்களுக்கு போனால், கட்டாயம் நீங்கள் புதுவிதமான அனுபவத்தை பெறலாம்.

ஏன், இவை பசுபதி வாழும் கந்தர்வ கோட்டை போலக்கூட இருக்கலாம் அல்லவா???

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com