

இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய கோவில்களை தரிசிக்க சென்றோம். சீரடி சென்று சாய்பாபா தரிசனமும், அவர் கால் பதிந்த எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஆரத்தி தரிசனமும் கிடைத்ததும். ரூமிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மதிய உணவை சாப்பிட்டோம். பிறகு சீரடியில் ஷாப்பிங் செய்துவிட்டு அனைவரும் (40 பேர் அடங்கிய குழு) தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி சனி சிங்கனாப்பூர் கோவிலை தரிசித்தோம்.
கூட்டமான கூட்டம் அவ்வளவு கூட்டம். நாங்கள் சென்றது சனிக்கிழமை வேறா. எக்கச்சக்க கூட்டம் சனி பகவானுக்கு டின்டின்னாக நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்வதும், மாலை சாற்றுவதுமாக இருந்தார்கள்.
சனி சிங்கனாப்பூர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத் நகர் மாவட்டத்தில் சீரடி இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோவில் இக்கோவில். இங்கு சனி பகவான் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இங்குள்ள சிறப்பு என்னவென்றால் வீடுகளுக்கு கதவுகளோ பூட்டோ கிடையாது. நிலை கதவுகள் மட்டுமே உள்ளன. காரணம் இந்த ஊரில் திருட்டு பயம் என்பதே கிடையாதாம். சிவன் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளுக்கு முன்பு சனி பகவான் ஐந்தரை அடி உயர கருங்கல்லில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார்.
கருங்கல்லில் ஈசனின் சூலாயுதமும், நந்தியும் காணப்படுகிறது. தினமும் ஏகப்பட்ட பக்தர்கள் இங்கு வந்து சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்கின்றனர். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சனி பகவானை வழிபட இங்கு வரும் பக்தர்கள் நல்லெண்ணெய், பூ மற்றும் கருப்பு உளுந்து படைத்து வழிபாடு செய்கின்றனர்.
கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக சனி பகவான் வெட்ட வெளியில்தான் காட்சி தருகிறார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருமழை காரணமாக பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வெள்ளத்தில் மிதந்து வந்த கல் சிங்கனாபூரில் கரை ஒதுங்கியது. இது எந்த மாதிரியான பொருள் என்று அறியாத மக்கள் அதை ஒரு குச்சியால் குத்த அதிலிருந்து ரத்தம் வருவதைக் கண்டு வியப்பும் பயமும் அடைந்தனர்.
அன்றிரவு ஊர்த்தலைவரின் கனவில் சனி பகவான் காட்சி தந்ததாகவும் அந்த ஊரில் குடியிருக்க போவதாகவும் வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை அங்கே வைத்து வழிபடும்படியும் கூறியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் தன்னை வெட்ட வெளியில் வைக்கும் படியும் கூறியதால் இக்கோவிலில் மேற்கூரையோ கட்டிடமோ எதுவும் கிடையாது. 5 1/2 அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல் ரூபமாக காட்சி தருகிறார்.
காலாராம் மந்திர்:
நாசிக் மாவட்டத்தில் உள்ள காலா ராம் கோவில் ராமருக்கான கோவிலாகும். ராமரின் சிலை இங்கு கருப்பு நிறத்தில் காணப்படும். கருவறையில் ராமருடன் சீதை மற்றும் லட்சுமணர் நின்ற கோலத்தில் உள்ளனர். கருங்கல்லால் ஆன இந்த சிலைகள் சுமார் 2 அடி உயரம் உள்ளவை. 1792 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவில் இது. கோதாவரி நதியில் கருப்பு நிறத்தில் ராமரின் சிலை இருப்பதாக சர்தார் ஒதேகர் கனவு கண்டதாக கூறப்படுகிறது.
ஒதேகர் சிலைகளை ஆற்றில் இருந்து எடுத்து கோவிலை கட்டியதாகவும், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு ராம்குண்ட் என்றும் பெயர். பிரதான நுழைவாயிலில் கருப்பு நிறத்தில் அனுமன் சிலை உள்ளது. இங்கு தத்தாத்ரேயரின் கால் தடங்கள் ஒரு கல்லில் பதிக்கப்பட்ட மிகப் பழமையான மரமும் உள்ளது.
ராமரின் பிரதான கோவிலில் 14 படிகள் உள்ளன. இது ராமரின் வனவாசத்தின் 14 ஆண்டுகளை குறிப்பதாக கூறப்படுகிறது. கருங்கற்களை வைத்து கட்டப்பட்ட அற்புதமான கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பை கொண்ட கோவில் இது.
இக்கோவிலின் கட்டிடக்கலை நாகரா மற்றும் ஹேமத்பந்தி பாணிகளின் கலவையாகும். இங்கு சிவன் மற்றும் விஷ்ணுவுக்கும் சன்னதிகள் உள்ளன. அழகான பசுமை நிறைந்த தோட்டமும், அமைதியான சூழலும் நம்மை வெகுவாக கவர்கிறது. இங்கு ஸ்ரீ ராம நவமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.