
ரொம்ப நாட்களாக சீரடி சாய்பாபாவை தரிசிக்கும் ஆவல் இருந்தது. அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று எண்ணவில்லை. ஷார்ட்டா, ஸ்வீட்டா ரெண்டே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நிறைய இடங்களை பார்த்து மகிழ்ந்து வந்தோம். வெள்ளிக்கிழமை காலை 5.45 க்கு புறப்பட வேண்டிய விமானம் 20 நிமிடங்கள் தாமதமாக 6.05 க்கு கிளம்பியது.
இரண்டே மணி நேரப் பயணத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றடைந்தோம். காலை டிபனை முடித்துக் கொண்டு சித்தி விநாயகர் கோவில், மகாலட்சுமி கோவில், மயூரேஷ்வர்,கேட்வே ஆப் இந்தியா, சீரடி சாய்பாபா கோவில், அதனைச் சுற்றி அமைந்துள்ள பாபா சம்பந்தப்பட்ட சாவடி, துவாரகா மாயி, குருஸ்தான், லட்சுமிபாய் ஷிண்டேவின் வீடு, லெண்டி பாக், 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரயம்பகேஷ்வரர் கோவில், நாசிக், பஞ்சவடி ஆஞ்சநேயர், காலாராம் கோவில், சீதா குகை, சனி சிங்கனாப்பூர் என இரண்டே நாட்களில் ஏகப்பட்ட இடங்களை தரிசனம் செய்து ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 3.05 மணி விமானத்தில் ஏறி இரண்டே மணி நேரத்தில் சென்னை ஏர்போர்ட் வந்தாச்சு.
ரொம்ப டைட் ஷெட்யூல்தான். ஆனால் எல்லா இடங்களையும் திவ்யமாக தரிசித்தோம். சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் மும்பையில் இருந்து ஏசி பஸ்ஸில் 40 பேரை ஏற்றிக்கொண்டு பயணம் தொடர்ந்தது.
கொஞ்சம் டிராவல் டைம் அதிகம்தான். பஸ்ஸில் பல மணி நேரங்கள் பயணிப்பது சோர்வைத் தந்தது. மற்றபடி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல தரிசனம் அதிலும் குறிப்பாக சாய்பாபா தரிசனம், காகடா ஆர்த்தி வாழ்நாளில் மறக்க முடியாததாக இருந்தது. எங்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வாங்கி இருந்ததால் ரொம்பவும் சௌகரியமாக இருந்தது. மொபைல் போன் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால் ரூமிலேயே வைத்துவிட்டு பொடி நடையாகக் கிளம்பிச் சென்று சாய்பாபாவை கண் குளிர தரிசித்தோம். ஆரத்தியும், பஜனைகளும் நம்மை அமைதியான சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றன.
சீரடி சாய்பாபா கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ளது. ஸ்ரீ சாய் சத்சரிதத்தின்படி இவர் தத்தாத்ரேயரின் அவதாரம் என்று கூறப்படுகிறது. மும்பையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் சீரடி அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த சீரடி பாபாவின் ஆலயம் அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோவில் காலை நாலு மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கிறது. ஆரத்தி பார்ப்பது மிகவும் விசேஷம்.
சீரடி சாய்பாபா (1838 -1918):
இவர் ஒரு சிறந்த ஆன்மீக குரு மற்றும் பக்கிரி ஆவார். இவர் 'தன்னை உணர்ந்து கொள்வதன்' முக்கியத்துவத்தை போதித்தவர். அழிந்து போகும் பொருட்களின் மீதான அன்பை விமர்சித்து இவருடைய போதனைகள் அன்பு, பிறருக்கு உதவுதல், தொண்டு, மனநிறைவு, குரு பக்தி ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. பாபா ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் ஒரு பழைய பாழடைந்த மசூதியில் இருந்து வரலானார்.
அங்கு அவர் ஒரு புனித நெருப்பை (துனி) பராமரித்து, வந்து செல்லும் பக்தர்களுக்கு நெருப்பில் இருந்து சாம்பலை (உதி) கொடுத்து அனுப்பினார். இது பல நோய்களையும் குணப்படுத்தும் சக்திகளை கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. இவர் வாழ்ந்த மசூதிக்கு 'துவாரகா மாயி' என்ற இந்து பெயரை கொடுத்தார்.
சாய்பாபா கோவில் (சமாதி மந்திர்):
அக்டோபர் 1918 விஜயதசமி அன்று ஜீவசமாதி அடைந்த பாபாவின் பூதவுடல் சீரடியில் உள்ள புட்டி வாடாவில் அடக்கம் செய்யப்பட்டது. இதுவே பின்னர் பக்தர்களின் வழிபாட்டுத் தலமாக மாறியது. ஸ்ரீ சமாதி மந்திர் என்று அழைக்கப்படும் இந்த இடத்திற்கு ஏராளமான பக்தர்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து வணங்கி செல்கின்றனர். இதனை புனேவைச் சேர்ந்த கோபால்ராவ் புட்டி என்ற பக்தர் கட்டியதால் முதலில் தக்டி வாடா என்றும் புட்டி வாடா என்றும் அழைக்கப்பட்டது. 1918 பாபா நிர்வாணம் அடைந்த பிறகு அவருடைய சமாதி வெள்ளை பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டது.
அதன் அருகிலேயே பாபாவின் பளிங்கு உருவச்சிலை உள்ளது. இந்த சிலை மும்பையைச் சேர்ந்த சிற்பி பாலாஜி வசந்த் தலிம் என்பவரால் செதுக்கப்பட்டு 1954 அக்டோபர் 7ஆம் தேதி நிறுவப்பட்டது. சிலைக்கு அருகில் எப்பொழுதும் ஒரு கிளாஸ் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. இங்கு காகட் ஆரத்தி மிகவும் பிரசித்தம். நாங்கள் மதிய ஆரத்திக்கு சென்று தரிசித்தோம்.
நாள் முழுவதும் வரவேற்பு கவுண்டர்களில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சமாதி மந்திரிக்கு எதிரே உள்ள கவுண்டரில் சாம்பல் உதி வழங்கப்படுகிறது. இங்கு முக்கிய விழாக்களாக குரு பூர்ணிமாவும், தசரா மற்றும் ராம நவமியும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
லட்சுமிபாய் ஷிண்டேவின் வீடு:
சாய்பாபாவின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த லட்சுமிபாய் ஒவ்வொரு நாளும் மசூதியில் பணியாற்றியுள்ளார். பாபா இறப்பதற்கு முன்பு லட்சுமி பாய்க்கு ஒன்பது ரூபாய் நாணயங்களை கொடுத்துள்ளார். சிலர் இதை 9 வகையான பக்தியாகவும், மற்றவர்கள் இதை ஒரு நல்ல சீடனின் ஒன்பது குணங்களாகவும் கூறுகிறார்கள். இந்த வீடு பிரதான கோவிலுக்கும் துவாரகா மயிக்கும் அருகில் உள்ளது. 9 நாணயங்களைக் கொண்ட ஒரு கண்ணாடி மேல் பெட்டி அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவர் அதனை அரிய பொக்கிஷமாக பாதுகாத்து வந்துள்ளார்.