எரிக்கல் விழுந்து உருவான அதிசய ஏரி- சென்று பார்ப்போமா?

லோனார் ஏரி
லோனார் ஏரி

ந்தியா ஒரு இயற்கை வளம் மிக்க அழகிய நாடாகும். இது தன்னுள் எண்ணற்ற அதிசயத்தையும், ரகசியத்தையும் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக காட்சி தந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இயற்கையாக உருவாகியிருக்கும் அதிசயங்களை பற்றி அறியும்போது வியப்பாகவேயுள்ளது.

இந்தியாவில் தேசிய புவிசார் பாரம்பரிய தளங்களுள் ஒன்றான லோனார் ஏரி ஒரு மிகப் பெரிய இயற்கையாக உருவான அதிசய ஏரியாகும். இந்த லோனார் ஏரி எப்படி உருவானது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள பல ஆயிரம் வருடம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சரியாக 52,000 வருடங்களுக்கு முன்பு, 2 மில்லியன் டன் கொண்ட எரிக்கல் 90,000 kmph வேகத்தில் பூமியின் மீது வந்து மோதியது. அது மோதிய இடம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலமாகும்.  இங்கே வந்து விழுந்து உலகிலேயே மூன்றாவது பெரிய உப்புநீர் ஏரியை உருவாக்கியது. ஒவ்வொரு வருடத்திற்கும் லட்சக்கணக்கில் எரிக்கற்கள் பூமியை தாக்கினாலும், இப்படியெல்லாம் எப்போதாவது ஒருமுறையே நடக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மும்பையிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த ஏரி. இவ்விடம் நிறைய செடிக்கொடி தாவரங்களுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது.

இந்த ஏரியை பற்றி நம்முடைய புராணங்களான பத்மபுராணம், கந்தபுராணம் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. 1600ல் வெளியான அய்னி அக்பரியிலும் (Ain-i-Akbari) குறிப்பிடப்பட்டுள்ளது.

லோனாசுரன் என்னும் அரக்கன் அங்கிருந்த மக்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தான். அதனால் விஷ்ணு பகவான் அவனை பாதாளத்திற்கு தூக்கி வீசி எறிந்தபோது ஏற்பட்டதே இந்த ஏரி என்று கூறுகிறார்கள். விஞ்ஞானிகள், வானியலாளர், புவியியலாளர் ஆகியோரின் ஆர்வத்தை இந்த ஏரி தூண்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சத்து மிக்க தர்பூசணி விதைகள்: பயன்கள் மற்றும் உண்ணும் முறைகள்!
லோனார் ஏரி

பிரிட்டிஷ் ஆபிஸர் அலெக்ஸேண்டர் 1823ல் இந்த ஏரியை கண்டுப்பிடித்தார். எனினும் லோனார் ஏரியை சுற்றி பல மர்மங்கள் இருக்கிறது. இந்த ஏரி உப்பு மற்றும் காரத்தன்மை இரண்டையும் உடையது என்று சொல்லப்படுகிறது. அந்த இரண்டு தன்மையிலும் வாழும் உயிரினங்களும் இதில் வாழ்வது இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. நாசாவும், இந்திய புவியியல் ஆய்வு மையமும் சேர்ந்து ஆய்வுகள் நடத்தியது.

இந்த ஏரியின் அருகில் திசைக்காட்டி வேலை செய்வதில்லை அல்லது திசைக்காட்டியில் கணிசமான மாறுபாடுகள் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

நாசாவின் கூற்றின்படி, லோனார் ஏரியில் உள்ள பள்ளம் நிலவில் இருக்கும் பள்ளம் போன்று இருப்பதாக கூறுகிறார்கள். இதில் இருக்கும் பேக்டீரியாக்கள், செவ்வாய் கிரகத்தில் இருப்பது போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

பிங்க் நிறம்...
பிங்க் நிறம்...

இந்த லோனார் ஏரி ஒரே இரவில் பிங்க் நிறமாக மாறி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 2020ல் இந்த ஏரியின் நீர் பிங்க் நிறமாக மாறி எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும். இந்திய அரசாங்கமே இதை பற்றி தெரிந்து கொள்ள விஞ்ஞானிகளை இந்த ஏரிக்கு அனுப்பியது. Nasa earth observatory இந்த ஏரியை புகைப்படம் எடுத்தது. எனினும் அவர்களுக்கும் இந்த ஏரியின் நிறம் மாறியதற்கான காரணம் தெரியவில்லை. சிலர் இந்த ஏரியில் இருந்த ஆல்கேவால் (algae) தான் பிங்க் நிறமாக மாறியது என்று கூறுகிறார்கள். விஞ்ஞானிகள் சிலர் அதிக உப்புத்தன்மை இருப்பதால் தான் நிறம் மாறியதாக கூறுகிறார்கள். இன்னும் சிலர் இந்த ஏரியில் Halobacteriaceae இருப்பதாகவும், அது அதிக உப்புத்தன்மையில் இருக்க கூடிய ஒருவகை பாக்டீரியாவாகும். அதற்கு பிங்க் நிறத்தில் மாறும் தன்மையுண்டு என்றும் கூறுகிறார்கள்.

இந்த ஏரி சாகச பயணம் செய்வதற்கு ஏற்ற இடமாகும். இங்கு குதிரை ஏற்றம், படகு சவாரி போன்றவற்றை செய்து மகிழலாம். இங்கே வருவதற்கான சரியான மாதம் நவம்பர் முதல் ஜனவரியாகும்.

எனவே இந்த அதிசய ஏரியை வாழ்வில் ஒருமுறையாவது வந்து கண்டு கழித்து விட்டு செல்வது மிகவும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com